Published:Updated:

டெல்லி கிலி... மக்கள் பலி! - எடப்பாடியின் ஓராண்டு

டெல்லி கிலி... மக்கள் பலி! - எடப்பாடியின் ஓராண்டு
பிரீமியம் ஸ்டோரி
டெல்லி கிலி... மக்கள் பலி! - எடப்பாடியின் ஓராண்டு

ப.திருமாவேலன், ஓவியம்: கோ.ராமமூர்த்தி

டெல்லி கிலி... மக்கள் பலி! - எடப்பாடியின் ஓராண்டு

ப.திருமாவேலன், ஓவியம்: கோ.ராமமூர்த்தி

Published:Updated:
டெல்லி கிலி... மக்கள் பலி! - எடப்பாடியின் ஓராண்டு
பிரீமியம் ஸ்டோரி
டெல்லி கிலி... மக்கள் பலி! - எடப்பாடியின் ஓராண்டு

ராண்டுக்காலம்,  முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்திருந்ததே சாதனைதான். அதையும் தாண்டிப் பல சாதனைகள் செய்துவிட்டதாக, பக்கம்பக்கமாக விளம்பரம் கொடுத்துத் தனக்குத்தானே மலர்மாலை சூட்டிக்கொண்டிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி.

‘அம்மா வழியில் நல்லாட்சி - அதற்கு ஓராண்டுச் சாதனையே சாட்சி’ - என்பது 2018-ன் தொடக்கத்தில் எடப்பாடி எழுதியிருக்கும் ஈற்றடி.

``விளம்பரமோ ஆடம்பரமோ இல்லாமல் இந்தச் சாதனைகளைச் செய்துவருகிறோம். இது ஒப்பனை இல்லாத உண்மை முகம். அரிதாரம் பூசி நடிக்கின்ற போலி முகம் எது என்பதை மக்கள் அறிவார்கள்” என்று சாதனை விளக்க மேடையில் பேசியிருக்கிறார். இதைக் கேட்கும்போது எடப்பாடி பழனிசாமி, நன்றாகப் பேசக் கற்றுக் கொண்டுவிட்டார் என்பது மட்டும் தெரிகிறது.

“அவர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும்போது பேசவே மாட்டார். இப்போது முதலமைச்சர் ஆனதும் நன்றாகப் பேசுகிறார்” என்று சட்டமன்றத்திலேயே எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் சொல்லும்போது, எடப்பாடியே சிரித்தார். ‘செயல், அதுவே சிறந்த சொல்’ என்பார்கள். எடப்பாடியைப் பொறுத்தவரை, ‘சொல், அதுவே சிறந்த செயல்’ என்று ஆகிப்போனது.

யார் எந்தக் குற்றச்சாட்டு வைத் தாலும், `அம்மாவின் எண்ணங்களையும் விருப்பங்களையும் ஈடேற்றும் அரசாகவே இந்த அரசு செயல்படும்’ என்றும், `இது அம்மாவின் அரசு’ என்றும் மூச்சுக்கு முந்நூறு தடவை அம்மா நாமம் பாடுகிறார்.

அம்மாவே, இறுதி ஐந்தாண்டுக் காலத்தில் சும்மாதான் இருந்தார். உடல் நோவும், வழக்கு வாய்தாக்களுமாகவே அவரது வாழ்க்கை ஓடியது. அவர் எட்டடி பாய்ந்திருந்தால்தானே, எடப்பாடியால் 16 அடி பாய்ந்திருக்க முடியும்?

கடந்த மார்ச் 23-ம் நாள் தமிழகத்தின் முன்னணி நாளிதழ்கள் அனைத்திலும் தந்த, பக்கம் பக்கமான விளம்பரத்தின் முதல் சாதனைப் பெருமிதமே, எம்.ஜி.ஆருக்கு 30 மாவட்டங்களிலும் நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது என்பது தான். அது எம்.ஜி.ஆருக்காகக் கொண்டாடப்பட்டது அல்ல என்பது 30 மாவட்டங்களில் நடந்ததைப் பார்த்தால் அல்ல, ஒரே ஒரு மாவட்டத்தில் நடந்ததைப் பார்த்தாலே உணர முடியும். அதில் எம்.ஜி.ஆர். புகழ் பாடப்படவில்லை.; எம்.ஜி.ஆரின் வாழ்க்கை சொல்லப்படவில்லை. இன்னும் சொன்னால், ஜெயலலிதாகூட இல்லை. எடப்பாடிதான் இருந்தார், பளபள பேனர்களாக; ஆளுயரக் கட்டவுட்டுகளாக. ஆளும் கட்சி அமைச்சர்கள், எதிர்க்கட்சிகளை விமர்சித்துப் பேச அந்த மேடையைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

டெல்லி கிலி... மக்கள் பலி! - எடப்பாடியின் ஓராண்டு

எடப்பாடியோ, தன்னை ஒரு நாடறிந்த தலைவராகக் காட்டிக்கொள்ள அந்த 30 மேடைகளைப் பயன்படுத்திக் கொண்டார். அரசு விழாக்கள் அவை. மாவட்ட நிர்வாகம் நடத்து வதாக வெளியில் சொன்னார். இத்தனை கோடியைச் செலவு செய்ய மாவட்ட நிர்வாகத்தில் பணமில்லை. ஒதுக்கீடு செய்யவும் முடியாது. யாரோ, எப்படியோ பணம் கொடுத்து, பகட்டான விழாக்களை நடத்தி முடித்தார்கள். ‘திடீர்’ முதலமைச்சரை அறிமுகப்படுத்த நடத்தப்பட்ட திடீர் விழாக்களாக அவை முடிந்துபோயின.

இந்த விழாக்களில் திட்டப்பணிகளைத் திறந்து வைப்பதும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதும், புதிய அறிவிப்புகளைச் செய்வதும், பயனாளிகளுக்குப் பொருள்களைக் கொடுப்பதும் நடந்தன. இவையெல்லாம் சாதனைகள் அல்ல, கடமைகள். எந்த முதலமைச்சர் இருந்தாலும் நடக்கும். முதலமைச்சரே இல்லாவிட்டாலும் ஆளுநர் ஆட்சியிலும் நடக்கும். கடந்த ஓராண்டுக் காலத்தில் 5,208 கோப்புகளில் முதலமைச்சர் கையொப்பமிட்டிருக்கிறார் என்பதும் பட்டியலிடப்பட்டிருக்கும் ஒரு சாதனை!

ஒரு முதலமைச்சரின் வேலையே அதுதானே? கையொப்பம் போடுவதே சாதனைதான் என்பதில் எடப்பாடி திருப்தி அடைந்துவிட்டார் போலும்.

புதிய கனவுகளை அறிமுகம் செய்வதும், அதை நிறைவேற்றிக் காட்டுவதும், செய்ய முடியாத எண்ணங்களைச் செய்து காட்டுவதுமே சாதனை. அதில் எதைச் சொல்வார் எடப்பாடி? காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க வைத்தது கருணாநிதியின் சாதனை. அதில் பெற்ற தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வைத்தது ஜெயலலிதாவின் சாதனை. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்துக் காட்டினால் அது எடப்பாடியின் சாதனையாக இருக்கலாம்.

‘காவிரி மேலாண்மை வாரியம்’ என்று கேட்டாலே அவருக்குக் காய்ச்சல் வந்துவிடும். ‘பிரதமரைப் பார்க்க வேண்டும்; நேரம் கொடுங்கள்’ என்று கேட்கவே பயம். ‘கர்நாடக முதலமைச்சரைச் சந்திப்பேன்’ என்று சொல்லிவிட்டு, போகவிடாமல் ஏதோ ஒன்று தடுத்துவிட்டது. மத்திய அரசாங்கத்தை எதிர்த்து ஏதாவது சொல்லிவிட்டால், நம்மைக் காலி செய்து விடுவார்களோ, அது ஓ.பன்னீர்செல்வத்துக்குச் சாதகமாகிவிடுமோ, தன்னைத் தூக்கிவிட்டு ஓ.பி.எஸ்ஸை முதலமைச்சர் ஆக்கிவிடுவார்களோ என்கிற நாற்காலி பயத்தில், டெல்டா நாற்றங்கால் பற்றிய பதற்றமே இல்லாமல் இருக்கும் பொம்மை முதலமைச்சரிடம் ரியல் சாதனைகளை எப்படி எதிர்பார்க்க முடியும்?

திடீரென்று வேட்டி கிழிந்துவிட்டால், யார் பேசுவதும் காதுக்குள் போகாது, நினைப்பு முழுக்க அந்தக் கிழிசலை மறைப்பதிலேயே இருக்கும். அது மாதிரிதான், எடப்பாடிக்குத் தனது நாற்காலிக்குப் பாதகம் வந்துவிடக் கூடாது. தினகரன் தீவட்டியிலிருந்து தப்புவதிலும், பன்னீரின் பட்டாக் கத்தியிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வதிலும்தான் எப்போதும் நினைப்பு!

காவிரிப் பிரச்னையிலாவது புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டிய வேலை. அப்படி உருவாக்கும் எண்ணம் இல்லாத நரேந்திர மோடியைக் கரைக்க வேண்டிய சவால் இருக்கிறது. ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனை என்பது மத்திய அரசே அறிவித்த ஒரு விஷயம். அதற்கு ஓர் இடத்தைத் தேர்வு செய்து தரக்கூடத் துப்பு இல்லை.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஐந்து இடங்களைத் தேர்வு செய்துகொடுத்தார்கள். ஐந்து இடத்தையும் அவர்கள் நிராகரித்து விட்டார்கள். இடம் சரியில்லையா, எய்ம்ஸ் அமைக்க மனம் இல்லையா எனத் தெரியவில்லை. எந்த இடத்தைக் காட்டினாலும் ஏதாவது ஒரு குறை சொல்லியே இரண்டு ஆண்டுகள் கடத்திவிட்டார்கள். எய்ம்ஸ் மருத்துவமனையைத் தஞ்சை மாவட்டத்தில் அமைப்பதா, மதுரையில் அமைப்பதா என்று தமிழக அமைச்சர்களுக்குள் குஸ்தி நடக்கிறது. வெளிப்படையாகவே சண்டை போட்டுக்கொள்கிறார்கள். எடப்பாடியின் சாதனைகளில் இதுவும் ஒன்று.

‘மத்திய நிதி ஆணையத்தின் மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு நியாயமாக இல்லை’ என்று போகிற போக்கில் நிதியமைச்சரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கவலைப்பட்டுள்ளார். ஆனால், அதைத் தடுப்பதற்கான, கூடுதல் நிதியைப் பெறுவதற்கான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை. `மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டு இனி நிதி ஒதுக்கீடு செய்வோம்’ என்று மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதையே சாதனையாகச் செய்துவரும் மாநிலங்கள் பாதிக்கப்படும். இந்த அளவுகோலைப் பயன்படுத்தக் கூடாது என்று தடுக்க இவர்களால் முடியவில்லை.

ஏற்கெனவே மாநிலத்தின் கடன் சுமை கூடிவிட்டது. வருவாய்க்கும் செலவினங் களுக்குமான வித்தியாசம் விரிவடைந்து வருகிறது. புதிய வருவாய்கள் இல்லை. புதிய செலவினங்கள் அதிகமாகி விட்டன. இந்த நிலையில் மத்திய அரசின் நிதிப் பகிர்வும், நியாயமற்றதாக மாறுமானால் ஓர் அரசாங்கத்தின் ஒரே செயல்பாடு என்பது அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தருவதாக மட்டுமே ஆகிவிடும். அந்த நிலைமையை நோக்கிதான் கடந்த நான்கைந்து ஆண்டுகளாகத் தமிழ்நாடு போய்க்கொண்டிருக்கிறது.

‘பானையில் ஓட்டையை அடைத்துச் சமையல் செய்துவருகிறோம்’ என்று விளக்கமளித்துள்ளார் ஓ.பி.எஸ். பித்தளைப் பானையா, மண் பானையா என்று சொல்லவில்லை. ஆனால் சில அமைச்சர்கள், தங்கப் பானையில் சமையல் செய்யும் அளவுக்கு ஓராண்டுக் காலத்தில் முன்னேறிவிட்டார்கள். கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகளை சர்வசாதாரணமாக வாங்கிப் போடுகிறார்கள். கந்து வட்டியைவிட மோசமானதாக கமிஷன் கட்டிங் மாறிக் கொண்டிருக்கிறது. 15 சதவிகிதம் இருந்ததெல்லாம் ஒரு காலம். 45 சதவிகிதமெல்லாம் கேட்கிறார்கள். தெரிந்து கேட்கிறார்களா, தெரியாமல் கேட்கிறார்களா எனத் தெரியவில்லை. புதிய நிறுவனங்கள், பக்கத்து மாநிலங்களுக்குத் தெறித்து ஓடுவது இதனால்தான். திட்டப் பணிகள் இல்லாத அமைச்சர்களுக்கு இருக்கும் ஒரே வழி ‘பணி மாறுதல்.’ மொத்தமாக 100 பேரை டிரான்ஸ்ஃபர் செய்வது. பாதிக்கப்பட்ட 200 பேர் சென்னைக்கு ஓடிவரும்போது, அவர்களிடம் முடிந்ததைக் கறப்பது.

மாதா, பிதாவுக்கு அடுத்த புனிதப் பணி மாறுதலுக்கே எண்ண ஒரு கை விரல்கள் போதவில்லை என்றால், பத்திரப் பதிவுக்குச் சொல்லவே வேண்டியதில்லை. இந்தச் சாதனைகளை எழுத, பக்கங்கள் போதாது. இவற்றையெல்லாம் முதலமைச்சரால் தட்டிக் கேட்க முடியாது. ஏனென்றால், அவர்கள் தயவில்தான் அவரது நாற்காலி இருக்கிறது.

எம்.எல்.ஏ-க்கள் கூட்டம், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், நிர்வாகிகள் கூட்டம் ஆகியவற்றில் முதலமைச்சரால் ‘தரப்படும்’ வாக்குறுதிகள் மட்டும் யாருமே ஞாபகப்படுத் தாமல் நிறைவேறிவிடுகின்றன. மக்களுக்குத் தந்த வாக்குறுதிகள் மட்டும் மூலையில் கிடக்கின்றன.

இந்த நிலையில் முதலீட்டாளர் மாநாட்டை அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. முதலீட்டாளர்கள் நம்பிக்கையைப் பெற்றதாக இந்த அரசை மாற்றியபிறகு முதலீட்டாளர் மாநாடு நடத்தலாம். ஜெயலலிதா நடத்தினார், நாமும் நடத்தலாம் என்று நடத்தக் கூடாது. ஜெயலலிதா நடத்தியபோது `2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வரும்’ என்று பூதாகரமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், வந்தது 30 ஆயிரம் கோடிக்கும் கீழ். அப்போது முதலீட்டாளர்கள் வராததற்கு என்ன காரணம்? ஐந்தாறு அதிகார மையங்கள் இருந்தன. யார் சொன்னால் நடக்கும் என்ற குழப்பம் முதலீட்டாளர்களுக்கு. லாபம் பார்க்காவிட்டாலும், இருக்கும் பணத்தையாவது காப்பாற்றிக்கொள்வோம் என்று படிந்து போனார்கள். இப்போதைய பிரச்னை, அதிகார மையத்தில் அதிகாரமே இல்லை. வெறும் காற்று தான் இருக்கிறது. காசு போட யார் வருவார்?

அதிகாரத்தையே, மத்திய அரசுக்குத் தாரைவார்த்துவிட்டு ‘அம்மா’ ஆட்சியை எப்படித் தர முடியும்.

எடப்பாடியின் சாதனைப் பட்டியலில் 50.8 கோடி செலவில், அம்மா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவு மண்டபம் கட்டுவதும் இடம்பெற்றுள்ளது.

சமாதி கட்டியதுதான் சாதனையா?