அரசியல்
Published:Updated:

“அமைச்சரே என் பாக்கெட்டுக்குள்...”

“அமைச்சரே என் பாக்கெட்டுக்குள்...”
பிரீமியம் ஸ்டோரி
News
“அமைச்சரே என் பாக்கெட்டுக்குள்...”

திண்டிவனத்தைத் திணறடிக்கும் ஷெரிப்

‘‘அறிவிக்கப்படாத அமைச்சராக திண்டிவனம் முன்னாள் நகரமன்றத் துணைத் தலைவர் முகமது ஷெரிப் வலம் வருகிறார். ‘அமைச்சர் சி.வி.சண்முகமே என் சட்டைப் பாக்கெட்டுக்குள்’ என்று சொல்லிக்கொண்டு இவர் செய்துவரும் அதிரடிகளால், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் தினகரன் அணிக்குத் தாவுவதற்குத் தயாராகிவிட்டனர்” என்று கொந்தளிக்கிறார்கள் திண்டிவனம் பகுதி அ.தி.மு.க-வினர்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

“அமைச்சரே என் பாக்கெட்டுக்குள்...”

“2008-ல் திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ-வாக சி.வி.சண்முகம் இருந்தபோது, ‘ஜெ’ பேரவை நகரப்பொறுப்பில் நியமிக்கப்பட்டவர் முகமது ஷெரிப். முதலில் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணனுக்கு நெருக்கமானார். அப்படியே அமைச்சரையும் நெருங்கியவர், அவர்களுக்கு ‘ஆல்-இன்-ஆல்’ ஆகிவிட்டார். மணல் கொள்ளை, திருட்டு டி.வி.டி போன்ற ‘தொழில்’களில் ஈடுபட்டார். இவருக்குச் சொந்தமான கடைகளில் பலமுறை ரெய்டு நடத்தப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. இவர்மீதும், இவர் குடும்பத்தினர் மீதும் வழக்குகள் உள்ளன. 2011 உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலராக வெற்றிபெற்று, நகர்மன்றத் துணைத் தலைவர் ஆகிவிட்டார். அப்போது முதல் கான்ட்ராக்ட்கள், அரசுப் பணிகள் என அனைத்தும் இவர் கைகாட்டுபவர்களுக்குத்தான். அமைச்சர் சி.வி.சண்முகம், ‘C.Ve.’ என இனிஷியல் போட்டுக்கொள்வதைப்போல, இவரும் ‘A.Ve.’ என தன் இனிஷியல் மாற்றிக்கொண்டார். 100 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துகளைக் குவித்துள்ள இவருக்குப் பல மணல் லாரிகள் ஓடுகின்றன.

இவரின் சட்டவிரோதத் தொழில்களால் கட்சிக்குக் கெட்ட பெயர் என அமைச்சரிடம் புகார் செய்தோம். அதனால், கடந்த நான்கு மாதங்களாக முகமது ஷெரிப்பை அமைச்சர் ஒதுக்கிவைத்திருந்தார். வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு எப்படியாவது திண்டிவனம் நகராட்சி சேர்மன் ஆகிவிட வேண்டும் என்று திட்டத்துடன், மீண்டும் அமைச்சரின் நம்பிக்கையைப் பெற்றுவிட அவர் நினைத்தார். அதற்காக, திண்டிவனத்தின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, பல லட்ச ரூபாய் செலவில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அமைச்சரால்கூட அந்தளவுக்கு செலவு செய்திருக்க முடியாது. எனவே, இதுகுறித்து வருமானவரித் துறைக்குப் புகார் அனுப்பியிருக்கிறோம். அந்த விழாவில் கலந்துகொள்ள அமைச்சருக்கு விருப்பமில்லை. ஆனாலும், தன் அண்ணன் ராதாகிருஷ்ணன் அழுத்தம் கொடுத்ததால் அமைச்சர் பங்கேற்றார். ஷெரிபின் அராஜகத்தால், கட்சி அழிந்து கொண்டிருக்கிறது” என்றனர் ஆதங்கத்துடன்.

“அமைச்சரே என் பாக்கெட்டுக்குள்...”

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து முகமது ஷெரிப்பிடம் விளக்கம் கேட்டோம். “அரசியல் காழ்ப்பு உணர்ச்சி காரணமாக, எனக்கு எதிராகச் சிலர் வதந்திகளைப் பரப்புகின்றனர். நீங்கள் சொல்லும் திருட்டு டி.வி.டி சமாசாரமெல்லாம் 10 வருடங்களுக்கு முன்பு நடந்தவை. இப்போது இருக்கிற பாதுகாப்புகளை மீறியெல்லாம் மணல் கொள்ளை நடப்பதற்குச் சாத்தியமில்லை. இவற்றுக்கெல்லாம் அமைச்சர் எதிரானவர். எனக்கு அரசியல் ஆசானே அமைச்சர் சி.வி.சண்முகம்தான். நாங்கள் ஒருவருக்கு ஒருவர் விலகி இருந்ததில்லை. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு முக்கிய நிர்வாகிகள் அனைவரையுமே அழைத்திருந்தோம்” என்றார்.

- ஜெ.முருகன், படங்கள்: சிலம்பரசன்