சமூகம்
Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

பாரதி முருகன், மணலூர்பேட்டை.

‘‘சாவித்திரியாக நடிப்பது என் அதிர்ஷ்டம்’’ என்கிறாரே நடிகை கீர்த்தி சுரேஷ்?


சாவித்திரியாக நடிப்பது வேண்டுமானால் அதிர்ஷ்டமாக இருக்கலாம். ஆனால், சாவித்திரியாக வாழ்வது அதிர்ஷ்டம் அல்ல. அவரது இறுதிக் காலம் மிகச் சோகமானது. அதைப் படத்துக்குள் கொண்டுவருவது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல!

கழுகார் பதில்கள்!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

‘‘ராஜீவ் கொலையாளிகளை ராகுல் காந்தி மன்னித்து விட்டதாகக் கூறுவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது’’ என்று சுப்பிரமணியன் சுவாமி கூறுவது?

ராஜீவ் கொலைச் சதி குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷனில், சுப்பிரமணியன் சுவாமி, சந்திராசாமி உள்ளிட்டோர் மீது இந்தக் கொலை தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. அவற்றைத் தீர்க்க சுப்பிரணியன் சுவாமி முதலில் முன்வரவேண்டும். !

எஸ்.பூவேந்த அரசு, பெரியமதியாக்கூடலூர்.

தமிழகம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இனி நாம் செய்ய வேண்டியது என்ன?

கடந்த 10 ஆண்டு காலமாக தமிழக நிர்வாக அமைப்பு ஒருவித தேக்க நிலையை அடைந்துள்ளது. அதற்கான காரணம் முதலில் ஆராயப்பட வேண்டும். எந்தெந்த விதங்களில் இப்படித் தேக்கம் அடைந்தது என்பதை யெல்லாம் வரிசைப்படுத்த வேண்டும். இதன்மூலம் மட்டுமே, தமிழகம் தலைநிமிர ஆக்கபூர்வமான முன்னெடுப்பு களைச் செய்ய முடியும்.

எதிர்காலத்தைச் சரிசெய்ய முதலில், கடந்த காலத்தை உணர வேண்டும்.அனைத்துப் பிரச்னைகளையும் அரசியலோடு மட்டும் பார்க்கக் கூடாது. இந்த இரண்டு தெளிவுகளும் முதலில் அவசியமானவை. அரசுக்குத் தொலைநோக்குப் பார்வை இல்லை. பட்ஜெட்தான் ஆக்கபூர்வமான எதிர்காலத்துக்கான கருவி. அதை, கடமையே எனச் செய்கிறார்கள். இலவசங்களை முன்னிறுத்தி, மக்களை ஓட்டு வங்கியாகத்தான் பார்க்கிறார்களே தவிர, மாநிலத்தின் முன்னேற்றம் பற்றிய அக்கறை இல்லை. இது மாறவேண்டும்.

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.

இமயமலைக்கு ஆன்மிகப் பயணம் செல்லும் பழக்கம் ரஜினியைப் போல, அரசியல் தலைவர்களில் வேறு யாருக்கு உண்டு?


அரசியல் தலைவர்கள் பலர் ஆன்மிகப் பயணம் செல்வதுண்டு. ஆனால், இமயமலைக்குச் செல்பவர் ரஜினி மட்டும்தான். அவரால் குருநாதராக மதிக்கப்படுபவர் அங்கு இருக்கிறார். அதனால்தான், இமயமலைக்குச் செல்வதை அவர் வழக்கமாக வைத்துள்ளார்.

பிரதீபா ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை.


அ.தி.மு.க-வைக் கைப்பற்றும் முயற்சியில் தினகரன் தோல்வியடைந்துவிட்டது உறுதிதானே?


சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடந்து முடிந்தால்தான் சொல்ல முடியும்.

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.

‘‘மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்’’ என்கிறார் கமல். ஆனால் ரஜினியோ, ‘‘மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டாம்’’ என்கிறார். இவ்விரு கருத்துகளில் எது ஏற்புடையது?

பேரறிஞர் அண்ணா சொன்னார்: மாணவர்களுக்கு அரசியல் என்பது அத்தை மகள் மாதிரி. சுற்றிச் சுற்றி வரலாமே தவிர, தொட்டுவிடக் கூடாது!

கழுகார் பதில்கள்!

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

‘‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி-க்கள் ராஜினாமா செய்ய வேண்டும்’’ என்று கமல் கோரிக்கை வைத்துள்ளாரே?


அவர் எம்.பி-யாகவும் இல்லை; அவரிடம் எம்.பி-க்களும் இல்லை. அதனால் சொல்லிவிட்டார்.

செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.

ஆளுமை, நேர்மை... ஆட்சியாளர்களுக்கு இந்த இரண்டில் எது முக்கியம்?

இரண்டுமே முக்கியம். நேர்மையாக இருப்பவர்களிடம் ஆளுமைத் திறன் இருப்பதில்லை; ஆளுமைத் திறன் படைத்தவர்கள் அனைவருமே நேர்மையாளர்களாக இருப்பதும் இல்லை. வல்லவனாக இருப்பவர், நல்லவனாகவும் இருக்க வேண்டும் அல்லவா? எனவே இரண்டுமே முக்கியம்.

தாமஸ் மனோகரன், புதுச்சேரி.

கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரம் யாருடையது?


 எல்லாப் பெற்றோரும் கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரம் உடையவர்கள்தான்!

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

கழுகார் பதில்கள்!

‘‘ரஜினி பல விஷயங்களுக்குக் கருத்துச் சொல்வதில்லை’’ என்று கமல் ஆதங்கப்பட்டிருப்பது குறித்து..?

இதை ‘ஆதங்கம்’ என்று சொல்ல முடியாது; ‘அக்கறை’ என்றும் சொல்ல முடியாது. ‘சீண்டல்’ என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அ.ச.நாராயணன், பாளையங்கோட்டை.


குரங்கணி காட்டுத்தீயில் கருகிய இளந்தளிர்கள் பற்றி..?


இந்த நாட்டின் நிர்வாக அமைப்பு எவ்வளவு ஒழுங்கீனமாக இருக்கிறது, வனத்துறையை எவ்வளவு மோசமாக வைத்திருக்கிறோம் என்பதை யெல்லாம் தங்களின் உயிரைக் கொடுத்து அவர்கள் உணர்த்திவிட்டுப் போயுள்ளனர். ‘ட்ரெக்கிங்’ என்ற பெயரால் இவர்களை அழைத்துச் செல்லும் நிறுவனங்களின் செயல்பாடுகளில் தொடங்கி, வனத்துறை அனுமதி கொடுத்தது வரை எல்லாவற்றிலும் சட்டமீறல் களையும் விதிமீறல்களையும் வரிசைப்படுத்தினால் சொல்லிக்கொண்டே போகலாம். இப்படித்தான் எல்லா விஷயங்களுமே நடக்கின்றன. பட்டவர்த்தனமாக நடக்கின்றன. அதிகாரிகளின் அங்கீகாரத்துடன் நடக்கின்றன. பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் நடக்கின்றன. ஆங்கிலேயர் காலத்துச் சட்டங்களில் மிகமிக இறுக்கமானது வனத்துறைச் சட்டம். அதையே முடிந்தவரை சிதைத்துச் சின்னாபின்னமாக்கி விட்டார்கள்.

‘அந்த வனத்துக்குள் காட்டுத்தீ ஏற்பட்டிருப்பது பற்றித் தகவல் சொன்னோம்’ என மத்திய அரசின் ஃபாரஸ்ட் சர்வே ஆஃப் இந்தியா அமைப்பு சொல்கிறது. ‘எங்களுக்குத் தகவல் வரவே இல்லை’ எனத் தமிழக அரசு சொல்கிறது. இத்தனை உயிர்களை இழந்தபிறகும், ‘இனி இப்படி நடக்காமல் இருக்க என்ன வழி’ எனத் தீர்வுகளைத் தேடாமல், மூடி மறைக்கும் வேலையில்தான் குறியாக இருக்கிறார்கள்.

கழுகார் பதில்கள்!

தற்போதைய தேர்தல் அரசியலில், ஒரு தொகுதியில் நின்று பெரும் தொகை செலவு செய்துதான் ஒருவர் வெற்றி பெறுகிறார். வெற்றி பெற்றபின், தான் செலவு செய்த பணத்தை மீண்டும் சம்பாதிக்க வேண்டும் என்றுதானே அவர் நினைப்பார்? அவர் எப்படி மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பார்? இதை ஏன் அரசியல் கட்சிகள் புரிந்துகொள்ள மறுக்கின்றன?

ரசியல் கட்சிகளுக்கா இது புரியவில்லை. நீங்கள் சொல்லும் அனைத்தையுமே செய்பவை அரசியல் கட்சிகள்தான். ஒரு காலத்தில் சொல்வாக்கு படைத்தவர்களைக் கட்சிகள் நிறுத்தும். இப்போது செல்வாக்குப் படைத்தவர்களைத்தான் நிறுத்துகிறார்கள். ‘சாதாரண, சாமான்யத் தொண்டர்களுக்கும் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை’ என்று ஆக்கியதே கட்சிகள்தான். ‘உன்னால் செலவு செய்ய முடியாது, அவருக்குக் கொடுப்போம்’ என்று தலைவர்கள் தட்டிக்கழித்து விடுகிறார்கள். வேட்பாளர் ஆவதற்குப் பணம் கொடுத்து, தேர்தல் பிரசாரத்துக்குச் செலவு செய்து, வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வெற்றிபெற்றுவரும் ஒருவர், சம்பாதிக்க மட்டும்தான் செய்வார். மக்களுக்கு நல்லது செய்யமாட்டார். அவர் தனக்கு மட்டும் சம்பாதித்தால் போதாது; தன்னுடைய கட்சிக்கும் கட்சிக்காரர்களுக்கும் சேர்த்துச் சம்பாதித்துத் தர வேண்டும். எவ்வளவு காலம் பதவி இருக்கும் என்பது நிச்சயமில்லை என்பதால், குறுகிய காலத்துக்குள் சம்பாதித்துவிட வேண்டும். இதுதான் இன்றைய சூழல். அதாவது, அரசியல் சுழல். இந்தக் குப்பையிலிருந்துதான் மாணிக்கங்களைத் தேட வேண்டும்.

 கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,  757,
அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!