அரசியல்
Published:Updated:

“தேர்தலைக் காரணம் காட்டி காவிரித் தீர்ப்பை தள்ளிப்போட முடியாது!”

“தேர்தலைக் காரணம் காட்டி காவிரித் தீர்ப்பை தள்ளிப்போட முடியாது!”
பிரீமியம் ஸ்டோரி
News
“தேர்தலைக் காரணம் காட்டி காவிரித் தீர்ப்பை தள்ளிப்போட முடியாது!”

கி.வீரமணி விளக்கம்

மிழகத்தின் தீராத துயரமாக இருந்து வருகிறது காவிரி நீர் விவகாரம். 2007-ல், காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. அதையே, உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பும் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், இதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக, ‘காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையே உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் இல்லை; மாறாக, செயல் திட்டம் (scheme) ஒன்றை அமைக்க வேண்டும் என்றுதான் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது’ என்று புதிய குழப்பத்தை மத்திய நீர்வளத்துறை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில், வழக்கறிஞரும் திராவிடர் கழகத் தலைவருமான கி.வீரமணியிடம் காவிரி விவகாரம் குறித்து சட்டரீதியான கேள்விகள் சிலவற்றை முன்வைத்தோம்.

“தேர்தலைக் காரணம் காட்டி காவிரித் தீர்ப்பை தள்ளிப்போட முடியாது!”

“காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் இல்லை என்று மத்திய அரசு குறிப்பிடுகிறதே?”

“2007-ல் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பிலும், இந்த மார்ச் 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலும், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்’ என்பது மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை முழுமையாகப் படிக்காமல், சிலர் குழப்பிக் கொள்கின்றனர். வேறுசிலர், அதைத் தெளிவாகப் படித்துவிட்டுத் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். இவர்களில், மத்திய அரசும் கர்நாடக அரசும் இரண்டாவது ரகம். திட்டமிட்டே திசைதிருப்புவதற்காக, ‘அந்த வார்த்தையே இல்லை’ என்கிறது கர்நாடகா. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று வாரியம் ஆகிய இரண்டையும் அமைக்க வேண்டும் என்று தெளிவாக உள்ளது. அதில் ஏதாவது சந்தேகம் வந்தால், மத்திய நீர் ஆணையத்திடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மூன்று அமைப்புகளையும் சேர்த்து, அதைச் செயல்படுத்தும் அமைப்பு அல்லது நிர்வாக இயந்திரத்தை, ‘செயல் திட்டம்’ (Scheme) என்று குறிப்பிட்டார்கள். அதை அப்படியே எடுத்துக்கொண்டுதான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதைப் புரிந்துகொண்டும், புரிந்துகொள்ளாததுபோல், மத்திய அரசின் நீர் வளத்துறையும், கர்நாடகாவும் நாடகமாடுகின்றன.”

“உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எந்தப் பாதகமும் இல்லை என்று உறுதியாகச் சொல்கிறீர்களா?”

“காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு குறிப்பிட்டதில், 14.75 டி.எம்.சி தண்ணீரைத் தமிழ கத்துக்குக் குறைத்ததைத் தவிர, மற்ற அனைத்தை யும் அப்படியே உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு என்பது நீதிமன்றத்தின் டிக்ரி (Decree) என்பதையும் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இதற்குப் பொருள், நடுவர் மன்றத்தின் தீர்ப்பென்பது, நீதிமன்றத்தின் ஆணைக்குச் சமம்.”

“ ‘ஸ்கீம்’ என்ற வார்த்தையை ஏன் அவ்வளவு விரிவாகச் சொல்லவில்லை?”

“அதைத்தான் 2007-ல் வெளியான காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு விளக்கமாகச் சொல்லி உள்ளதே! அதையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் சேர்த்துத்தான் படிக்க வேண்டும். அப்படியில்லாமல், தனியாக இந்த ‘ஸ்கீம்’ என்ற வார்த்தையைப் பிடித்துக்கொண்டு குழப்பக் கூடாது. ‘காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்’ என்பதுதான் அதற்கு விளக்கம். ஆனால், இப்படி அமையும் காவிரி மேலாண்மை வாரியத்தில், காவிரி நீர் ஒழுங்காற்று வாரியமும் சேருகிறது. அதில், தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலச் செயலாளர்கள், அதிகாரிகள் இருப்பார்கள். மேலும், உறுப்பினர்களும் இருப்பார்கள். அவர்களின் தலைவராக வேறு மாநிலத்தைச் சேர்ந்த பொதுவான ஒருவர் இருப்பார். இந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் கர்நாடகாவில் உள்ள எல்லா அணைகளும் போய்விடும்; ஒவ்வொரு அணையிலும் எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பது தெரிந்துவிடும்; அது அவர்களுக்குச் சிக்கலாகிவிடும். தண்ணீரை வைத்துக்கொண்டே, ‘எங்களிடம் தண்ணீர் இல்லை’ எனப் பொய் சொல்ல முடியாது. அதனால், அவர்கள் பதற்றம் அடைகிறார்கள்.”

“மத்திய அரசு ஏன் அதைத் தட்டிக் கழிக்கப் பார்க்கிறது?”

“அதற்கு கர்நாடகத் தேர்தல்தான் காரணம்.”

“தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்?”

“மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். நம் வழக்கறிஞர்களிடம் அந்தத் தெளிவு இருக்கிறது. ஆனால், ஆட்சியாளர்கள் அந்த அழுத்தத்தை மத்திய அரசுக்குக் கொடுக்கமாட்டேன் என்கிறார்கள். பெரியார் சிலை பிரச்னையில், 24 மணி நேரத்தில் மோடி பதில் கொடுத்தார். அதற்கு என்ன காரணம்? அந்த விவகாரத்தில், தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சியும், அது ஏற்படுத்திய அழுத்தமும்தான் காரணம். இந்தப் பிரச்னையிலும் அப்படி ஒரு எழுச்சியும் அழுத்தமும் இல்லாவிட்டால், காவிரி கிடைக்காது.”

“கர்நாடகத்தில் தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது இன்னும் தாமதப்படுமே?”

“தேர்தலை அறிவித்தாலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைப்பதற்குச் சட்டத் தடை எதுவும் இல்லை. இது நான்கு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை. கர்நாடகா தவிர்த்து மற்ற மூன்று மாநிலங்களில் தேர்தல் இல்லை. அதனால், தேர்தலைக் காரணம் காட்டி இதைத் தள்ளிப்போட முடியாது.”

“தீர்ப்பை முன்வைத்துப் பல்வேறு குழப்படிகள் அரங்கேறும் நிலையில், உச்ச நீதிமன்றம் தானாகவே இதை எடுத்துக்கொண்டு தகுந்த விளக்கத்தைக் கொடுப்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளதா?”

“உச்ச நீதிமன்றம் அப்படிச் செய்யலாம். ஆனால், அவர்களாக தீர்த்து வைப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஆறு வாரங்களில் மத்திய அரசு இந்தத் தீர்ப்பைச் செயல்படுத்தவில்லை என்றால், மத்திய அரசுமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரலாம். அதை தமிழக அரசு செய்ய வேண்டும். அவர்கள் செய்யத் தவறினால், திராவிடர் கழகம் கண்டிப்பாக செய்யும்.”

- ஜோ.ஸ்டாலின்
படம்: வி.நரேஷ்குமார்