Published:Updated:

`பிரதமர் மோடியின் மூன்று மந்திரங்கள் இதுதான்!' - மருத்துவ மாணவர்களிடம் சுட்டிக்காட்டிய வெங்கைய நாயுடு

`பிரதமர் மோடியின் மூன்று மந்திரங்கள் இதுதான்!' - மருத்துவ மாணவர்களிடம் சுட்டிக்காட்டிய வெங்கைய நாயுடு
`பிரதமர் மோடியின் மூன்று மந்திரங்கள் இதுதான்!' - மருத்துவ மாணவர்களிடம் சுட்டிக்காட்டிய வெங்கைய நாயுடு

`பிரதமர் மோடியின் மூன்று மந்திரங்கள் இதுதான்!' - மருத்துவ மாணவர்களிடம் சுட்டிக்காட்டிய வெங்கைய நாயுடு

`சிகிச்சைக்காக உங்களிடம் வரும் நோயாளிகளைப் புன்னகையுடன் அணுகுங்கள். வெறும் ஆய்வக முடிவுகளைக் கொண்டு அவர்களை அணுக வேண்டாம்' என மருத்துவ மாணவர்கள் மத்தியில் பேசினார் இந்திய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் இன்று 9-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி  வெங்கைய நாயுடு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, ஆளுநர் கிரண் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 466 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அப்போது பேசிய வெங்கைய நாயுடு, ``நாட்டின் முதல் பிரதமர் பெயரில் உருவான இந்த கல்லூரியின் பெயரைச் சுருக்கித்தான் ஜிப்மர் என்று வைத்திருக்கிறோம். மகாத்மா காந்தி சாலை, எம்.ஜி சாலை எனவும் சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையை எஸ்.வி.பட்டேல் சாலை என்றும் சுருக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன். இதனால் தலைவர்களின் பெயர்களை எந்த நோக்கத்துக்காகச் சூட்டுகிறோமோ அந்த நோக்கமே மாறிவிடுகிறது. அதனால் தலைவர்களின் பெயர்களுடைய சாலைகள்,  நிறுவனங்கள்  அனைத்தும் முழுப் பெயரில் இருக்க வேண்டியது மிக அவசியம். கல்வியில் புதுமை, நோயாளிகள் சார்ந்த ஆராய்ச்சி, மக்களின் சுகாதாரம் மற்றும் உயர்ந்த சேவை போன்றவற்றை தொலைநோக்கு சிந்தனையாகக் கொண்டு செயல்பட நீங்களே, இலக்கு நிர்ணயித்துப் பணியாற்ற வேண்டும். கலாசாரம், மதம், மொழி என அனைத்திலும் வேறுபட்டிருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாட்டில் உயர் தரக் கல்வியைப் பெறும் குறிப்பிட்ட சில மாணவர்களாக நீங்கள் திகழ்வது உங்களின் பாக்கியம்" என்றவர், 

`` உங்களது வாழ்க்கையில் பெற்றோர், தாய்நாடு, தாய்மொழி, கல்வி கற்பித்த ஆசிரியர்கள் ஆகியோரை மறக்கக்கூடாது. உங்கள் வீடுகளில் தாய்மொழியிலேயே உரையாடுங்கள். தாய்மொழி நம் கண்ணாகவும் பிற மொழிகள் அதன்மேல் அணியும் கண்ணாடிகளாகவும் மட்டுமே இருக்க வேண்டும். தாய்மொழியைத் தவிர்த்துவிட்டுக் கண்ணாடி அணிந்து பயனில்லை. திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென்றால் வாழ்நாள் முழுக்க கற்றல் அவசியம். கல்விகற்று வெளிநாடு சென்றாலும் தாய்நாட்டை மறக்காதீர்கள்.  அதிக மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் மருத்துவ சேவைகள் அதிகம் தேவைப்படுகின்றன. எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற  மருத்துவமனைகளுக்குச் செல்லும்போது அதிக மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தரமான மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைக்காதது ஒருபுறம் என்றால், குறைந்த செலவில் உயர் சிகிச்சைகளும் கிடைப்பதில்லை. அதனால், அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஜன் ஆரோக்யா திட்டத்தை  நல்ல முறையில் செயல்படுத்தினால் மருத்துவசேவையில் இந்தியாவில் பெரும்புரட்சி ஏற்படும். 

அரசியல் என்பது தேர்தலோடு முடிந்து விடும். அதன்பிறகு மக்களின் தேவைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவது அவசியம். பிரதமர் மோடியின் மூன்று மந்திரங்களான சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகிய மூன்று மந்திரங்களைக் கொண்டு இளைய தலைமுறையினர் செயல்படுவது அவசியம். சமூகத்தைக் காக்கும்  மிகப்பெரிய பொறுப்பு மருத்துவர்களுக்கு உண்டு. தேவையில்லாத சோதனைகளை நோயாளிகளுக்கு பரிந்துரைக்காதீர்கள். சிகிச்சைக்காக உங்களிடம் வரும் நோயாளிகளைப் புன்னகையுடன்அணுகுங்கள். வெறும் ஆய்வக முடிவுகளைக் கொண்டு அவர்களை அணுகாமல் சிறிது நேரமாவது ஆறுதலுடன் பேசுங்கள். மனதளவில் அவர்களுக்கு தெம்பை ஊட்டியபின் மருந்துகளைப் பரிந்துரையுங்கள்” என்றார் விரிவாக.

இதற்கு முன்னதாக, பட்டமளிப்பு விழாவில் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா,  `` நாடு முழுவதும் விரைவில் 13 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுவதோடு 70 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றப்படும். மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஒன்று என்ற விகிதத்தில் 24 மருத்துவக் கல்லூரிகள் புதியதாக தொடங்கப்படும். மேலும், நாடு முழுவதும் 20 புற்றுநோய் ஆராய்ச்சி மையங்கள் அமைக்க உள்ளோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு