Published:Updated:

கருணாநிதிக்கு செல்லப்பிள்ளை; ஜெயலலிதாவுக்கு சிம்ம சொப்பனம் -  பரிதி இளம்வழுதி கடந்துவந்த பின்னணி!

மாற்று முகாம்களுக்குச் சென்றால்கூட தனி நபர் விமர்சனங்களை மட்டும் முன்வைத்தே மேடைகளில் பேசிவந்தார். எந்த நிலையிலும் தி.மு.க-வையோ, திராவிடக் கொள்கைகள் குறித்தோ அவர் விமர்சித்தது கிடையாது. கடைசிவரை திராவிடத்தின் மீது பற்றுக்கொண்டிருந்தார்.

கருணாநிதிக்கு செல்லப்பிள்ளை; ஜெயலலிதாவுக்கு சிம்ம சொப்பனம் -  பரிதி இளம்வழுதி கடந்துவந்த பின்னணி!
கருணாநிதிக்கு செல்லப்பிள்ளை; ஜெயலலிதாவுக்கு சிம்ம சொப்பனம் -  பரிதி இளம்வழுதி கடந்துவந்த பின்னணி!

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி,  இன்று அதிகாலை 3 மணி அளவில் மாரடைப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.  58 வயதான அவர், ஆறு முறை தமிழக சட்ட மன்ற உறுப்பினராக இருந்த பெருமைக்குரியவர். அவரின் மறைவு, அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரம்பர்யம் மிக்க தி.மு.க குடும்பம், ஜெயலலிதாவுக்கு சிம்ம சொப்பனம் எனத் தமிழக அரசியல் அத்தியாயத்தில் தனக்கென ஒரு பாதையை வகுத்தவர்.

யார் இந்த பரிதி இளம்வழுதி?

ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தின் செயலராக இருந்தவர், பரிதியின் தகப்பனார் இளம்வழுதி. இவர், மேலவை உறுப்பினர் பதவியும் வகித்துள்ளார். இப்படி பாரம்பர்யம் மிக்க தி.மு.க குடும்பத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர் தான் பரிதி இளம்வழுதி. பின்னாளில், தி.மு.க-வின் சிறந்த பேச்சாளராக வந்தார். `எந்த மேடையில் பேசினாலும் முதல் அரைமணிநேரம் மக்களைச் சிந்திக்கவைப்பேன், அடுத்த அரை மணி நேரம் சிரிக்க வைப்பேன்; அடுத்த அரை மணி நேரம் அழவைப்பேன்' என மேடை ஏறும் முன் கட்சியினரிடம் அவர் சொல்லிவிட்டே செல்வார். சொன்னதற்கு ஏற்றாற்போல், தனது பேச்சால் மக்களை கட்டிப்போடவைக்கும் ஆற்றல் கொண்டவர். தனித்துவமான தனது  பேச்சாற்றலால் தி.மு.க-வில் படிப்படியாக உயர்ந்தார். 1984–1989 சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, முதல்முறையாக சட்டப்பேரவைக்குள் அடியெடுத்துவைத்தார். அப்போது அவருக்கு வயது, 25 மட்டுமே. இளம்வயதில் எம்.எல்.ஏ-வாக நுழைந்தார். இதன்பின்னர், 1989–2011 வரையிலான காலகட்டத்தில், சென்னை எழும்பூர் தொகுதியில் தொடர்ந்து ஐந்து முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

1991-ம் ஆண்டு காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து, ஜெயலலிதா முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்றிய நேரம். இந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணி வெறும் 7 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. தி.மு.க-வின் அத்தனை தலைவர்களும் தோல்வி அடைந்தபோது கருணாநிதி மட்டும் சட்டசபைக்குத் தேர்வானார். அப்போது நடந்த எழும்பூர் இடைத்தேர்தலில் ஜெயித்த பரிதி, கருணாநிதிக்குத் துணையாக சட்டசபைக்குச் சென்றவர். கருணாநிதி ராஜினாமா செய்தபின், பின்னாளில் `தனி ஒருவனாக' சட்டசபையைக் கலக்கினார். ஜெயலலிதாவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியதுடன், கேள்விக்கணைகளால் அ.தி.மு.க கூட்டணியை கதிகலங்கவைத்தார்.

அதன்பயனாக, கருணாநிதியால் அபிமன்யூ, இந்திரஜித் எனப் புகழப்படும் அளவுக்கு செல்லப்பிள்ளையாக மாறினார். சட்டசபையில் தனது நகைச்சுவை கலந்த பேச்சால் எதிர்கட்சியினரைக்கூட ஈர்த்தார். 1996 - 2001 காலகட்டத்தில், தமிழக சட்டப்பேரவையில் துணை சபாநாயகர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பின்னர், 2006 - 2011-ம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராகவும் இருந்தார். இதே காலகட்டத்தில், சி.எம்.டி.ஏ-வில் முக்கியப் பதவியும் வகித்தார். ஆனால், 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், அதே எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், இந்தமுறை அவருக்கு தோல்வி கிடைத்தது. தே.மு.தி.க வேட்பாளர் நல்லதம்பியிடம் தோல்வியுற்றார்.

2011ல் தி.மு.க-வின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்த பிறகு, கட்சியின் முக்கியத் தலைமைகளுடன் முரண்பட்ட பரிதி, ``தி.மு.க-வில் குடும்ப அரசியல் தலை தூக்கியுள்ளது" எனக் குற்றம் சாட்டி, பரபரப்பைக் கிளப்பினார். தி.மு.க-வில் இருந்தபோது, யாருக்கு சவால் அளிக்கும் வகையில் செயல்பட்டாரோ, அதே ஜெயலலிதா முன்னிலையில் 2013-ம் ஆண்டு அ.தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார். அ.தி.மு.க-வில் இணைந்தகையோடு கொள்கைப் பரப்பு இணைச்செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டது.  

ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அரசியலில் அமைதியாக இருந்து வந்தவர், சசிகலா - ஓ.பன்னீர் செல்வத்தின் பிரிவின்போது, ஓ.பி.எஸ் அணியின் பக்கம் சென்றார். இடையில், கொள்கைக்கு முரணாகச் செயல்பட்டதாகக் கூறி அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட வரலாறும் உண்டு. இதன்பின், டி.டி.வி .தினகரனுடன் இணைந்தார். சமீப காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுவந்தார். இதற்கிடையே, இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காததன் காரணமாக உயிரிழந்தார். 

அவரது மறைவுகுறித்து பரிதியின் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் பேசினோம், ``இந்த இடத்துக்கு வர எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்று எங்களுக்குத்தான் தெரியும். ஆனால், அது எல்லாம் போய்விட்டது. மாற்றுக்கட்சிக்குச் சென்றபிறகுகூட தி.மு.க-வில் இருந்தபோது அவருக்கு கிடைத்த சுதந்திரம் அங்கு கிடைக்கவில்லை. தி.மு.க-வில் இருந்து விலகிய பின், மாற்று முகாம்களுக்குச் சென்றால்கூட தனி நபர் விமர்சனங்களை மட்டும் முன்வைத்தே மேடைகளில் பேசிவந்தார்.

எந்த நிலையிலும் தி.மு.க-வையோ, திராவிடக் கொள்கைகள்குறித்தோ அவர் விமர்சித்தது கிடையாது. கடைசிவரை திராவிடத்தின்மீது பற்றிக்கொண்டிருந்தார். எவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும், தான் கொண்ட கொள்கைகளில் உறுதியாக இருந்தார். இந்த முரண்பாடுகள்கூட அவர்கூட இருந்தவர்கள்தான் ஏற்படுத்தப்பட்டது. இதை அவர் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார். கடந்த சில வருடங்களாகவே அவரது உடல்நல பாதிப்பில் இருந்தார். இதற்கும், அவர் கூட இருந்தவர்கள்தான் பிரதான காரணம்" என்றார் வேதனையுடன்...