Published:Updated:

``அ.தி.மு.க-விலிருந்து சசிகலா நீக்கம்!'' ஓ.பி.எஸ் சொன்னது உண்மையா?

``அ.தி.மு.க-விலிருந்து சசிகலா நீக்கம்!'' ஓ.பி.எஸ் சொன்னது உண்மையா?
``அ.தி.மு.க-விலிருந்து சசிகலா நீக்கம்!'' ஓ.பி.எஸ் சொன்னது உண்மையா?

"`ஓ.பி.எஸ் என்னை வந்து சந்தித்தார்' என்று அண்மையில் டி.டி.வி தினகரன் கூறியதைக்கூட எந்தவித மறுப்புமின்றி அப்படியே ஒப்புக்கொண்டார் ஓ.பன்னீர்செல்வம். இவர்களது திரைமறைவு சந்திப்பு அரசியல் அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்லாது அவர்களது ஆதரவாளர்களிடையேயும்கூட பலத்த `ஷாக்' ஏற்படுத்தியுள்ளது."

``சசிகலா, அ.தி.மு.க-வில் உறுப்பினர் கிடையாது'' என்று சத்தியம் செய்யாத குறையாக அடித்துச் சொல்லியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்! அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். 

இந்நிகழ்ச்சியில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ``அ.தி.மு.க தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர். தினகரன் தனிக்கட்சித் தொடங்கி சென்றுவிட்டார். அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. மேலும், சசிகலா அ.தி.மு.க உறுப்பினர் கிடையாது'' என்று அழுத்திக் கூறியுள்ளார்.

இந்தப் பேச்சின் பின்னணியில் சிலபல விஷயங்கள் இருப்பதாகக் கிசுகிசுக்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள். அதாவது, ``அ.தி.மு.க-வுக்கும் சசிகலா குடும்பத்தினருக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை என்ற ரீதியில் தற்போதைய ஆட்சியாளர்களது நடவடிக்கைகள் இருக்கின்றன. ஆனால், அ.தி.மு.க-வைப் பொறுத்தவரையில், எம்.எல்.ஏ-க்களில் ஆரம்பித்து உயர்மட்டத் தலைவர்கள் வரை அனைவருமே இதே சசிகலாவால் கட்சிக்குள் கொண்டுவரப்பட்டவர்கள்தாம். அந்த நன்றி விசுவாசம் எல்லோரிடத்திலும் இன்னமும் இருக்கிறது. அதனால்தான் சிலர் வெளிப்படையாகவும், பலர் மறைமுகமாகவும் சசிகலா குடும்பத்தினரோடு தொடர்பில் இருந்துவருகின்றனர்.

`ஓ.பி.எஸ் என்னை வந்து சந்தித்தார்' என்று அண்மையில் டி.டி.வி தினகரன் கூறியதைக்கூட எந்தவித மறுப்புமின்றி அப்படியே ஒப்புக்கொண்டார் ஓ.பன்னீர்செல்வம். இவர்களது திரைமறைவு சந்திப்பு அரசியல் அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்லாது அவர்களது ஆதரவாளர்களிடையேயும்கூட பலத்த `ஷாக்' ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிருப்தி அரசியல் தங்களுக்குப் பின்னடைவை உண்டாக்கும் என்ற அச்சத்தில்தான் தற்போது, `சசிகலா குடும்பத்தினருக்கும் தங்களுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை' என்ற ரீதியில் பேச ஆரம்பித்திருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

இதற்கிடையில், `பொதுச்செயலாளர் பதவியிலிருந்து மட்டும்தானே சசிகலாவை நீக்கியுள்ளீர்கள்...?' என்ற பத்திரிகையாளர்களின் சந்தேகத்துக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், `கட்சியின் விதிப்படி, ஒருவரைப் பதவியிலிருந்து நீக்கினாலோ அல்லது அவராகவே விலகிவிட்டாலோ, சம்பந்தப்பட்ட நபர் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்பட்டுவிட்டார் என்றே அர்த்தம்' என்று நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார்.

சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதாக இவர்கள் அறிவிப்பதே ஒரு மோசடி வேலை. அதாவது கட்சியிலிருந்து `பொதுச்செயலாளர்' என்ற பதவியைத்தான் நீக்கினார்களே தவிர, சசிகலாவை நீக்கம் செய்யவில்லை. அதனால்தான் அப்போதே அமைச்சர் ஓ.எஸ்.மணியன், `சின்னம்மா தற்போது சிறையில் இருப்பதால், கட்சிப் பணிகளில் அவரால் ஈடுபாடு காட்டமுடியாது என்ற காரணத்தினாலேயே இப்போதைய இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அவர் சிறைவாசம் முடித்துவிட்டு வெளியில் வந்தபிறகு மற்றவற்றைப் பார்த்துக்கொள்ளலாம்' என்றுதான் பேசியிருந்தார். 

இதுமட்டுமல்ல... சமீபத்திய தொலைக்காட்சி கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூகூட, `சின்னம்மா எப்போதுமே எங்களுக்குச் சின்னம்மாதான். சிறைவாசம் முடித்துவிட்டு வெளியே வந்தபிறகு அவர் கட்சியின் பொதுச்செயலாளர் ஆக்கப்படுவாரா என்று நீங்கள் கேட்டால், அதற்கு இப்போது என்னால் பதில் சொல்ல முடியாது. அப்போது பார்த்துக்கொள்ளலாம்' என்று மழுப்பலாகப் பதில் சொல்லியிருந்தார். மேலும், இதேபோன்றதொரு வேறொரு நிகழ்ச்சியில், அவரிடம் `சசிகலா நீக்கம்' குறித்த கேள்வி கேட்கப்பட்டபோது, `எதற்கு சசிகலாவை நீக்கம் செய்யவேண்டும்?' என்று எதிர்க்கேள்வி கேட்டார். ஆக, வெளியுலகத்துக்கு இவர்கள் காட்டிவரும் அரசியல் என்பது வேறு; திரைமறைவில் நடந்துவரும் உண்மையான அரசியல் என்பது வேறு'' என்று சொல்லி அதிரவைக்கிறார்கள் கட்சியின் உள் ரகசியம் அறிந்தவர்கள்!

தலை கிறுகிறுத்து நிற்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!

அடுத்த கட்டுரைக்கு