Published:Updated:

அ.தி.மு.க. ஆட்சியில் தலித் படுகொலைகள் அதிகம்: 'எவிடென்ஸ்' தரும் அதிர்ச்சி தகவல்

அ.தி.மு.க. ஆட்சியில் தலித் படுகொலைகள் அதிகம்: 'எவிடென்ஸ்' தரும் அதிர்ச்சி தகவல்
அ.தி.மு.க. ஆட்சியில் தலித் படுகொலைகள் அதிகம்: 'எவிடென்ஸ்' தரும் அதிர்ச்சி தகவல்

தலித்களுக்கு எதிரான வன்கொடுமைகள், தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் மற்றும் தலித் படுகொலைகள் குறித்து மதுரையில் உள்ள எவிடென்ஸ் அமைப்பு அண்மையில் ஒரு ஆய்வை நடத்தி இருக்கிறது. அந்த ஆய்வில், அ.தி.மு.க.வின் கடந்த ஓராண்டு கால ஆட்சியில் தலித்கள் அதிக அளவில் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிய வந்திருக்கிறது.

அ.தி.மு.க. ஆட்சியில் தலித் படுகொலைகள் அதிகம்: 'எவிடென்ஸ்' தரும் அதிர்ச்சி தகவல்

இது தொடர்பாக எவிடென்ஸ் தந்திருக்கும் அறிக்கையில், '1996 முதல் 2012 வரையிலான 17 ஆண்டுகளில், 2012ஆம் ஆண்டில் தான் மிக அதிக அளவில் தலித்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் தடுப்புச் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குனர் கதிர் விகடன் டாட்காமில் பேசும் போது, "தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக அண்மைக்காலமாக‌ ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், அந்தச் சட்டம் முறையாக அமல்படுத்தப்படவில்லை என்பது தான் உண்மை. தமிழகத்தில் ஓராண்டில் சுமார் ஏழரை லட்சம் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதில் வெறும் 0.21 சதவிகித வழக்குகள் தான் எஸ்.சி.- எஸ்.டி. சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன. இந்தச் சட்டம் சரிவர அமல்படுத்தப்படாததால், ஆண்டு தோறும் தலித்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன என்பது எங்கள் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

உதாரணமாக, கடந்த 1996 முதல் 2011 ஆம் ஆண்டு வரையில் சராசரியாக ஓராண்டுக்கு 30 முதல் 35 தலித்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், கடந்த 2012ஆம் ஆண்டில் மட்டும் மிக அதிக அளவில் தலித்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் நாங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது வெறும் 370 வழக்குகள் தான். அதிலேயே 13 பெண்கள் உள்பட 56 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடந்த 2009ல் 27 பேரும், 2010ல் 25 பேரும், 2011ல் 29 தலித்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

2012ல் கொலை செய்யப்பட்ட 56 தலித்களில் 26 பேர் பறையர், 17 பேர் பள்ளர், 7 பேர் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். மீதி 6 பேர் இதர தலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள். தலித் படுகொலை அதிகளவில் நடந்த மாவட்டம் விருதுநகர். அங்கே கடந்த ஆண்டு 7 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அடுத்தபடியாக நாகை மாவட்டத்தில் 5 பேரும், மதுரை, வேலூர், காஞ்சி மாவட்டங்களில் தலா 4 பேரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவை எல்லாம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை இன்னமும் தீவிரமாக அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன. ஆனால், தமிழகத்தில் இந்தச் சட்டம் பற்றிய அறிவு போலீஸாருக்கே இல்லாதது தான் வேதனை.

##~~##
இந்தியாவில் கடந்த 1955 ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1976ல் அது பி.சி.ஆர். சட்டம் (குடியுரிமை பாதுகாப்புச் சட்டம்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தச் சட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே பொருந்தும். பழங்குடியினருக்குப் பொருந்தவில்லை. இந்தச் சட்டம் சரியாக செயல்படாததால், இளைய பெருமாள் என்பவரது தலைமையில் ஒரு கமிட்டியை பாராளுமன்றம் அமைத்தது. அந்த கமிட்டியின் பரிந்துரையின் பேரில் 1989ல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், மிகத் தாமதமாக 1995ல் தான் இந்தச் சட்டம் நடைமுறைக்கே வந்தது. இந்தியாவிலேயே மிக காலதாமதமாக நடைமுறைக்கு வந்த சட்டம் இது தான்.
இந்தச் சட்டத்தில், தலித்கள் மீதான வன்கொடுமையை தடுப்பது,  பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி, நிவாரணம், மறு வாழ்வு, பாதுகாப்பு பெற்றுத் தருவது, ஒவ்வொரு மாவட்டத்திலும் தனி நீதிமன்றங்களை உருவாக்கி துரிதமாக நீதி வழங்குவது என மூன்று முக்கியமான அம்சங்கள் இருக்கின்றன. இவைதவிர, வன்கொடுமை வழக்குகளை குறைந்தபட்சம் டி.எஸ்.பி. அந்தஸ்திலான‌ அதிகாரி தான் விசாரிக்க வேண்டும், குற்றவாளிகளுக்கு முன்ஜாமீன் கொடுக்கக் கூடாது என்று நிறைய விதிமுறைகள் இருக்கின்றன. வேண்டுமென்றே கடமைகளைப் புறக்கணிக்கிற அதிகாரிகளைத் தண்டிக்கவும் சட்டத்தில் இடமிருக்கிறது. ஆனால் அவை நடைமுறைப்படுத்தப் படுவதில்லை.
இந்தச் சட்டம் சரியாக செயல்படுகிறதா? என்று கண்காணிப்பதற்கு மாநில அளவில் முதல் அமைச்சரைத் தலை வராகக் கொண்டு 25 உறுப்பினர்களைக் கொண்ட குழு இருக்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில் 3.11.10 அன்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தக் குழுவைக் கூட்டினார். அதன் பிறகு இதுவரையில் இந்தக் குழு கூட்டப்படவில்லை. இதேபோல மாவட்ட அளவில் கலெக்டர்களைத் தலைவராகக் கொண்ட குழுக்களும் இருகின்றன. அவைகளும் பெயரளவில் தான் இருக்கின்றன" என்று சொன்னார்.
தொடர்ந்து  பேசுகையில், ''எவிடென்ஸ் அமைப்பு சில பரிந்துரைகளை அரசுக்கு வைக்கிறது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய மறுக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 4 ன் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற சுற்றறிக்கையை தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்க வேண்டும். வன்கொடுமையைத் தடுக்கத் தவறுகிற கலெக்டர், எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என‌ கடந்த ஏப்ரல் 2011ல் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்ப வேண்டும். வன்கொடுமையில் ஈடுபடுகிற குற்றவாளிகளுக்கு முன்ஜாமீன் கொடுக்கக் கூடாது என்கிற விதி இருப்பதால், சிலர் தந்திரமாக உயர் நீதிமன்றத்தில் சரண்டர் மனு போட்டு ஜாமீன் பெறுகிறார்கள். இந்தச் செயலை அரசு அனுமதிக்கக் கூடாது.
வன்கொடுமை வழக்குகளை விசாரிப்பதற்கென்று அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும். இந்தச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வதைத் தடுப்பவர்கள் மீதும், வழக்கு விசாரணைக்கு குறுக்கீடாக இருப்பவர்கள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடிவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கும் நிதி போதுமானதாக இல்லை. தற்போது ஒதுக்கக் கூடிய நிதியை மூன்று மடங்காக‌ உயர்த்த அரசு முன்வர வேண்டும். கௌரவ படுகொலைகள், தலித் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் போன்றவற்றை முற்றிலும் ஒழிக்க முயற்சிக்க வேண்டும். இந்த குற்றங்களில் பாதிக்கப்படுபவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்த வேண்டும்" என்றும் சொன்னார் கதிர்.
கே.கே.மகேஷ்