
2ஜி அப்பீல்... பின்வாங்குகிறதா மத்திய அரசு?

மார்ச் 21-ம் தேதியுடன் 2ஜி வழக்கிலிருந்து ஆ.ராசா, கனிமொழி உள்பட 19 பேர் ஒட்டுமொத்தமாக விடுவிக்கப்பட்டு 90 நாள்கள் முடிவடைகின்றன. சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அந்த நாளுக்குள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்வார் களா என்ற கேள்வி எழுந்துள்ளது. கருணாநிதியை வீடுதேடி வந்து பிரதமர் மோடி பார்த்த நிலையில், அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு பின்வாங்குகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கில் ஆஜராக ஆனந்த் குரோவர் நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இந்த வழக்கு நடைபெற்றதால், ஆனந்த் குரோவரை உச்ச நீதிமன்றம்தான் நியமித்தது. ஆனால், அவர்மீது கடுமையான விமர்சனங்களை எழுப்பினார், சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி. ‘‘இந்த வழக்கை இலக்கே இல்லாத திசைக்குக் கொண்டு சென்றனர். ஒரு சிறு ஆதாரத்தைக்கூட சி.பி.ஐ கொண்டுவரவில்லை. சி.பி.ஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில்கூடக் கையொப்பமிட மறுத்தார்’’ என்று ஆனந்த் குரோவர் பற்றிச் சொன்னார் ஓ.பி.சைனி. இன்னொரு பக்கம் சி.பி.ஐ அதிகாரிகளுக்கும் அவர் வழக்கை நடத்திய விதத்தில் முழுத் திருப்தி இல்லை. அதைத் தொடர்ந்து அவர் மாற்றப்பட்டு, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டரான ஜெனரல் துஷார் மேத்தா நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிப்ரவரி 8-ம் தேதி வெளியிட்டது. சிறப்பு நீதிமன்றத்தில் வாதாடுவதற்கு ஆனந்த் குரோவரை உச்ச நீதிமன்றம்தான் நியமித்திருந்தது. அதனால், அவர் தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கும்படி உச்ச நீதிமன்றத்தை நாடினார். ஆனால், அதைத் தொடர்ந்து ஒரு புதுச் சிக்கல் எழுந்தது. ஆனந்த் குரோவரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை பிரஷாந்த் பூஷண் தாக்கல் செய்தார். ‘உச்ச நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞரைப் புறக்கணித்துவிட்டு, உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறாமல் வேறொருவரை மத்திய அரசு நியமிப்பது நீதிமன்றத்தை அவமதிப்பதாகும்’ என்பது அவரின் வாதம். அதனால், அப்பீல் பணிகள் ஸ்தம்பித்து நின்றன.

இந்த வழக்கை மார்ச் 12-ம் தேதி நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்ஹா பெஞ்ச் விசாரித்தது. ‘ஆனந்த் குரோவரைச் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு மட்டுமே நியமித்தோம். அதனால், மேல் முறையீட்டுக்கு வேறொரு வழக்கறிஞரை மத்திய அரசு நியமித்ததில் தவறில்லை’ என்று சொன்ன நீதிபதிகள், இதில் நீதிமன்ற அவமதிப்பு இல்லை என்று கூறி பிரஷாந்த் பூஷண் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
அதேசமயம், இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் அருண் மிஸ்ராவும் நவீன் சின்ஹாவும், சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறையின் மெத்தனத்தைக் கடுமையாகக் கண்டித்தனர். ‘‘நாட்டு மக்கள் அத்தனை பேரும் உற்றுக் கவனித்த இந்த வழக்கில், விசாரணைக்கு இவ்வளவு தாமதம் ஏன்? 2ஜி தொடர்பான அத்தனை வழக்குகளின் விசாரணையையும் இன்னும் ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு உட்பட 2ஜி தொடர்பான அத்தனை வழக்குகளின் நிலை பற்றியும் இரண்டு வாரங்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.
ஆனால், 2ஜி மேல் முறையீடு குறித்து எந்தக் கேள்வியும் இந்த வாதத்தின்போது எழுப்பப்படவில்லை. ஆ.ராசா தொடர்பான 2ஜி வழக்கைப் பொறுத்தவரை, அனைவரையும் சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளதால், மீண்டும் மேல் முறையீடு செய்து தீர்ப்பை மாற்றுவது என்பது சிரமமான காரியம் என்பது வழக்கறிஞர்களின் கருத்து. ஆகவே, மிகவும் நுணுக்கமாக மேல்முறையீட்டு மனுவைத் தயாரிக்க வேண்டும் என்கிறார்கள்.

‘‘கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா 2ஜி வழக்குகளில் ஆஜராக இனி தடையேதும் இல்லை என்பதால், மேல் முறையீட்டுக்கான வேலைகள் தொடங்கியுள்ளன. 90 நாள் கெடு முடிந்தால்கூட, தாமதத்துக்கு பிரஷாந்த் பூஷண் வழக்கைக் காரணமாகச் சொல்லி அனுமதி பெற்று, மேல்முறையீடு செய்யலாம். அதனால், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடக்கிறது. இதில், அரசியல் அழுத்தம் ஏதும் இல்லை’’ என்கிறார்கள் சி.பி.ஐ அதிகாரிகள்.
மற்றொரு 2ஜி வழக்கான ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில், மலேசியாவிலுள்ள மேக்சிஸ் நிறுவனர் அனந்தகிருஷ்ணன் உள்ளிட்டவர்களுக்குச் சம்மன் வழங்க முடியவில்லை என்று சி.பி.ஐ கூறியது. இதனால், மாறன் சகோதரர்கள் தொடர்பான பகுதியை மட்டும் பிரித்து விசாரித்த ஓ.பி.சைனி, அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார். இப்போது அந்த மேல்முறையீடு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதே வழக்கில், கார்த்தி சிதம்பரத்தையும், ப.சிதம்பரத்தையும் சேர்க்க சுப்ரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றம் வரை சென்று பார்த்தார். எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இப்போது, ‘‘திகார் சிறையில் இருக்கும் கார்த்தி சிதம்பரத்திடம் நடத்தப்பட்ட விசாரணைகள் அடிப்படையில், ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் சிக்குவார்’’ என்கிறார் சுவாமி.

ஆ.ராசா அண்மையில் வெளியிட்ட 2ஜி புத்தகத்தில், ‘கார்த்தி சிதம்பரம் ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்துக்காகத் தன்னிடம் பேசினார். அந்த நிறுவனத்தின் தலைவரைத் தன் நண்பர் எனக் குறிப்பிட்டார்’ என்று எழுதியிருந்தார். அது, கார்த்தி கைதுக்குப் பிறகு டெல்லி வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
- டெல்லி பாலா