Published:Updated:

பி.ஜே.பி-யினர் தமிழ்மீது 'திடீர்' பாசம்கொள்வது ஏன்?

பி.ஜே.பி. பிரபலங்கள் பலரும் தமிழ் மொழியைப் பெருமையுடன் குறிப்பிடுவது குறித்த கட்டுரை...

பி.ஜே.பி-யினர் தமிழ்மீது 'திடீர்' பாசம்கொள்வது ஏன்?
பி.ஜே.பி-யினர் தமிழ்மீது 'திடீர்' பாசம்கொள்வது ஏன்?

ருசமயம், சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ஆங்கிலத்தில் உரையாற்றினார், அண்ணல் காந்தியடிகள். அதைக் கண்டித்து அவருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார் நம் தேசியக் கவி பாரதியார். அதில், "சென்னைக் கடற்கரையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், நன்றாகப் பேசினீர்கள். ஆனால், உங்கள் தாய்மொழியில் பேசியிருக்கலாம். அதைவிடுத்து, ஆங்கிலேயர்களை விரட்ட வேண்டும் என்ற எண்ணம்கொண்ட தாங்கள், ஆங்கிலத்தில் பேசியது மன வருத்தமாக உள்ளது" என்று எழுதியிருந்தார். 

அதற்குக் காந்தியடிகள், "வணக்கம்... உங்கள் கடிதத்தைப் படித்துச் சிந்தித்துப் பார்த்தேன். ஆங்கிலேயரை எதிர்க்கும் நான் ஆங்கிலத்தில் பேசியது தவறுதான் என்பதை ஒப்புக்கொள்கிறேன். மன்னிப்புக் கேட்கவும் தயார். ஆனால், நீங்கள் என்னைக் கண்டித்து எழுதியுள்ள கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதியிருப்பது வியப்பாக இருக்கிறது" என்று பதில் எழுதியிருந்தார். அதற்கு, "நான் யாரையும் கண்டித்துக் கேட்கும்போது, எழுதுகிற கடினமான வார்த்தைகளைத் தமிழில் எழுத விரும்பவில்லை. அதனால்தான் ஆங்கிலத்தில் எழுதினேன்" என்று தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து பதில் எழுதியிருந்தார், பாரதியார்.

இப்படி, எண்ணற்ற புலவர்களும், தமிழாசிரியர்களும் தமிழ் மொழியைப் போற்றிப் புகழ்ந்துவரும் வேளையில், தமிழ் மொழியை அகற்றுவதற்கான வேலைகளில் மத்திய பி.ஜே.பி. அரசு ஈடுபடுவதாகச் சமீபத்தில் குற்றச்சாட்டும் எழுந்தது. அதன்படி, சாலையோரங்களில் நடப்படும் மைல்கற்களில் தமிழுக்குப் பதில் ஹிந்தியில் எழுதப்பட்டச் சம்பவங்களும் அரங்கேறின. அதேபோல், சமஸ்கிருதத்தைத் திணிக்கவும் முயற்சிகள் நடந்தன.

இதுகுறித்து அப்போது கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "தமிழர்கள் பேசும் அழகிய தமிழ் மொழியை மாற்ற முயன்று, வேறொன்றைத் திணிக்க நினைக்கிறார்கள்" என்று கடுமையாகச் சாடியிருந்தார். இதையடுத்து, தமிழகத்தில் எதிர்ப்பும் கிளம்பியது. மேலும், தமிழ் மொழிக்கு ஆதரவாகவும், பி.ஜே.பி. அரசுக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் குரல்கொடுத்தனர். 'பி.ஜே.பி., மொழியை மட்டுமல்ல... வட இந்தியாவின் அனைத்து பழக்கவழக்கங்களையும் திணிக்க முயல்கிறது; இதன்மூலம் தமிழகத்தில் மெள்ள மெள்ள ஹிந்தி திணிப்பு இருக்கிறது' என்று பதிவிட்டிருந்தனர். 

இந்த நிலையில், திடீர் மாற்றமாக பிரதமர் நரேந்திர மோடி சமீபகாலமாகத் தமிழ்மொழி குறித்தும், தமிழகத்தின் பெருமைகள் பற்றியும் தொடர்ந்து பேசிவருகிறார். தமிழகத்துக்கு வருகை தரும்போது 'வணக்கம்' என்றும் 'நன்றி' என்றும் சொல்வதும் வழக்கம். அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி பிரதமர் ஆற்றிய 'மனதின் குரல்' நிகழ்ச்சியில், ``ஒவ்வொரு மொழியும் அதற்கே உரிய சொந்தச் சிறப்புகளையும், புனிதத்தையும் கொண்டுள்ளது. உலகின் தொன்மையான மொழிகளில் தமிழ் முதன்மையானது என்பதில் இந்தியா உண்மையிலேயே பெருமைகொள்கிறது" என்று தெரிவித்திருந்தார். அதேபோல், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் தமிழை உயர்த்திப் பேசியிருந்தார். அவர், "தமிழ் மொழி இனிமையான மொழி. தமிழ் மொழியை நான் விரும்புகிறேன்” என்று பேசியிருந்தார். 

பிரதமர் மோடியும், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் தமிழ் மொழி குறித்துப் பெருமையாகப் பேசியிருக்கும் இந்த நிலையில், பி.ஜே.பி-யைச் சேர்ந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் தமிழ் மொழி குறித்து உயர்த்திப் பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர், "எனக்குத் தமிழ் தெரியும்; ஆனால், தொடர்ந்து பேச வராது. ஆங்கிலத்தைவிடத் தாய்மொழிதான் மாணவர்களை உயர்த்தும்" என்றவர், "சங்ககாலம் முதற்கொண்டே தமிழர்கள் தொழில்களிலும், தொழில் முனைவதிலும் சிறந்து விளங்கினர். தமிழர்கள் வெளிநாடுகளுடன் வர்த்தக உறவு வைத்திருந்தார்கள் என்பது வரலாற்றில் பதிவாகி உள்ளது. தாய்மொழி, தாய்நாடு மற்றும் பிறந்த ஊரை என்றென்றும் மறக்கக்கூடாது" என்றும் பேசினார். 

இப்படி, பி.ஜே.பி. பிரபலங்கள் பலரும் தமிழ் மொழியைப் பெருமையுடன் குறிப்பிடுவது குறித்து அக்கட்சியினரிடம் பேசினோம். "விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கிறது. இதை எதிர்கொள்வதற்கு இப்போதே ஆளும் பி.ஜே.பி. அரசும், காங்கிரஸும்  தயாராகி வருகின்றன. தமிழகம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களைத் தவிர... மற்ற மாநிலங்களில் பி.ஜே.பி-யின் கை, சற்று ஓங்கியே இருக்கிறது. இதன் காரணமாக, தமிழகத்திலும் பி.ஜே.பி. காலூன்ற நினைக்கிறது. அதன் ஒருகட்டமாகவே, பிரதமர் மற்றும் துணை ஜனாதிபதியின் தமிழ் மொழி குறித்தும் தமிழர்கள் குறித்த உரைகளையும் பார்க்க வேண்டியுள்ளது. இனிமேலாவது பி.ஜே.பி., தமிழுக்கும், தமிழகத்துக்கும் எதிரி அல்ல என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும்" என்றனர். 

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள், "தேசிய கட்சிகள் மட்டுமல்ல... மாநிலக் கட்சிகளுமே மொழியை வைத்துத்தான் அரசியல் செய்கின்றன. அவர்களுடைய ஒரே நோக்கம், வாக்கு வங்கி மட்டும்தான். ஏற்கெனவே ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தமிழகத்தில் இந்தியைத் திணித்தது; இனத்தை அழித்தது. இப்போது இருக்கும் பி.ஜே.பி. அரசு அதேபோல், இந்தியைக் கொண்டுவர நினைக்கிறது. ஆக மொத்தத்தில், இந்த இரண்டு கட்சிகளுக்கும் தமிழ்மீது பற்றோ, பாசமோ கிடையாது. அதே வேளையில், இந்த இரண்டு கட்சிகளும் மென்மேலும் வளர்வதற்குத் தமிழும், தமிழகமும் ஒரு காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது" என்றனர், மிகத் தெளிவாக. 

தமிழும், தமிழகமும் பலரையும்... பலவற்றையும் வாழவைத்துக்கொண்டிருக்கின்றன.