அரசியல்
Published:Updated:

தாமரைக்குத் தாவும் ராஜகண்ணப்பன்!

தாமரைக்குத் தாவும் ராஜகண்ணப்பன்!
பிரீமியம் ஸ்டோரி
News
தாமரைக்குத் தாவும் ராஜகண்ணப்பன்!

தாமரைக்குத் தாவும் ராஜகண்ணப்பன்!

‘‘பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அண்ணனை, கடைசியில் ஓ.பி.எஸ்-ஸும் கைவிட்டுவிட்டார். அதனால், பி.ஜே.பி-க்குப் போக அண்ணன் முடிவெடுத்துவிட்டார்’’ என்கிறார்கள் ராஜகண்ணப்பனின் ஆதரவாளர்கள்.

அதை உறுதிப்படுத்துவதாகவே, சமீபத்தில் யாதவ சமூக அமைப்பு மதுரையில் நடத்திய விழாவில் ராஜகண்ணப்பன் பேசிய பேச்சு. ‘‘பிரதமர் மோடி கடந்த ஆண்டு ராமேஸ்வரம் வந்தபோது, அவரைச் சந்தித்து 20 நிமிடங்கள் பேசினேன். ஆளுமை மிகுந்த பிரதமரை நாம் பெற்றுள்ளோம். இவரைப்போல் வேறு யாரும் வர முடியாது. தமிழக அரசியல் இனி எப்படிச் செல்லும் என்று சொல்ல முடியாது. அரசியலில் மிகப் பெரிய பங்களிப்பை நம் சமுதாயம் செய்துள்ளது. ஆனால், அரசியல் அங்கீகாரம் பெறாவிட்டால் நாம் யாருக்கும் உதவ முடியாது. அதனால்தான் சொல்கிறேன்... அரசியல் அங்கீகாரம் பெற முயற்சி செய்ய வேண்டும்’’ என்று சூசகமாகச் சொன்னார் ராஜகண்ணப்பன்.

தாமரைக்குத் தாவும் ராஜகண்ணப்பன்!

இந்த விழாவில் மதுரை அ.தி.மு.க எம்.பி-யான கோபாலகிருஷ்ணன், முதுகுளத்தூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ பாண்டி, இந்தியன் வங்கி முன்னாள் சேர்மன் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில், அழகு முத்துக்கோன் விருதை பி.ஜே.பி மாநிலச் செயலாளரான பேராசிரியர் சீனிவாசனுக்கு ராஜகண்ணப்பன் வழங்கினார். தமிழகத்திலுள்ள யாதவர் சமுதாய வாக்குகளை அப்படியே அள்ளுவதற்கு, ராஜகண்ணப்பனின் வருகை பி.ஜே.பி-க்கு உதவும் என்றும், அவருக்கு அகில இந்திய பதவியும், ராஜ்யசபா எம்.பி பதவியும் தரப்படும் என்றும் பேச்சு அடிபடுகிறது.

ராஜகண்ணப்பனின் ஆதரவாளர்களிடம் பேசினோம். ‘‘1991-ல், முதன்முதலில் பெரும்பான்மை பலத்துடன் ஜெயலலிதா  ஆட்சி செய்த காலகட்டத்தில், மூன்று முக்கிய அமைச்சர்களில் ஒருவராக வளமுடன் வலம் வந்தவர் ராஜகண்ணப்பன். சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க செயலாளராக இருந்துகொண்டு, தமிழக யாதவ மக்கள் மத்தியில் ஒரு ஹீரோவாக ஆனார். ஆட்சி மாறியவுடன் கட்சியில் ஓரங்கட்டப்பட்டாலும், சமுதாய மக்களிடம் செல்வாக்குடன் இருந்தார். பிறகு, மக்கள் தமிழ் தேசம் கட்சியை ஆரம்பித்து, தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். பிறகு, கட்சியைக் கலைத்துவிட்டு தி.மு.க-வில் சேர்ந்து இளையான்குடி எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்றார். தி.மு.க-வில் ஸ்டாலின் அணியா, அழகிரி அணியா என்று முடிவெடுக்க முடியாமல் ஒதுங்கினார். பெரியகருப்பனைத் தி.மு.க-வில் அமைச்சராக்கி, இவரைப் பழிவாங்கினார்கள். அதனால், மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்து சிவகங்கை நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரத்தை எதிர்த்துப் போட்டியிட்டு மிகவும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். அந்தத் தேர்தல் முடிவு பல சர்ச்சைகளைக் கிளப்பினாலும், ஜெயலலிதா அதில் ஆர்வம் காட்டவில்லை.

தாமரைக்குத் தாவும் ராஜகண்ணப்பன்!

ஜெயலலிதா மறைவுக்குப்பின் சசிகலா, பன்னீர் எனப் பிரிந்தபோது, பன்னீர் அணியில் இணைந்து தென் மாவட்டங்களில் பன்னீருக்காகப் பல கோடிகளைச் செலவு செய்து நிகழ்ச்சிகளை நடத்தினார். ஆனால், ஓ.பி.எஸ் மீண்டும் எடப்பாடியுடன் இணைந்து துணை முதலமைச்சரானவுடன் தன்னை நம்பிவந்த பலரைக் கண்டுகொள்ளாமல் கைவிட்டது போல், இவரையும் விட்டுவிட்டார். ராஜகண்ணப்பனை எந்த நிகழ்ச்சிக்கும் கட்சியினர் கூப்பிடுவதில்லை. இந்த நிலையில், ராஜகண்ணப்பனின் மன ஓட்டத்தை அறிந்துகொண்ட பி.ஜே.பி நிர்வாகிகள், அவரைத் தொடர்புகொண்டு பேசிவருகின்றனர். தமிழகத்தில் முக்கியமான சாதி அமைப்புகளைப் பி.ஜே.பி-க்கு ஆதரவாகத் திரட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் மாநிலச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன், ராஜ கண்ணப்பனிடம் பேசி வருவதாகச் சொல்லப்படுகிறது. விரைவில் அறிவிப்பு வரும்’’ என்றனர்.

- செ.சல்மான்