அரசியல்
Published:Updated:

ரஜினியிடம் எம்.ஜி.ஆரைப் பார்க்கிறேன்!

ரஜினியிடம் எம்.ஜி.ஆரைப் பார்க்கிறேன்!
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினியிடம் எம்.ஜி.ஆரைப் பார்க்கிறேன்!

ஏ.சி.சண்முகம் தடாலடி

ன்னுடைய கல்லூரி யில் எம்.ஜி.ஆர் சிலையை அமைத்து, அதை நடிகர் ரஜினியை அழைத்துத்  திறந்தார் புதிய நீதிக்கட்சியின் தலைவரான ஏ.சி.சண்முகம். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“ரஜினியை வைத்து எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்தது ஏன்?”

“எம்.ஜி.ஆரின் குணங்களில், 90 சதவிகித குணங்களை ரஜினியிடம் பார்க்கிறேன். அடக்கம், பெருந்தன்மை, அன்பு என எம்.ஜி.ஆரைப்போல, ரஜினியிடமும் அந்தக் குணாதிசயங்களைக் காண்கிறேன். புகழ்பெற்ற தலைவரான எம்.ஜி.ஆரின் சிலையை, இன்னொரு புகழ்பெற்ற தலைவரான ரஜினியை வைத்துத் திறக்க வேண்டும் என்று விரும்பினேன். ரஜினியிடம் எம்.ஜி.ஆரைப் பார்க்கிறேன். அதனால், அவரை விழாவுக்கு அழைத்தேன்.”

“சிலைத் திறப்புக்கு ரஜினியிடம் தேதி கேட்டபோது என்ன சொன்னார்?”

“அவருக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கம் இருந்தது. கடந்த ஆண்டு, ஆரணியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலையைத் திறப்பதற்கு ரஜினியிடம் தேதி கேட்டபோது, ‘கபாலி’ ஷூட்டிங்கில் இருந்தார். அதனால், அவர் வரமுடியவில்லை. இப்போது சிலை திறக்க நேரம் கேட்டபோது, ‘இது கல்லூரி விழாதானே! அரசியல் மேடை இல்லைதானே’ என்று கேட்டுவிட்டுத்தான் விழாவுக்கு வர அவர் ஒப்புக்கொண்டார். ஆனால், சூழ்நிலை அவரை அரசியல் பேச வைத்துவிட்டது.”

ரஜினியிடம் எம்.ஜி.ஆரைப் பார்க்கிறேன்!

“உங்கள் கட்சியைக் கலைத்துவிட்டு, தனது கட்சியில் இணையுமாறு உங்களிடம் ரஜினி சொன்னதாகச் சொல்லப்படுகிறதே?”

“இல்லை. ‘உங்களுக்கு (ரஜினி) அரணாக, அரசியலில் பாதுகாப்புக் கவசமாக இருப்பேன்’ என்று சிலைத் திறப்பு விழாவிலேயே சொல்லிவிட்டேன். அவர் நாடாண்டாலும், வனவாசம் போனாலும் அவருக்கு நான் உறுதுணையாக இருப்பேன். அவர் கட்சியில் இணைவது குறித்து முடிவுசெய்யப்போவது ஆண்டவனும் சூழ்நிலையும்தான்.”

“ரஜினி, கமல் எனக் கலைத்துறையினர் அரசியலில் இறங்குவது ஆரோக்கிய மானதா?”

“அண்ணா காலம் முதல் இப்போது வரை, கலைத்துறையில் இருந்தவர்களே தமிழகத்தை ஆண்டுள்ளனர். கலைத்துறையையும், தமிழக அரசியலையும் பிரிக்க முடியாது. யார் நல்லாட்சி தந்தாலும் அதை வரவேற்க வேண்டியதுதான்.”

“ரஜினியின் அரசியல் என்ட்ரிக்குப் பின்னால் பி.ஜே.பி இருக்கிறது என்கிறார்களே?”

“நிச்சயமாக இல்லை. ரஜினி, சுயமாகச் செயல்படுகிறார். அவர் சொல்லும் ஆன்மிக அரசியல் வேறு. அதற்கான விளக்கத்தைத் தெளிவாகச் சொல்லிவிட்டார். அவருடைய அரசியல் பாதை புதியதாக இருக்கும். அதைப் பொறுத்திருந்து பாருங்கள், புரியும்.”

“நடிகர்களின் அரசியல் என்ட்ரி திராவிட அரசியலுக்கு முடிவாகிவிடும் என்று நினைக்கிறீர்களா?”

“கண்டிப்பாக இல்லை. கமல் தன் பேச்சில்கூட ‘பெரியார் பாணியைப்  பின்பற்றுவேன்’ என்கிறார். ரஜினியும் ‘எம்.ஜி.ஆர் ஆட்சி அமைப்பேன்’ என்கிறார்.  இருவரின் கட்சிகளும் திராவிட இயக்கத்தின் பரிணாமம்தானே.”

“ரஜினி ஆட்சியைப் பிடிப்பாரா?”

“என்னைப் பொறுத்தவரை, அவர் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.”

- அ.சையது அபுதாஹிர்
படம்: தி.குமரகுருபரன்