அரசியல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: காணாமல் போன அம்மா பக்தி!

மிஸ்டர் கழுகு: காணாமல் போன அம்மா பக்தி!
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு: காணாமல் போன அம்மா பக்தி!

மிஸ்டர் கழுகு: காணாமல் போன அம்மா பக்தி!

மிஸ்டர் கழுகு: காணாமல் போன அம்மா பக்தி!

ட்டசபையிலிருந்து நேராக நம் அலுவலகம் வந்தார் கழுகார். கையில் ஃப்ரெஷ்ஷாக பட்ஜெட் இருந்தது. தமிழக பட்ஜெட் பற்றி ஏதோ சொல்லவருகிறார் என்பதைப் புரிந்துகொண்டு காத்திருந்தோம். பட்ஜெட்டைப் புரட்டியபடி, ‘‘அ.தி.மு.க-வில் அம்மா பக்தி கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போவதைக் கவனித்தீரா?’’ என்றார். ‘என்ன’ என்று விழிகளால் கேட்டோம்.  

‘‘அ.தி.மு.க-வுக்கு ஜெயலலிதா தலைமை தாங்கியதும், அங்கு அமலான முக்கிய ‘ஃபார்முலா’ அம்மா-சின்னம்மா பயம். அதை மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களும், கட்சிக்காரர்களும் அம்மா பக்தி என்பதாக வெளிப்படுத்திச் சமாளித்துக்கொண்டிருந்தனர். ஜெயலலிதா இறந்தபிறகும்கூட, அந்தப் பயமும் பக்தியும் நீடித்தன. ஜெயலலிதாவின் பதவிக்குச் சசிகலா வந்தபோதும், அது தொடர்ந்தது. சசிகலா சிறைக்குப் போனபிறகு, எல்லாம் மலையேறிவிட்டன.’’

‘‘சின்னம்மா பக்திதானே மறைந்தது... அம்மா பக்தி தொடர்ந்ததே?”

‘‘இல்லை என்றுதான் உண்மை விசுவாசிகள் சொல்கிறார்கள். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களைவிட, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் படங்களும் கட்-அவுட்களும் பிரமாண்டமாக இடம்பெறத் தொடங்கின. ஜெயலலிதா சமாதியில் மரியாதை செலுத்தும் வழக்கத்தைக்கூட அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொண்டனர். இப்போது முற்றிலுமாக அந்தப் பழக்கத்தை விட்டுவிட்டனர் என்றே நினைக்கத் தோன்றுகிறது. இனிமேல், ஜெயலலிதா பிறந்தநாள் விழா, நினைவுநாள் அனுசரிப்புகளில் சம்பிரதாயமாக ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்துவார்கள்.’’

‘‘எதை வைத்துச் சொல்கிறீர்?”

‘‘இன்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய வந்த துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பி.எஸ்., ஜெயலலிதா சமாதி பக்கமே திரும்பவில்லை. கிரீன்வேஸ் சாலை வீட்டிலிருந்து கிளம்பி வந்த ஓ.பி.எஸ் கார், ஓமந்தூரார் அரசினர் விடுதிக்குள் சென்றது. அவர், அங்கிருக்கும் கற்பக விநாயகர் கோயிலில் வழிபாடு செய்துவிட்டுக் கோட்டைக்குப் போய்விட்டார். கடந்த ஆண்டு பட்ஜெட்டைத் தாக்கல் செய்தபோது, ஜெயக்குமார் நிதி அமைச்சராக இருந்தார். அவர் பட்ஜெட்டை ஜெயலலிதாவின் சமாதியில் வைத்து வணங்கிவிட்டுச் சென்றார். அரசியல் சூழல் அன்றைக்கு அப்படி இருந்தது. ஆனால், ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து தர்மயுத்தம் தொடங்கிய பன்னீரே, ஜெயலலிதா சமாதி பக்கம் திரும்பவில்லை. இது உண்மை விசுவாசிகளை மனவருத்தம் அடைய வைத்துள்ளது.’’

மிஸ்டர் கழுகு: காணாமல் போன அம்மா பக்தி!

‘‘புதிய எஜமானர்கள் கிடைத்தபிறகு ஜெயலலிதா எதற்கு என்று நினைத்தார்களா? அல்லது சென்டிமென்ட் தடுத்துவிட்டதா?’’

‘‘இரண்டும் இருக்கலாம். நல்ல நேரம் பார்த்துச் சட்டசபைக்குள் முதலில் சென்றது ஓ.பி.எஸ்-தான். அவருக்குப் பிறகுதான், முதலமைச்சர் வந்தார். மூன்றாவதாக, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவரும் தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் கறுப்புச் சட்டையில் இருந்தனர். காவிரி மேலாண்மை வாரியம் பற்றிக் கோரிக்கை எழுப்பி அவர்கள் வெளிநடப்பு செய்துவிட்டனர். அவர்களைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியும் வெளிநடப்பு செய்தது. அதனால், எந்தவிதத் தங்கு தடையுமின்றி பட்ஜெட்டை வாசிக்க ஆரம்பித்தார் ஓ.பி.எஸ். அவர் குரலில் வழக்கமான சுரத்து இல்லை. மெதுவாக பட்ஜெட்டை வாசித்துக்கொண்டிருந்தார். அவ்வப்போது அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பழக்கதோஷத்தில் மேஜையைத் தட்டிக்கொண்டிருந்தனர்.’’

மிஸ்டர் கழுகு: காணாமல் போன அம்மா பக்தி!

‘‘தினகரன் ஆரம்பித்திருக்கும் அரசியல் இயக்கத்தை ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் அணி எப்படிப் பார்க்கிறது?’’

‘‘நாள்தோறும் தினகரனுக்குக் கூடும் கூட்டங்கள், அவரது சுற்றுப்பயணம், அவர் தரும் பேட்டிகள், அதற்கு மீடியாக்கள் தரும் முக்கியத்துவம் ஆகியவை ஆளும்கட்சிக்கு எரிச்சல் ஏற்படுத்தி வருகின்றன. தினகரன் குறித்து மிக அதிகமாகச் செய்திகள் வெளியிடும் மீடியாக்களுக்குச் செல்லமாகவும் கடுமையாகவும் நெருக்கடி கொடுக்க ஆளும்தரப்பு தவறவில்லை. மேலூரில் தினகரனுக்குக் கூட்டம் கூடிவிடக் கூடாது என்பதற்காகச் சில அசைன்மென்ட்கள் அமைச்சர்களுக்குத் தரப்பட்டன. ‘அங்கே போக வேண்டாம், நிறைய கவனிப்புகள் இருக்கும்’ என்று தென்மாவட்ட கட்சிக்காரர்கள், டெல்டா மாவட்டக் கட்சிக்காரர்கள் ஆசை வார்த்தை காட்டப்பட்டுள்ளனர். அவற்றையும்மீறி அதிகக் கூட்டம் கூடியது. அது, ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் அணியை அச்சத்தில் ஆழ்த்திவிட்டது. ‘ஆட்சியும் கட்சியும் அவர்களிடம் இருக்கட்டும், தொண்டர்கள் நம்மிடம் இருக்கட்டும்’ என்று தங்க தமிழ்ச்செல்வன் சொன்ன தகவலும் இவர்களுக்கு வந்து சேர்ந்துள்ளது. இதை எப்படிச் சமாளிப்பது என்று மூத்த அமைச்சர்களுடன் பேசியுள்ளார் எடப்பாடி.’’

‘‘என்ன செய்வார்கள்?’’

‘‘தினகரன் தனிக்கட்சி தொடங்கியதைச் சசிகலா குடும்பத்தில் மற்றவர்கள் விரும்ப வில்லை. அதனால், அவர்களை நம்வசம் இழுக்கலாம் என ஓர் அமைச்சர் சொல்ல, அதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன. ‘தினகரன் அ.தி.மு.க-வைக் கைப்பற்றியிருந்தால், அதில் தங்களின் பிடி எப்போதும் இருந்திருக்கும். இப்போது தனிக்கட்சி ஆரம்பித்துவிட்டதால், அது முழுக்க முழுக்க தினகரனின் சொத்தாகிவிட்டது. இதிலும் தங்களுக்கு எந்த ஆதிக்கமும் இல்லை. ஆக, அ.தி.மு.க-விலும் பிடி நழுவிவிட்டது; அ.ம.மு.க-விலும் பிடியே இல்லை’ என எரிச்சலில் இருக்கின்றன சசிகலா குடும்ப உறவுகள்.’’

மிஸ்டர் கழுகு: காணாமல் போன அம்மா பக்தி!

‘‘ரஜினி இமயமலையில் என்ன செய்கிறார்?’’

‘‘இது அவரின் வழக்கமான பயணம் தான். அரசியல் அறிவிப்புக்குப்பிறகு முதல் முறையாகச் செல்கிறார் என்பதுதான் விசேஷம். தமிழகத்தில் அவரைப்பற்றி மீடியாக்களில் வந்த செய்திகளை உடனுக்குடன் ஸ்கேன் செய்து அவருக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில், ‘முக்கியமான விஷயங்களில் ரஜினி கருத்து தெரிவிப்பதில்லை. நழுவிப்போய் விடுகிறார்’ என்று கமல் சொன்னதைக் கேட்டு டென்ஷன் ஆகிவிட்டாராம் ரஜினி. உடனே, மீடியாக்காரர்களைச் சந்தித்து, ‘நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாக ஆகலை’ என்று கமலுக்குப் பதில் கொடுத்தார். அதைத் தொடர்ந்து ரிஷிகேஷ் செல்லும் முன்பு நிர்வாகிகளுக்கு போன் செய்திருக்கிறார். ‘உறுப்பினர் சேர்க்கை படலத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வையுங்கள். இதுவரை 23 மாவட்டங்களில் நிர்வாகி களை நியமித்தது சரி. நான் திரும்பி வருவதற்குள் அனைத்து மாவட்டங் களிலும் நிர்வாகிகளை நியமிக்கவேண்டும். புது நிர்வாகிகள்மூலம் உத்வேகத்துடன் உறுப்பினர்கள் சேர்க்கையைப் பிறகு நடத்தலாம்’ என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.’’

‘‘ரஜினி, ரிஷிகேஷுக்கு ஏன் போனார்?’’

‘‘அவரின் குருநாதர் அங்கு இருக்கிறாராம். தனது கட்சியின் பெயர் மற்றும் கொடி டிசைன்களை ரஜினி கையில் எடுத்துப் போயிருக்கிறாராம். இவற்றைக் காட்டி குருநாதரிடம் ஆசிபெற்ற பின், வெளியுலகுக்கு அறிவிக்கப் போகிறாராம். முதல் கட்டமாக, மாவட்டங்களில் நியமிக்கப் பட்ட நிர்வாகிகளின் அடையாள அட்டைகள் மற்றும் பதவிச் சான்றிதழ்களில் இவற்றை அச்சிட்டுத்தருவது ரஜினியின் திட்டம். அதற்காக, ரஜினியின் பதிலை எதிர்பார்த்துச் சென்னையில் உள்ள தலைமை நிர்வாகிகள் காத்திருக்கிறார்கள்’’ என்ற கழுகார் பறந்தார்.

படங்கள்: கே.ஜெரோம்

மிஸ்டர் கழுகு: காணாமல் போன அம்மா பக்தி!

தமிழக போலீஸார் அகில இந்திய விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிக் கோப்பையுடன் திரும்பும்போது, முதல்வரின் துறை என்பதால் தடபுடலாக வரவேற்பு கொடுத்துப் பரிசுகளும் தருவார்கள். நாக்பூரில் சமீபத்தில் நடந்த அகில இந்திய விளையாட்டுப் போட்டிகளில் 23 மெடல்களை அள்ளிவந்தது தமிழகத் தீயணைப்புத் துறை டீம். இதுவும் முதல்வரின் துறைதான். ஆனால், இவர்களை யாரும் கண்டுகொள்ளவே யில்லையாம். இதனால், துறையின் தலைவர் மகேந்திரன் ஐ.பி.எஸ் அப்செட்டில் இருக்கிறார்.

மத்திய உளவுத்துறையில் டெல்லியில் இருந்தபடி, பாகிஸ்தானைக் கண்காணிக்கும் முக்கியப் பொறுப்பில் இருந்தவர் அனூப் ஜெய்ஸ்வால். தமிழக கேடர் ஐ.பி.எஸ் ஆபீஸர். தமிழக உளவுத்துறையிலும் பணியாற்றி யவர். பணியில் இருந்தபோதே அரசுப் பள்ளிகளுக்குப் போய் விளையாட்டுப் பொருள்களை வைத்து அறிவியல் சொல்லிக்கொடுத்தவர் இவர். இப்போது ஓய்வுபெற்று, அதை இன்னும் அதிகமாகத் தொடர்கிறார்.

23 வயதில் போலீஸ் பணியில் சேர்ந்த அர்ச்சனா ராமசுந்தரம் ஐ.பி.எஸ். கடந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெற்றார். அவரின் திறமையைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த மத்திய உள்துறை அமைச்சகம், அண்மையில் மூன்று பேர் கொண்ட கமிட்டியில் அவரை நியமித்துள்ளது. உள்துறையின் முக்கிய விவகாரங்கள், நவீனப்படுத்துதல் போன்றவற்றில் இந்தக் கமிட்டி எடுக்கும் முடிவைத்தான் அமைச்சகம் செயல்படுத்துமாம்.