
மூன்றாவது அணியை முறியடிக்குமா காங்கிரஸ்?
‘மிஷன் 2019’. இது பிரதமர் மோடி - பி.ஜே.பி தலைவர் அமித் ஷா கூட்டணியின் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான திட்டம். ஒரே ஒரு கட்சியில் இருக்கும் இந்த இரண்டு தலைவர்களின் கூட்டணியை முறியடிக்க, 20 கட்சிகளின் தலைவர்களை இணைத்துள்ளார் சோனியா காந்தி. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் என்ற முறையில் மார்ச் 13-ம் தேதி திங்கள்கிழமை சோனியாவின் 10, ஜன்பத் இல்லத்தில் நடைபெற்ற டின்னர்... அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் புதிய கூட்டணிக்கான முன்னோட்டமாகக் கருதப்படுகிறது. ஆனால், இது எந்த அளவுக்குப் பலன்களைத் தரும் என்பதில் காங்கிரஸ் கட்சியினருக்கே பெரும் சந்தேகம் உள்ளது. ‘‘பி.ஜே.பி-யை எதிர்கொள்வதைவிட, மூன்றாவது அணியை முறியடிப்பதே சோனியாவின் இலக்கு’’ என்கிறார்கள் சீனியர் காங்கிரஸ் தலைவர்கள்.

2018 ஜனவரியிலேயே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பி.ஜே.பி-க்கு எதிராக ஒரு கூட்டணியை உருவாக்க முயற்சி செய்தார். அப்போது சோனியா, திடீரென எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரை அழைத்துப் பேசி, பவாரின் அந்த முயற்சியை முறியடித்தார். இப்போது திடீரென அதுபோன்ற ஒரு சூழல் உருவானது. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியாகி, காங்கிரஸ் மண்ணைக் கவ்விய நேரம். மேற்கு வங்காள முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவியுமான மம்தா பானர்ஜி திடீரென தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரிடம் பேசினார். ‘‘பி.ஜே.பி மற்றும் காங்கிரஸை எதிர்த்து தேசிய அளவில் ஒரு புதிய அணியை உருவாக்க வேண்டும்’’ என்பதே அவர் பேச்சின் சாரம். இதைத் தொடர்ந்து தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ் இதேபோன்ற ஒரு முயற்சியில் இறங்கினார். மம்தா பானர்ஜி அதை ஆதரிப்பதாகச் சொன்னார். அதைத் தொடர்ந்து இந்த மாத இறுதியில் டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரை ஒருங்கிணைத்து சரத் பவார் கூட்டம் நடத்தவுள்ளார். இதற்கிடையில்தான், சோனியாவின் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
‘மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றுசேர வேண்டும்’ என்கிறார் சோனியா. ‘‘நமக்குள் மாநில அளவில் இருக்கும் விரோதங்களை விட்டுக்கொடுத்துவிட்டு, நாடாளுமன்றத் தேர்தல் என்ற பெரிய போர்க் களத்தில் இணைந்து பி.ஜே.பி-க்கு எதிராக மோத வேண்டும்’’ என்கிறார் ராகுல். ஆனால், பி.ஜே.பி-யை எதிர்க்கும் இதர தலைவர்கள் பலருக்கும் ‘எதற்காக காங்கிரஸையும் சேர்த்து சுமக்க வேண்டும்’ என்ற நினைப்பு உள்ளது. ‘2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மிகமோசமாகத் தோற்றது. பிறகு நடந்த தேர்தல்களிலும் பஞ்சாப் தவிர எங்குமே அந்தக் கட்சி வெற்றிபெறவில்லை’ என்பது அவர்கள் சொல்லும் விஷயம். அதனால் பலரும் மூன்றாவது அணி பக்கம் தலையையும், காங்கிரஸ் பக்கம் வாலையும் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், சின்னச் சின்னதாக சில முயற்சிகள் நடந்தபடி உள்ளன. மேற்கு வங்காளத்திலிருந்து ராஜ்ய சபாவுக்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு மம்தா ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் கோரக்பூர் மற்றும் புல்பூர் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தல்களில் சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவளித்தார் மாயாவதி. பதிலுக்கு பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரை ராஜ்ய சபா தேர்தலில் ஆதரிப்பதாக ஒப்பந்தம். ‘‘காங்கிரஸ்மீது இருக்கும் அதிருப்தி காரணமாக இந்தக் கூட்டணிக்கு பிஜு ஜனதா தளம், தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ஆம் ஆத்மி கட்சி போன்றவை வருவதில்லை. காங்கிரஸை ஒதுக்கித் தள்ளிவிட்டு இந்த எல்லாக் கட்சிகளும் இணைந்தால், பி.ஜே.பி-க்கு கடுமையான சவாலைக் கொடுக்க முடியும்’’ எனச் சொல்லி வருகிறார் மம்தா. எனினும் இதில் ஒரே ஒரு பிரச்னை, ‘இப்படிப்பட்ட கூட்டணிக்கு யார் தலைமை ஏற்பது?’ என்பதுதான். இந்த ஒரு விஷயம்தான் காங்கிரஸுக்கு நம்பிக்கை தருவதாக இருக்கிறது.

இந்தச் சூழலில்தான், சோனியா விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் கலந்துகொண்டவர் களில் சரத் பவார் மட்டுமே முக்கியமான தலைவர். மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ் போன்றவர்கள் அடுத்தகட்டத் தலைவர்களை அனுப்பி வைத்துவிட்டனர். இந்த மாத இறுதியில் சரத் பவார் கூட்டும் கூட்டத்துக்கு மம்தா நேரில் வருவதாகச் சொல்லியிருக்கிறார். சந்திரபாபு நாயுடு மத்திய அமைச்சரவையிலிருந்து விலகினாலும், இன்னமும் பி.ஜே.பி கூட்டணியில் நீடிப்பதாகச் சொல்லியிருக்கிறார். அதனால் அவரை அழைக்கவில்லை. ஆம் ஆத்மி கட்சி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகளுக்கும் அழைப்பில்லை. மற்ற எல்லா கட்சிகளையுமே அழைத்திருந்தார்.
‘‘2019 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இது முதல் படி’’ என்று சொன்ன லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ், ‘ராகுல் தலைமையில் தேர்தலை எதிர்கொள்வீர்களா’ என்று கேட்டதற்கு, ‘‘பிரதமர் வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் தருணம் இன்னும் வரவில்லை’’ என்றிருக்கிறார். இத்தனைக்கும் காங்கிரஸ் கூட்டணியில் ஏற்கெனவே இருப்பவர்தான் அவர். தொடர்ச்சியாக பி.ஜே.பி-யிடம் அடிவாங்கும் அத்தனைக் கட்சிகளையும் இணையவிடாமல் செய்வது ‘யார் தலைவர்’ என்ற பஞ்சாயத்துதான்.
ஆக, சோனியா இன்னமும் ராகுலைத் தன் முதுகில் சுமக்க வேண்டியிருக்கிறது.
- அகஸ்டஸ்
ஓவியம்: கார்த்திகேயன் மேடி