அரசியல்
Published:Updated:

250 கோடி ரூபாய் அரசு நிலங்கள்... ஆக்கிரமித்த அ.தி.மு.க-வினர்!

250 கோடி ரூபாய் அரசு நிலங்கள்... ஆக்கிரமித்த அ.தி.மு.க-வினர்!
பிரீமியம் ஸ்டோரி
News
250 கோடி ரூபாய் அரசு நிலங்கள்... ஆக்கிரமித்த அ.தி.மு.க-வினர்!

250 கோடி ரூபாய் அரசு நிலங்கள்... ஆக்கிரமித்த அ.தி.மு.க-வினர்!

‘அரசே எங்களுக்கானதுதான்... அரசு வேலைகளும் எங்கள் கட்சியினருக்குத் தான்’ என அமைச்சர்களே வெளிப் படையாகப் பேசுகிறார்கள். அதனால்தானோ என்னவோ, ‘அரசு இடங்களும் எங்களுடையவை’ என முடிவுசெய்து, கூச்சமின்றி ஆக்கிரமிப்பு செய்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.

மனைப்பிரிவு லேஅவுட் போடும்போதும், பெரிய கட்டடங்கள் கட்டும்போதும், பூங்கா போன்ற பொதுத் தேவைகளுக்காகக் குறிப்பிட்ட அளவு இடத்தைப் பொது ஒதுக்கீடு இடமாக (ரிசர்வ் சைட்) உள்ளாட்சி அமைப்புக்கு அளிக்க வேண்டும் என்பது விதி. கோவை மாநகராட்சிப் பகுதியில் இப்படி ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிக்கப் படுவதும், விற்கப்படுவதும் தங்குதடையின்றி நடக்கின்றன. கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கண்ணசைவு இல்லாமல் ஓரணுவும் அசையாது. இவருடைய ஆசியுடன், ‘ரிசர்வ் சைட்’ இடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாகப் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

250 கோடி ரூபாய் அரசு நிலங்கள்... ஆக்கிரமித்த அ.தி.மு.க-வினர்!

கோவை வடவள்ளிப் பகுதியில் 30 ஏக்கர் பரப்பளவில் வி.என்.ஆர் நகர் அமைந்துள்ளது. இங்கு மாநகராட்சிக்குச் சொந்தமான 12 இடங்கள் (3 ஏக்கர்) ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. வி.என்.ஆர் நகர் குடியிருப்பு நலச்சங்கத்தினர், இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றனர். அதையடுத்து, இங்கு ரிசர்வ் சைட்டை ஆக்கிரமித்திருந்த ஒரு பள்ளி உள்பட ஐந்து இடங்களை மாநகராட்சி கையகப்படுத்தியது. ஆனாலும், அந்தப் பகுதியில் ஓர் இடத்தை மட்டும் அதிகாரிகளால் நெருங்க முடியவில்லை. இங்கு ஒன்பது லே அவுட்களுக்கு அனுமதி பெற்று மனைகளை விற்ற பழனிச்சாமி என்பவர், அருகே தியேட்டர் ஒன்றைக் கட்டினார். அதற்கு இடம் போதவில்லை எனச் சொல்லி, ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருந்த 38 சென்ட் ரிசர்வ் சைட்டில், 11 சென்ட் நிலத்தை எடுத்துக்கொண்டு, அதற்குப் பதிலாக மற்றொரு 11 சென்ட் நிலத்தை அதே லே அவுட்டுக்குள் வழங்கினார்.

அந்த இடத்தில் மாநகராட்சி பூங்கா அமைக்கப்படும் எனச் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த நிலத்தை பழனிச்சாமியின் தம்பி ஆறுச்சாமி குடும்பத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். சம்பந்தப்பட்ட 11 சென்ட் இடத்தைக் காலிசெய்யுமாறு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. அதை அவர்கள் மதிக்கவே இல்லை. மாறாக, இந்த 11 சென்ட் நிலத்துக்குப் பதிலாக, 1.5 கி.மீ தொலைவில் சுடுகாட்டு அருகேயுள்ள 70 சென்ட் நிலத்தைப் பரிவர்த்தனை செய்வதாக உள்ளூர் திட்டக் குழுமத்தில் அவர்கள் விண்ணப்பித்தனர். அந்த விண்ணப்பத்தில், ‘கடந்த 30 ஆண்டுகளாக நாங்கள் அங்குதான் வசித்து வருகிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளனர். அந்த நிலமோ, ஒரு ஹோட்டலின் சமையலறை மற்றும் பார்க்கிங்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நகரமைப்பு விதிகளை மீறி, இதற்கும் ஒப்புதல் கொடுக்க மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், இதற்கு நகராட்சி நிர்வாக ஆணையம் தடைவிதித்ததுடன், மாநகராட்சியின் பரிந்துரை யையும் நிராகரித்தது. ‘10 நாள்களுக்குள் அந்த நிலத்தைக் கையகப்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டது. ஆணையம் உத்தரவிட்டு 100 நாள்களுக்கு மேல் ஆகியும், மாநகராட்சி அதிகாரிகள் அந்தப் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. ஆறுச்சாமியின் நெருங்கிய உறவினரான சந்திரசேகர் என்பவர், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியின் நண்பர். அவர், அதிகாரிகளை ஆஃப் செய்துவிடுவதாகச் சொல்லப்படுகிறது.

250 கோடி ரூபாய் அரசு நிலங்கள்... ஆக்கிரமித்த அ.தி.மு.க-வினர்!

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன். 2004-ம் ஆண்டு சுண்டக்காமுத்தூர் ரோட்டில் பிரபு நகர் என்ற பகுதியில், 13.5 சென்ட் ரிசர்வ் சைட், அருண் கேல்ரோ என்பவரின் மனைவி சந்திரகாந்த் பெயரில் கிரயம் செய்யப் பட்டது. இந்த அருண் கேல்ரோ என்பவர்தான், பிரபு நகருக்கு லேஅவுட் போட்டவர். இந்த கிரயத்துக்கு அம்மன் அர்ஜுனனின் மனைவி விஜயலெட்சுமி பவர் ஏஜென்டாகச் செயல்பட்டார். ரிசர்வ் சைட்டை மூன்று பிளாட்களாகப் பிரித்து விற்பனை செய்தனர். இதற்கான கிரயப் பத்திரத்தில் அம்மன் அர்ஜுனன் மற்றும் அவர் மகன் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சாட்சிக் கையொப்பம் இட்டுள்ளனர். இந்த விவகாரம் அப்போதே சென்னை உயர் நீதிமன்றத்துக்குச் சென்றது. அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், ‘ரிசர்வ் சைட்டுகளைக் கையகப்படுத்திக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உள்ளாட்சித் துறைக்கு உள்ளது’ என்று கூறினர். ஆனால், இந்த நிலத்தைக் கையகப்படுத்த மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தீவிர ரஜினி ரசிகராக இருந்து, அ.தி.மு.க-வில் இணைந்தவர் சிங்கை உலகநாதன். இவர் பீளமேடு பகுதியில், ரிசர்வ் சைட்டை ஆக்கிரமித்து, தன் தந்தை கண்டியப்பன் பெயரில் திருமண மண்டபம் நடத்திவருகிறார். வேலுமணியின் ஆசியுடன் உலகநாதன் வலம் வருவதால், இதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள்.

ரிசர்வ் சைட் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிவரும் சமூக ஆர்வலர் எஸ்.பி.தியாகராஜன், “கோவை மாநகராட்சிக்குள் 20 ஏக்கர் பரப்புள்ள 150 ரிசர்வ் சைட்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு சுமார் 250 கோடி ரூபாய். இவை கண்டறியப்பட்டவை மட்டுமே! ஆனால், கவனத்துக்கு வராத ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதுதவிர மாநகராட் சியை ஒட்டிய பேரூராட்சிப் பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் இருக்கின்றன. மாநகராட்சி. அதிகபட்சமாக, ‘இது மாநகராட்சிக்குச் சொந்தமான இடம்’ என்று சில இடங்களில் மட்டும் போர்டு வைக்கிறார்கள். இதுதொடர்பான புகார்களை அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. கோவை மாநகராட்சி ரிசர்வ் சைட் ஆக்கிரமிப்பு தொடர்பாக, 75-க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன’’ என்றார் ஆதங்கத்துடன்.

வி.என்.ஆர் நகர் குடியிருப்பு நலச்சங்கத்தின் தலைவர் ஜோசப், ‘‘வடவள்ளிப் பகுதி பேரூராட்சியாக இருந்தபோதே இந்தப் பிரச்னை தொடங்கிவிட்டது. நான் கவுன்சிலராக இருந்தபோது, இந்த ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சில நடவடிக்கைகளை எடுக்க முடிந்தது. ஆனால், அரசியல் தலையீடு காரணமாக இப்போதுவரை ரிசர்வ் சைட்களை ஆக்கிரமித்துள்ள கட்டடங்கள் அகற்றப்படவில்லை’’ என்றார்.

எஸ்.பி.வேலுமணியின் நண்பர் என்று கூறப்படும் சந்திரசேகரைத் தொடர்புகொண்ட போது, ‘‘நாங்க அந்த இடத்தை வாங்குனப்ப, அது ரிசர்வ் சைட் என்று குறிப்பிடப்படவில்லை. அதனால்தான், அதற்கு மாற்றாக நிலம் தருகிறோம் என்று சொல்கிறோம்’’ எனத் தொடர்பைத் துண்டித்தார். எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனனைத் தொடர்புகொண்டோம். ‘‘லே அவுட் போட்டவர்கள், என் மனைவி பெயரில் பவர் வழங்கினர். நாங்க சாட்சிக் கையொப்பமிட்டது உண்மைதான். அது ரிசர்வ் சைட் என்பதற்கு ஆதாரம் இருந்தால், எடுத்துக்கொள்ளட்டும். நான் எதற்கும் தடையாக இருக்க மாட்டேன்’’ என்றார். சிங்கை உலகநாதனிடம் பேசியபோது, ‘‘ஜெயலலிதா இருந்தபோது மூவாயிரம் பேருடன் அ.தி.மு.க-வில் சேர்ந்தேன். இது ரிசர்வ் சைட் என்றே எங்களுக்குத் தெரியாது. மாநகராட்சி சமுதாயக்கூடங்களைவிடக் குறைவாகத்தான் கட்டணம் நிர்ணயிக்கிறோம். அமைச்சர் ரொம்ப ஸ்ட்ரிக்ட். இதற்கும் அமைச்சருக்கும் சம்பந்தம் இல்லை’’ என்றார்.

250 கோடி ரூபாய் அரசு நிலங்கள்... ஆக்கிரமித்த அ.தி.மு.க-வினர்!

மாநகராட்சி அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ‘‘இதில் அரசியல் தலையீடு இருப்பது உண்மைதான். முடிந்தவரை ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம். இதுசம்பந்தமாக யாராவது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம்” என்ற அதிகாரிகள், இந்த மூன்று ஆக்கிரமிப்புகள் குறித்து வாய் திறக்கவில்லை.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் விளக்கம் கேட்க முயற்சி செய்தோம். அவரின் உதவியாளர்களிடம் இது சம்பந்தமான விவரங்களைக் கூறினோம். ‘‘அமைச்சரின் கவனத்துக்கு எடுத்துச் செல்கிறோம்’’ என்று கூறினர். ஆனால், கடைசிவரை அமைச்சர் விளக்கம் தரவில்லை.

- இரா.குருபிரசாத்
படங்கள்: தி.விஜய்