அரசியல்
Published:Updated:

அ.ம.மு.க... அச்சத்தில் அ.தி.மு.க!

அ.ம.மு.க... அச்சத்தில் அ.தி.மு.க!
பிரீமியம் ஸ்டோரி
News
அ.ம.மு.க... அச்சத்தில் அ.தி.மு.க!

அ.ம.மு.க... அச்சத்தில் அ.தி.மு.க!

பிரமாண்ட விழா எடுத்து ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ என்று தன் அமைப்புக்குப் பெயரை அறிவித்து, தனிக்கொடி ஏற்றியிருக்கிறார் தினகரன். அவரை ஆதரித்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18      எம்.எல்.ஏ-க்கள் ஒரு பக்கம் இருக்க, அவர்களைத் தொடர்ந்தும் மூன்று எம்.எல்.ஏ-க்கள் அவர் பக்கம் வந்தார்கள். எதிர்ப்பு அணியாக இருந்தது போய், தனி அமைப்பாகத் தினகரன் தன் அணியை உருவாக்கியிருக்கும் இந்த நேரத்தில், இன்னும்  எம்.எல்.ஏ-க்கள் விலகிப்போனால் என்னாவது என்ற அச்சத்தில் இருக்கிறது அ.தி.மு.க.  

மார்ச் 15-ம் தேதி காலை மதுரை மாவட்டம் மேலூரில் நடந்தது விழா. நடிகர் கமல்ஹாசன் கடந்த மாதம் மதுரையில் தொடங்கிய புதிய அரசியல் கட்சிக்கு அடுத்ததாக, ‘திராவிடம்’ என்ற வார்த்தை இடம்பெறாத இரண்டாவது அமைப்பாகத் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உருவாகியுள்ளது. கறுப்பு வெள்ளை சிவப்புக்கு நடுவே அ.தி.மு.க கொடியில் இருக்கும் அண்ணாவுக்குப் பதில் ஜெயலலிதா படம் பெரிதாகப் பொறித்த கட்சிக்கொடியையும் தினகரன் அறிமுகப்படுத்தினார். ‘‘இது அரசியல் கட்சி அல்ல, அ.தி.மு.க-வை மீட்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புதான்’’ என்று குழப்படியாகக் கட்சி நிர்வாகிகள் விளக்கம் சொன்னாலும், ‘இது அரசியல் கட்சி’ என்றே எல்லோரும் குறிப்பிட்டார்கள்.

‘‘கடந்த நான்கு மாதங்களாக நமக்கு என்று ஒரு பெயரில்லாமல் காவல்துறையில் ஒரு அனுமதி வாங்கச் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் போதுதான், டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவு நமக்குச் சாதகமாக வந்துள்ளது. அதனால்தான், இந்த அமைப்பை உருவாக்குகிறோம்’’ என்று புதிய கட்சிக்கு விளக்கம் அளித்துள்ளார் தினகரன்.

அ.ம.மு.க... அச்சத்தில் அ.தி.மு.க!

மார்ச் 9-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் குக்கர் சின்னத்தைத் தினகரன் அணிக்கு வழங்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தர விட்டது. அன்றைய தினம் அவர் மதுரையில் இருந்தார். ‘‘இது மீனாட்சியம்மனின் அருள்’’ என்று சக நிர்வாகிகளிடம் கூறியவர், புதிய அமைப்பு தொடக்க விழாவை உடனே நடத்த வேண்டும் என்றார். ஏற்கெனவே எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தை நடத்திய மேலூரில் இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டுமென்று முன்னாள் எம்.எல்.ஏ மேலூர் சாமி, தங்க தமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி ஆகியோரிடம் தினகரன் தெரிவிக்க, மறுநாள் காலை மேலூரில் விழாவுக்கான பந்தக்கால் சிறப்பு பூஜைகளை நடத்தினார்கள். ஐந்தே நாள்களில் ஜரூராக வேலை செய்து இந்த நிகழ்ச்சியை நடத்தினார்கள். ஒரு மாநாட்டு ஏற்பாடுபோல் பிரமாண்டப் பந்தல் போடப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஆட்களைத் திரட்டிக் கூட்டிவருவதற்கு அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவு போடப்பட்டது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கரூர், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை மாவட்டங்களிலிருந்து அதிகமான வாகனங்களில் தொண்டர்கள் வந்திருந்தனர். கொடியை வடிவமைத்தவர் தஞ்சாவூரைச் சேர்ந்த கட்சி நிர்வாகியான வெங்கட்ரமணி கல்யாணம் என்பவராம். அவருடைய பெயர் மேடையில் அறிவிக்கப்பட்டது.

மேடைக்கு வந்தபோது தொண்டர்கள் மத்தியில் தினகரன் சிக்கிக்கொண்டார். அவர் மேடையில் ஏறியபோது தொண்டர்களும் முண்டியடித்து ஏறியதால், மேடையில் வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கர் கீழே விழுந்தது. மேடையில் ஏறியதும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை வணங்கிவிட்டு அமர்ந்தார் தினகரன். மேடையிலும் மேடைக்கு முன்பும் முண்டியடித்த கூட்டத்தினரைக் கட்சியினராலும் காவல்துறை யாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. முன்வரிசை யில் அமர்ந்திருந்த பெண் நிர்வாகிகள் மற்றும் செய்தியாளர்கள்மீது கூட்டத்தினர் விழுந்து அனைவருக்கும் உயிர் பயத்தைக் காட்டினர். இந்தத் தள்ளுமுள்ளுகளில் எம்.ஜி.ஆர் படத்தின் கண்ணாடி உடைந்தது. 

அ.ம.மு.க... அச்சத்தில் அ.தி.மு.க!

கடந்த முறை, மேலூர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மேடையில் முன்வரிசையை ஆக்கிரமித்த திவாகரன் வகையறாக்கள், இந்த முறை வரவில்லை. தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களுடன், அதன்பின் அவர்பக்கம் வந்த அறந்தாங்கி இரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் புதிதாகக் கலந்துகொண்டனர். ஆச்சர்யமாக, சசிகலா புஷ்பா எம்.பி-யும் வந்திருந்தார்.

முக்கியப் பேச்சாளர்களான பெங்களூரு புகழேந்தி, நாஞ்சில் சம்பத் ஆகியோருக்கு நேரமின்மையால் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை. தினகரன் கேஷுவலான பேன்ட்-ஷர்ட் அணிந்து மிகுந்த உற்சாகத்துடன் இருந்தார். ‘கட்சிப் பெயரை அறிவிக்கலாம்’ என்று மேடையில் அமர்ந்திருந்த தினகரனை நிர்வாகிகள் அழைத்தபோது, ‘‘நல்ல நேரத்தில் அறிவிக்கிறேன்’’ என்று காத்திருந்தார். அன்று சட்டமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதற்கு முன்பாகக் கட்சிப் பெயரை அறிவிக்க வேண்டும் எனத் தீர்மானித்திருந்த தினகரன், அதேபோல அறிவித்தும் விட்டார்.

பந்தல் முகப்பு செயின்ட் ஜார்ஜ் கோட்டைபோல வடிவமைக்கப் பட்டிருந்தது. கட்சிக் கொடியை ஏற்றுமிடத்தில் வில்லங்கம் ஏதும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, அந்த நிலத்தை மேலூர் சாமி கிரயத்துக்கு வாங்கியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. கொடி ஏற்றும் போது செண்டை மேளம் முழங்கியது. 100 அடி கொடிக் கம்பம் என்பதால், தினகரன் கொடியேற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. கொடியைப் பறக்க வைக்கக் கட்சி நிர்வாகிகள் படாதபாடுபட்டனர். ஒருவழியாகக் கொடி பறக்க ஆரம்பித்ததும், தொண்டர்களுக்கு அருள் வந்தது போல் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். 

இந்த நிகழ்ச்சிக்காகச் செந்தில்பாலாஜி, பழனியப்பன், தங்க தமிழ்ச்செல்வன், மேலூர் சாமி ஆகியோர் விழுந்து விழுந்து வேலை செய்தார்கள். நிகழ்ச்சிக்கு முதல் நாள் இரவே மற்ற நிர்வாகிகளும் மேலூருக்கு வந்து பந்தலில் அமர்ந்து பார்வையிட்டுக்கொண்டிருந்தார்கள். அன்று பொதுக்கூட்ட மேடையை இளவரசி மகன் விவேக் ஜெயராமன் பார்வையிட்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கிவிட்டுச் சென்றார்.

அ.ம.மு.க... அச்சத்தில் அ.தி.மு.க!

காலையில் கூட்டம் என்பதால், முந்தைய நாள் இரவே தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள் தங்குவதற்கு இடமில்லாமல் தவித்தனர். மாவட்டங்களிலிருந்து அவர்களை அழைத்து வந்தது, அந்தந்த மாவட்ட நிர்வாகிகளின் செலவு என்றார்கள். கார்களும் வேன்களும் மூவாயிரத்துக்கும்மேல் வந்திருந்தன, மேலூருக்கு வரும் அனைத்துச் சாலைகளிலும் வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தார்கள். மதுரை மாவட்ட அ.தி.மு.க-வினர் பலர், ‘இதுவும் நம்ம கட்சிதான்’ என்ற அடிப்படையில் விழாவுக்கு வந்ததாகச் சொல்லப்பட்டது. ‘‘திரண்ட கூட்டம் ஒரு லட்சத்துக்குமேல்’’ என்கிறார்கள் தினகரன் ஆட்கள். ‘‘30 ஆயிரம் பேர்’’ என்கிறது காவல்துறை. 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை கூட்டம் வந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.   

தினகரனுக்கு, தகுதிநீக்கம் செய்யப்பட்ட    எம்.எல்.ஏ வெற்றிவேல் ஒரு வெள்ளி வேல் வழங்கினார். அப்போது, ‘‘இந்த வேல், தீய சக்திகளின் துரோகத்தை அழித்து நீதியை நிலைநாட்டும்’’ என்றார். தினகரனுக்குப் பரிசளிக்க உலோகத்தால் ஆன சிங்கம் ஒன்றை ஐந்து பேர் தூக்க முடியாமல் மேடைக்குத் தூக்கி வந்தனர். அவர்களைச் சாமி அதட்டவும், ‘‘அதைப் பிறகு வாங்கிக்கொள்கிறேன்’’ என்று தினகரன் கூறிவிட்டார்.

பிரமாண்ட மேடை, பந்தல், தோரணங்கள் எனக் கோடிகளில் இந்த நிகழ்ச்சிக்கு யார் செலவு செய்தது என்று விசாரித்தபோது, ‘‘எல்லாம்  ஆர்.கே.நகர் ஃபார்முலாதான்’’ என்றார்கள். பணப்பட்டுவாடாவுக்குத் தினகரனின் நம்பிக்கையான கணக்காளர்கள் 10-ம் தேதியே மேலூரில் வந்து தங்கிவிட்டார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்துவரும் செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், மேலூர் சாமி ஆகியோர் கொடுத்தனுப்பும் செலவுச் சீட்டுகளைக் கணக்காளர்களிடம் கொடுத்ததும், உடனே பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாம். அதைத்தவிர, அவர்கள் தங்கள் சொந்தப் பணத்தையும் செலவு செய்தார்களாம்.

மேடையில் பம்பரமாகச் சுழன்றுகொண்டிருந்த சி.ஆர்.சரஸ்வதி, விழாவுக்கு முதல் நாள் மதுரையில் பேனர்களை எடுக்கச்சொல்லி போராட்டம் நடத்திய டிராஃபிக் ராமசாமியிடம் மல்லுக்கு நின்றார். விழாப் பந்தலில் அவருடன் பலரும் செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள். நம்மிடம் பேசிய அவர், ‘‘ஆர்.கே. நகரும் மேலூரும்தான், எங்கள் சென்டிமென்ட் ஊர்கள். அதனால்தான் மீண்டும் மேலூரைத் தேர்வு செய்தார் தினகரன். மேலூரில் ஏற்பட்ட எழுச்சிதான் தமிழகம் முழுவதும் பரவியது. உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கவே இந்த ஏற்பாடு. இந்த அமைப்புமூலம் கட்சியையும் சின்னத்தையும் மீட்போம்’’ என்றார். 

அ.ம.மு.க... அச்சத்தில் அ.தி.மு.க!

பல அரசியல் தலைவர்களுக்கு மதுரை சென்டிமென்ட் இருந்தாலும், தினகரனுக்கு அது கொஞ்சம் கூடுதலாகவே உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் தினகரன் போட்டியிட்டபோது, முதலில் அவர் தங்கியது மதுரையில்தான். அதில் வெற்றி பெற்றார். தினகரன் திகார் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து முதல் ஆர்ப்பாட்டம் மதுரை பழங்காநத்தத்தில் நடந்து, அடுத்து உசிலம்பட்டி, மேலூர் என்று தமிழகமெங்கும் பரவியது. 2017 ஆகஸ்ட் மாதம் முதல் அரசியல் பொதுக்கூட்டம் நடத்தி மாஸ் காட்டியது மதுரை மேலூரில்.

ஆர்.கே.நகர் வெற்றிச் செய்தியை மதுரையிலிருந்தபோதுதான் கேட்டார். சமீபத்தில் குக்கர் சின்னம் கிடைத்த செய்தியையும் மதுரையிலிருந்தபோதுதான் கேள்விப்பட்டார். இப்படித் தினகரனின் அரசியல் வெற்றிகளுக்கு மதுரைப் பகுதியே உதவியுள்ளது. அந்த சென்டிமென்ட் அடிப்படையில், புதிய அமைப்பின் தொடக்க விழாவையும் மதுரை மேலூரில் நடத்தியுள்ளார்.

- செ.சல்மான், அருண் சின்னதுரை
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார், வீ.சதீஷ்குமார்

குக்கருக்குக் கைகொடுத்த கோர்ட்!

தொ
டர்ச்சியான சட்டப் போராட்டம் நடத்தி, தனி அமைப்பாகச் செயல்படவும் தனிச்சின்னம் பெறவும் அனுமதி வாங்கியிருக்கிறார் தினகரன். இரட்டை இலைச் சின்னத்துக்காக உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்திருக்கும் தினகரன், ‘இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும்வரை எங்களுக்குத் தனிப் பெயரும் சின்னமும் வழங்க வேண்டும்’ என டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். ‘அரசியல் கட்சிகளுக்குத்தான் சின்னமும் பெயரும் வழங்க முடியும். அமைப்பாகவோ, ஒரு கட்சியிலிருந்து பிரிந்த அணியாகவோ செயல்படும் இவர்களுக்கு அப்படி வழங்க முடியாது’ என்றது தேர்தல் ஆணையம். ஆனால், பெயரைப் பதிவுசெய்யவும் குக்கர் சின்னத்தை வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்தே, தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் தைரியமாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.