சமூகம்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: பன்னீரை மாட்டி விட்ட சசிகலா!

மிஸ்டர் கழுகு: பன்னீரை மாட்டி விட்ட சசிகலா!
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு: பன்னீரை மாட்டி விட்ட சசிகலா!

மிஸ்டர் கழுகு: பன்னீரை மாட்டி விட்ட சசிகலா!

‘‘உமது நிருபருக்கு நான் சபாஷ் சொன்னதாகச் சொல்லும்” என்றபடியே கழுகார் உள்ளே நுழைந்தார்.

‘‘ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைப் படலத்தில் நடக்கும் விஷயங்களை எழுதியதற் காகவா?’’ என்று கேட்டோம்.

‘ஆமாம்’ எனத் தலையாட்டிய கழுகார், ‘‘அந்த விவகாரம்தான் இப்போது ஆளும்கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது’’ என்றபடி, செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார். ‘‘ஜெ. உடல்நிலை, சிகிச்சை, மரணம் குறித்து சசிகலா தரப்பில் சொல்லியிருக்கும் தகவல்கள் அனைத்தையும் கடந்த இதழில் உமது நிருபர் எழுதியிருந்தார். விசாரணை கமிஷனில் சசிகலா சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட 55 பக்க பிரமாணப் பத்திரத்தில் பல தகவல்களை அவர் பதிவு செய்துள்ளார். அதில், அவர் குறிப்பிட்டுள்ள சில தகவல்கள் மட்டும்தான் இன்றைய ஆட்சியாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளன. குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வம் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.’’

மிஸ்டர் கழுகு: பன்னீரை மாட்டி விட்ட சசிகலா!

‘‘ஏன்?’’

‘‘இதுவரை ஓ.பன்னீர்செல்வம் என்ன சொல்லி வந்தார்? ‘மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் இறப்பு வரை ஜெயலலிதாவை நான் பார்க்கவில்லை. எங்களைப் பார்க்கவிடவில்லை. உள்ளே என்ன நடந்தது என்றே எனக்குத் தெரியாது. எப்படி இருந்தார் என்றே தெரியாது. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. அதனால், விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்’ என்று பன்னீர்செல்வம் சொல்லி வந்தார். அதற்காகத்தான் தர்மயுத்தம் நடத்துவ தாகச் சொன்னார். எடப்பாடி அணியுடன் இணைவதற்கு அவர் வைத்த நிபந்தனைகளில், ஜெ. மரணம் தொடர்பான நீதி விசாரணைதான் முக்கியமானது. ‘ஜெ. மரணம் தொடர்பாக விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும்’ என்ற அறிவிப்பை, 2017 ஆகஸ்ட் மாதம் எடப்பாடி வெளியிட்டபிறகே, இரண்டு அணிகளின் இணைப்பு சாத்தியமானது. இந்தச் சூழ்நிலையில் தான், ஜெயலலிதா நல்ல நிலையில் இருந்தபோது, அவரைப் பன்னீர் பார்த்தார் என்பதை சசிகலா தனது பிரமாணப் பத்திரத்தில் ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார்.’’

‘‘அதில் என்ன இருக்கிறது?’’

‘‘சசிகலா அந்தப் பிரமாணப் பத்திரத்தில்,  ‘2016 செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். 23-ம் தேதி முதல் 27-ம் தேதிக்குள் அவருக்கு ஸ்கேன் எடுப்பதற்காக இரண்டாவது மாடியிலிருந்து முதல் மாடிக்கு அழைத்து வந்தார்கள். அப்போது, வழியில் நின்றிருந்த தன் தனிப் பாதுகாவலர்களான வீரபெருமாள், பெருமாள்சாமி ஆகியோரிடம் ஜெயலலிதா பேசினார். ‘எனக்கு எதுவும் பிரச்னை இல்லை. டாக்டர்கள் பார்த்துட்டு இருக்காங்க. சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவேன்’ என அவர்களிடம் ஜெயலலிதா சொன்னார். அப்போது அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர் மற்றும் கழக நிர்வாகிகள் சிலர் அங்கே இருந்தனர்’ என்று சசிகலா குறிப்பிட்டுள்ளார். இதேபோல, ‘நவம்பர் 19-ம் தேதி எம்.டி.சி.சி.யூ வார்டிலிருந்து ஜெயலலிதாவைத் தனி அறைக்கு மாற்றினர். அப்படி மாற்றுவதற்காக அவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து அழைத்துவந்தபோது அமைச்சர் நிலோபர் கபில், மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் பார்த்தனர். அப்போது, ஜெயலலிதாவை அவருடைய அனுமதியுடன் வீடியோ எடுத்தேன்’ என்று சசிகலா சொல்லியிருக்கிறார். அப்படிப் பார்த்தால், ஜெயலலிதாவைப் பன்னீர்செல்வம் பார்த்துள்ளார் என்றே தெரிய வருகிறது. அந்த அடிப்படையில் பன்னீர் செல்வத்தை அழைத்து விசாரிக்க வேண்டும் என சசிகலா தரப்பில் ஆணையத்தில் வலியுறுத்தப் போகிறார்கள்.’’

‘‘ஓஹோ!’’

‘‘அப்படி ஆணையத்திலிருந்து சம்மன் அனுப்பி விசாரிக்கும்போது, பன்னீர்செல்வம் இரண்டு பதில்களைத்தான் சொல்ல முடியும். ‘ஜெய லலிதாவைப் பார்க்கவில்லை’ என்றால்,  மருத்துவ மனைக்கு அவர் வந்த வீடியோ காட்சிகள் எதையாவது சசிகலா தரப்பு ரிலீஸ் செய்யலாம். ‘பார்த்தேன்’ என்று சொன்னால், ஜெயலலிதாவின் மரணம் குறித்து அவர் அளித்த புகார்கள் அனைத்தும் பொய் என்று ஆகிவிடும். இப்படிப் பட்டச் சிக்கலில் பன்னீரை மாட்டி விட்டுள்ளார் சசிகலா.’’

மிஸ்டர் கழுகு: பன்னீரை மாட்டி விட்ட சசிகலா!

‘‘சாமர்த்தியமான திட்டம்!’’

‘‘சசிகலா பரோலில் வெளிவந்துள்ள நிலையில், தங்க தமிழ்ச்செல்வன் இதுகுறித்துப் பேசியதை இந்த இடத்தில் கவனிக்க வேண்டும். ‘ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி விசாரித்தால் உண்மைகள் வெளிவராது. ஓய்வுபெற்ற நீதிபதியால் பிரதமர், கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் உள்பட அனைவரையும் அழைத்து விசாரிக்க முடியாது. ஜெயலலிதா மரணம் குறித்து இவர்கள் அனைவரிடமும் விசாரிக்க வேண்டும். அப்போதுதான் உண்மைகள் வெளிவரும். எனவேதான், நாங்கள் சி.பி.ஐ விசாரணை கேட்கிறோம்’ என்று தங்க தமிழ்ச்செல்வன் தடாலடியாகப் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் மறைமுகமாகக் குறிப்பிடுவது பன்னீரைத்தான் என்கிறார்கள் சசிகலா தரப்பில்!’’

மிஸ்டர் கழுகு: பன்னீரை மாட்டி விட்ட சசிகலா!

‘‘என்ன செய்வார் பன்னீர்?’’

‘‘பொறுத்திருந்து பார்க்கலாம். சசிகலா சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப் பட்டுள்ள நிலையில், ‘ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வார்டில் இருந்த மற்ற நோயாளிகள் வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டனர். அந்த வார்டில் ஜெயலலிதா மட்டுமே தங்கியிருந்தார். அதனால், அந்தப் பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமராக்கள் அனைத்தையும் அந்த நாள்களில் நிறுத்தி வைத்திருந்தோம். எனவே 75 நாள்கள் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற காட்சிகள் எதுவும் எங்களிடம் இல்லை’ என்று அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி மார்ச் 22-ம் தேதி திடீரென சொன்னார். ‘யாரைக் காப்பாற்ற அப்போலோ தரப்பில் இப்படிச் சொல்கிறார்கள்’ என்பது தமிழக அரசியலில் புதிய விவாதப்பொருளாகியிருக்கிறது.’’
 
‘‘நடராசன் மரணத்துக்கு நேரடியாக அ.தி.மு.க-விலிருந்து ரியாக்‌ஷன் இல்லை. மறைமுகமாகக்கூட யாரும் இரங்கல் தெரிவிக்க வில்லையா?’’

மிஸ்டர் கழுகு: பன்னீரை மாட்டி விட்ட சசிகலா!

‘சசிகலா குடும்பத்தால் அதிகம் ஆதாயம் அடைந்த டெல்டா பகுதி அமைச்சர்கள்கூட இரங்கல் தெரிவிக்கவில்லை. ஆனால், தஞ்சையில் உள்ளூர் நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டி, ஃப்ளெக்ஸ், பேனர்கள் வைத்தனர். சசிகலா குடும்பத்துக்கு வேண்டிய அனைத்தையும் செய்தனர். ஆனால், எதிலும் அவர்களுடைய பெயர்கள் இடம்பெற வில்லை. அதுபோல, திவாகரனிடம் பல எம்.எல்.ஏ-க்களும் சில அமைச்சர்களும் பேசியுள்ளனர். திவாகரனே வெளிப்படையாக அதைச் சொல்லவும் செய்தார். ‘இவர்கள் பேசியது எங்களுக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தது. நம் ஆட்சி வந்ததும், அவர்களுக்கு நல்லது நடக்கும்’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் குறிப்பிட்டாராம்.’’

‘‘தஞ்சாவூரில் சசிகலா என்ன செய்கிறார்?’’

‘‘அவர் தங்குவதற்கு பரோல் அனுமதி வாங்கிய நடராசன் வீட்டில்தான் தங்கியுள்ளார். அங்கு தான், 15 நாள்களும் அவர் தங்கியிருக்க வேண்டும். அந்த வீட்டில் நடராசனின் சகோதரர்கள், பழனிவேல், ராமச்சந்திரன், சாமிநாதன் ஆகியோரும் அவர்களுடைய குடும்பத்தினரும் இருக்கிறார்கள். தினகரன், அவருடைய மனைவி அனுராதா ஆகியோரும் அந்த வீட்டில்தான் இருக்கின்றனர். விவேக்கும் இருக்கிறார். ஆனால், பட்டும்படாதது போல் விவேக் இருக்கிறார். யாரிடமும் பேசவில்லை. கடந்தமுறை சசிகலா பரோலில் வந்தபோது, அனைத்து ஏற்பாடு களையும் விவேக் செய்தார். ஆனால், இந்தமுறை அந்த வாய்ப்பில் எந்த இடத்தையும் விவேக்குக்குத் தினகரன் கொடுக்கவில்லை. அனைத்துப் பொறுப்புக்களையும் தினகரனே எடுத்துக்கொண்டார்.’’

மிஸ்டர் கழுகு: பன்னீரை மாட்டி விட்ட சசிகலா!

‘‘தஞ்சையில் தினகரன் உண்ணாவிரதம் இருக்கப்போவது உறுதிதானே?’’

‘‘ஆமாம். அதற்கான வேலைகளை தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்டவர்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார் கள். ஆனால், ‘துக்க நேரத்தில் அரசியல் செய்ய வேண்டுமா? அதைக் கொஞ்சம் ஒத்திப் போடலாமே?’ என்று சிலர் தினகரனிடம் கேட்டார்களாம். அதற்கு அவர், ‘சித்தப்பா மரணத்துக்கு முன்பே, உண்ணாவிரதம் திட்ட மிடப்பட்டு விட்டது. அதனால், அதில் மாற்றம் இல்லை. தஞ்சை திலகர் திடலில் இதுவரை மாபெரும் உண்ணாவிரதம் எதுவும் நடைபெற்ற தில்லை. அங்கு காவிரிக்காக உண்ணாவிரதம் இருந்து, அதையும் ஒரு சாதனையாக்கிட வேண்டும்’ என்றாராம்.’’

‘‘அது சரி.. தினகரனை யாரோ முக்கியமான நபர் சென்னையில் சந்தித்தாராமே?’’

‘‘பிரதமர் அலுவலகத்தில் எல்லா பிரிவுகளையும் ஆய்வு செய்து ரிப்போர்ட் கொடுக்க அதிகாரிகள் இருப்பார்கள். அவர்களில் ஒரு முக்கியமான அதிகாரியிடம் தமிழக அரசியல் ஆய்வு ஒப்படைக்கப் பட்டிருந்தது. இதுவரை நடந்த நிகழ்வுகள், ஆர்.கே.நகர் தேர்தல், தினகரன் போராட்டம் என அனைத்தையும் தொடர்ந்து கவனித்துவருபவர் அவர். கடந்த வாரம் அவர் சென்னை வந்திருந்தபோது, தினகரனை முதல்முறையாக ரகசியமான இடத்தில் சந்தித்து சில விஷயங்களைப் பேசினார். அது முதல்கட்டப் பேச்சுவார்த்தைதான். இனிமேல், இதுபோல் பிரதமர் மோடி அலுவலகத்திலிருந்து தினகரனுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.’’

மிஸ்டர் கழுகு: பன்னீரை மாட்டி விட்ட சசிகலா!

‘‘ஈரோடு மண்டல தி.மு.க மாநாடு களைகட்டியுள்ளதே?’’

‘‘ஆமாம். இந்த மாநாட்டுக்குச் சில பெருமைகள் உண்டு. ஸ்டாலின் செயல் தலைவரான பிறகு நடக்கும் முதல் தி.மு.க மாநாடு இது. கருணாநிதி பங்கேற்காத முதல் தி.மு.க மாநாடும் இதுதான். மாநாட்டு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தபோது, கருணாநிதி திடீரென அறிவாலயம் வந்தார். மாநாட்டு விளம்பரங்களை அவரிடம் ஸ்டாலின் காட்டினார். ஸ்டாலின் தன் மொபைல் போனில், மாநாட்டு விளம்பர வீடியோவைக் காட்டியபோது, குழந்தைச் சிரிப்புடன் அதைக் கருணாநிதி ரசித்தார்’’ என்று சொன்ன கழுகார் பறந்தார்.

படங்கள்:  சு.குமரேசன், மா.அரவிந்த்

மிஸ்டர் கழுகு: பன்னீரை மாட்டி விட்ட சசிகலா!

வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு திருப்பிக் கட்டாமல் மோசடி செய்தவர்கள், போலி ஆவணங்களைக் கொடுத்து வங்கிகளை ஏமாற்றியவர்கள், காங்கிரஸ் ஆட்சியில் மோசடியில் ஈடுபட்டு ஜாம்பவான்களாகத் திகழ்ந்தவர்கள்... இந்த மூன்று வகை ஆசாமிகளைப் பற்றிய விவரங்களை மத்திய நிதித்துறை உளவுப்பிரிவு அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள். இதில் சிக்கியிருக்கும் தமிழகப் பிரமுகர், ஸ்ரேயாஸ் ஸ்ரீபால். இவர் மீதான வங்கி மோசடி வழக்கை சி.பி.ஐ விசாரிக்கிறது. அந்த வழக்கு ஜவ்வாக இழுத்துக்கொண்டே போகிற பின்னணி என்ன என்று நிதித்துறை உளவுப்பிரிவு ஆராய்கிறது. மறைந்த முன்னாள் டி.ஜி.பி ஸ்ரீபாலின் மகனான ஸ்ரேயாஸ் ஸ்ரீபால் இப்போது டெல்லியில் வசிக்கிறார்.

முதல்வர் எடப்பாடியின் ஓராண்டு ஆட்சி சாதனையைக் கொண்டாடும் வகையில், அரசுத் துறைகள் சார்பாக மார்ச் 23-ம் தேதியன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த கண்காட்சியில், பல்வேறு துறைகள் சார்பாக ஸ்டால்கள் வைப்பது தொடர்பாக ஆலோசனை நடந்தது. உயர்கல்வித் துறை சார்பில் பல்வேறு சாதனைகளை முதல்வரிடம் அதிகாரிகள் சொல்லிக்கொண்டே வந்தனர். ஆளில்லாமல் பறக்கும் விமானத்தை அண்ணா பல்கலைக்கழகம் வெற்றிகரமாக வடிவமைத்தது பற்றி ஓர் அதிகாரி சொன்னபோது ஆச்சர்யப்பட்ட முதல்வர், ‘‘இது ஒன்று மட்டும் போதும். வேறு ஏதும் வேண்டாம்” என்று சொல்லிவிட்டாராம். 

திருவள்ளூர் மாவட்டத்தில் சவுடு மணல் அள்ள பினாமி பெயரில் உரிமை வாங்கினாராம் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர். அவர் அதிர்ஷ்டம்... அந்த இடத்தில் ஆற்று மணல் குவியல் இருந்ததாம். அதற்குப் பல ஆயிரங்களில் விலை வைத்து, அவர் கல்லா கட்டுகிறாராம். இப்படி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தும் லாரிகளை போலீஸோ, வருவாய்த்துறையினரோ பிடித்தால்... அடுத்த நிமிடமே உள்ளூர் அமைச்சரிடமிருந்து போன் வருகிறதாம். ‘பெஞ்ச்’ மேல் ஏறிநிற்காத குறையாகப் பதறுகிறார்கள் அதிகாரிகள்.

தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு தலைவர் பதவிக்கு டி.ஜி.பி அந்தஸ்தில் ஒருவரை நியமிக்கலாம். ஆனால், அரசுத் தரப்பில் கையை விரித்துவிட்டார்களாம். இதில் ஒரு பெண் உயர் அதிகாரியை மையமாக வைத்து போலீஸ் துறையில் நடக்கும் பாலிடிக்ஸ் பற்றி, சமீபத்தில் சென்னையில் கூடிய பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலர் தீவிரமாக விவாதித்தார்களாம். விரைவில் மீடியாக்களிடம் சொல்ல முடிவெடுத்திருக்கிறார்கள்.