சமூகம்
Published:Updated:

பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!

‘‘சசிகலா புஷ்பா திருமணம் சட்டப்படி குற்றம்!’’

அ.
தி.மு.க எம்.பி-யான சசிகலா புஷ்பா மறுமணம் செய்யப்போவதாக செய்திகள் றெக்கை கட்டியச் சூழலில், ‘‘சசிகலா புஷ்பா திருமணம் செய்துகொள்ளவிருக்கும் ராமசாமி, என் கணவர். அவரை என்னுடன் சேர்த்துவையுங்கள். இல்லையெனில், நானும் என் குழந்தையையும் உயிரிழக்க அனுமதி தாருங்கள்’’ என மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர்மல்க மனு அளித்தார், மதுரை மாகாளிப்பட்டியைச் சேர்ந்த சத்யபிரியா.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

சத்யபிரியாவிடம் பேசினோம். ‘‘புரோக்கர் மூலமாக எனக்கு மாப்பிள்ளை பார்த்தனர். அப்போது, ‘நீதிபதி மாப்பிள்ளை’ என ராமசாமியை அறிமுகம் செய்தார்கள். ‘என் மனைவி ஒரு விபத்தில் இறந்துவிட்டார். என் மகள் அஞ்சலியை நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று அவர் சொன்னார். எங்கள் வீட்டில் 100 பவுன் நகை, ரூ.10 லட்சம் ரொக்கம் உள்பட சீர்வரிசை செய்தனர். திருமணம் முடிந்து டெல்லிக்குச் சென்ற பிறகுதான், அவர் நீதிபதி அல்ல... ஐ.ஏ.எஸ் அகாடமி ஒன்றை நடத்திவருகிறார் என்பது தெரியவந்தது. நான் கர்ப்பமாகி மதுரைக்கு வந்துவிட்டேன். 2016 டிசம்பர் 23-ல் பெண் குழந்தை பிறந்தது. அதன்பின் போனில் தொடர்புகொள்வதை நிறுத்தினார். பிறகு, விவாகரத்து கேட்டு மிரட்டினார். அவரால் எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் பல கொடுமைகள் அரங்கேறின. திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தோம். அவர்மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, என் கணவருக்கும் சசிகலா புஷ்பா எம்.பி-க்கும் டெல்லியில் திருமணம் என்று செய்தி வந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அவர்களின் திருமணம் சட்டப்படி குற்றம்’’ என்றார் அவர்.

வாக்குறுதி பிரசாரம்!

ரா
மநாதபுரம் மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டனின் ‘அதிரடி’ நடவடிக்கைகளால் அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் நொந்துபோயுள்ளனர். அதனால், ராமேஸ்வரம் நகராட்சி முன்னாள் சேர்மன் அர்ச்சுனன் உள்ளிட்ட பலர், தினகரன் அணிக்கு மாறுகிறார்கள். இது, அமைச்சர் மணிகண்டனுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘நம் ஆட்சி இருக்கும் வரையில் நிர்வாகிகளைத் தக்க வைக்க வேண்டும்’ என்ற கவலை அமைச்சர் தரப்புக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் தினகரன் சுற்றுப்பயண அறிவிப்பு வெளியாக, அது அமைச்சர் தரப்புக்கு இன்னும் கலக்கத்தை ஏற்படுத்தியது. நடராசனின் மறைவால் தினகரன் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமைச்சரின் ஆதரவாளர்கள் சிலர் இணைந்து சென்று, ‘‘தினகரன் அணிக்குப் போகாதீர்கள். உங்களுக்குத் தேவையானதை நாங்கள் செய்கிறோம்’’ என்று கட்சிக்காரர்களுக்கு வாக்குறுதி அளித்து வருகின்றனர்.தேர்தல் பிரசாரத்துக்குச் செல்வதுபோல இதற்காக, கும்பல் கும்பலாக நிர்வாகிகள் தினமும் மாவட்டத்தைச் சுற்றி வருகின்றனர்.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

பாட்டு பாடிய ஸ்டாலின்!

.ராசா எழுதிய ‘2ஜி: அவிழும் உண்மைகள்’ என்ற தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. 2ஜி சுழலில் சிக்கி மீண்ட ஆர்ப்பரிப்பு, தி.மு.க-வினர் அத்தனை பேரின் முகங்களிலும் தெரிந்தது. ஸ்டாலினின் உற்சாகம் வேற லெவல். ‘ராஜா கைய வச்சா, அது ராங்கா போனதில்ல...’ என்று ஸ்டாலின் பாட, ராசாவின் முகத்தில் வெட்க மின்னல். ஆரவாரத்தில் அரங்கம் அதிர்ந்தது. மேலும், “இது புத்தக வெளியீட்டு விழா மட்டுமல்ல. ஆ.ராசாவும், என் தங்கை கனிமொழி யும் வெற்றிபெற்று விடுதலை பெற்றிருக்கும் விழா. ஒரே வரியில், இது தி.மு.க-வின் வெற்றி விழா” என்றார் ஸ்டாலின்.

முன்னதாகப் பேசிய ஆ.ராசா, “2ஜி வழக்கு பற்றி சிபி.ஐ., உச்ச நீதிமன்றம், சி.ஏ.ஜி முதலான எந்த அமைப்புமே என் தரப்பைக் கேட்கவில்லை. ‘ஆ.ராசா 3,000 கோடி ரூபாயை மனைவி பெயரில் வெளிநாட்டில் பதுக்கியிருக்கிறார்’ என்று ஒரு ஆங்கில நாளிதழில் தலைப்புச் செய்தி எழுதினார்கள். அப்போது ‘வெளி நாட்டிலோ, உள்நாட்டிலோ என் பெயரில் ஒரு டாலர் இருந்தாலும், இந்த வழக்கை நான் நடத்தாமல் வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிப்பேன்’ என்றேன். நான் எழுதிய இந்தப் புத்தகத்துக்கு சி.ஏ.ஜி-யாக இருந்த வினோத் ராய் உள்பட இதுவரை யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது தி.மு.க-வின் வெற்றி’’ என்றார்.

‘வழக்கைச் சொல்லியே வருடங்களைக் கடத்தலாம்!’

‘ம
த்திய அரசால், புதுச்சேரிக்கு நியமிக்கப்பட்ட மூன்று பிஜே.பி எம்.எல்.ஏ-க்களின் நியமனம் செல்லும்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்திருப்பது புதுவை காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 2016-ல் புதுச்சேரியில் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் கட்சி, நியமன எம்.எல்.ஏ மற்றும் வாரியத் தலைவர் பதவிகளை நிரப்பாமல் காலம் தாழ்த்தி வந்தது. ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில், அதைப் பயன்படுத்திக் கொண்ட மத்திய அரசு, பி.ஜே.பி-யைச் சேர்ந்த சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோரை எம்.எல்.ஏ-க்களாக நியமித்து உத்தரவிட்டது.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார் முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் லட்சுமி நாராயணன். அந்த வழக்கில்தான் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு, இவர்களின் நியமனம் செல்லும் என மார்ச் 22-ம் தேதி தீர்ப்பளித்தது. இப்போது, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போகிறது புதுச்சேரி அரசு.

ஆனால், ‘‘புதுச்சேரி அரசிதழில் எம்.எல்.ஏ-க்களின் நியமனம் வெளியானபோதே, அது உறுதி செய்யப்பட்டுவிட்டது. மேல் முறையீடு செய்தாலும் நியமன எம்.எல்.ஏ-க்களுக்குச் சாதகமாகத்தான் தீர்ப்பு வரும் என்று அரசுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், வழக்கு நிலுவையில் இருக்கிறது என்று சொல்லியே ஐந்து வருடங்களைக் கடத்திவிட நினைக்கிறார்கள்’’ என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

- இரா.மோகன், ஜெ.முருகன், அருண் சின்னதுரை, ர.முகமது இல்யாஸ்
படங்கள்: வி.சதீஷ்குமார், அ.குரூஸ்தனம், வி.ஸ்ரீனிவாசுலு