அலசல்
Published:Updated:

ஹெச்.ராஜா தமிழனா? - சீமான்; பாபநாசம் கோவத்தக்குடி தமிழன் நான்! - ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா தமிழனா? - சீமான்;    பாபநாசம் கோவத்தக்குடி தமிழன் நான்! - ஹெச்.ராஜா
பிரீமியம் ஸ்டோரி
News
ஹெச்.ராஜா தமிழனா? - சீமான்; பாபநாசம் கோவத்தக்குடி தமிழன் நான்! - ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா தமிழனா? - சீமான்; பாபநாசம் கோவத்தக்குடி தமிழன் நான்! - ஹெச்.ராஜா

ரசியலில் ஆன்மிகம் கலந்தால் என்னவாகும் என்பதற்கு முருகக்கடவுளும் ஓர் உதாரணம் ஆகிப் போனார். ‘‘முருகன் என் முப்பாட்டன்’’ என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காவடி தூக்கினால், ‘‘முருகன் ஒரு கடவுள்; அவர் யாருக்கும் தாத்தா அல்ல!’’ என்று போர்க்கொடி தூக்குகிறார் பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா! இருவரிடமும் பேசத் தீர்மானித்தோம். முதலில் சீமான்...

‘‘தமிழர்களையும் இந்துக்களையும் பிரிக்க முடியாது என்று கூறுகிறாரே ஹெச்.ராஜா?’’

‘‘12 ஆழ்வார்களும் 63 நாயன்மார்களும் தமிழகத்தைத் தாண்டி வேறு எந்த மாநிலத்தில் போற்றப்படுகிறார்கள்? தமிழ்நாட்டைத் தாண்டி ‘சைவ சித்தாந்த மாநாடு’ எந்த மாநிலத்தில் நடைபெறுகிறது? பன்னிரு திருமறைகள் எந்த மாநிலத்தில் ஓதப்படுகின்றன? ஆண்டாளை, ‘லோக மாதா’ என்று சொல்கிறார்கள். ஆனால், தமிழகத்தைத் தாண்டி எந்த மாநிலத்தில் ஆண்டாளை வழிபடுகிறார்கள்? வெள்ளைக்காரன் கொண்டுவந்த சட்டப்படி நாங்கள் இந்துக்களா அல்லது சரித்திரப்படி இந்துக்களா?

150 வருடங்களுக்கு முன்புவரை, ‘இந்து’ என்ற சொல்லே கிடையாதே... வெள்ளைக்காரன் போட்ட சட்டத்தில், பௌத்தன், சமணன், வைணவன், சைவம், சீக்கியன், லிங்காயத், சிவ சமயத்தார் என எல்லோரையும் இந்துவாக்கிவிட்டான்; தமிழனை ‘இந்து’ என்று சொல்கிற நீ, வழிபாட்டில் அவனது தாய்மொழித் தமிழை வெளியேற்றிவிட்டு, ‘சம்ஸ்கிருதத்தை’ ஏன் திணிக்கிறாய்? ஆந்திரக் காட்டுக்குள் சுடப்பட்டுச் செத்துப்போன தமிழனெல்லாம் இந்துதான்... ஏன் யாருமே அதுபற்றிப் பேசவில்லை? அவ்வளவு ஏன்... ‘தமிழனையும் இந்துவையும் பிரிக்கமுடியாது’ என்று சொல்கிற ஹெச்.ராஜா தமிழனா?’’

ஹெச்.ராஜா தமிழனா? - சீமான்;    பாபநாசம் கோவத்தக்குடி தமிழன் நான்! - ஹெச்.ராஜா

‘‘திருமால், வருணன், இந்திரன், துர்க்கை என இந்துக் கடவுளர்கள்தானே தமிழகத்திலும் வணங்கப்பட்டார்கள்... என்று ராஜா கேட்கிறாரே?’’

‘‘நாங்கள் கொற்றவை என்றுதானே சொல்கிறோம்; சிலர் ஏன் ‘துர்க்கை’ என்று சொல்கிறார்கள்? உன்னிடம் எதுவும் இல்லை... அதனால்,எங்களிடமிருந்து எடுத்துக்கொண்டாய். நான் எப்படி இந்து? வா.... வந்து தர்க்கம் பண்ணு. ஜெயித்துக்காட்டு!’’

‘‘ ‘முருகன், தாத்தா அல்ல... கடவுள்!’ என்கிறாரே ராஜா?’’

‘‘இப்படித் தவறாகக் கற்பித்துதானே எங்களை அழித்தீர்கள்... தமிழர் மெய்யியல் கோட்பாடே, இயற்கையை வழிபடுவது, மூத்தோரைத் தெய்வமாகப் போற்றுவது. முருகன் என் மூத்தோன். ஈழ விடுதலைப் போரில், 50 ஆயிரம் பேர் இறந்து போனார்கள். அவர்களில் ஒருவருக்குக்கூட எங்கள் அண்ணன் பிரபாகரன், சமாதி அமைக்கவில்லை; நடுகல்-தான் நட்டார். நாங்கள் நடுகல் மரபினர். இதுதான் எங்களது மரபு.’’

ஹெச்.ராஜா தமிழனா? - சீமான்;    பாபநாசம் கோவத்தக்குடி தமிழன் நான்! - ஹெச்.ராஜா

‘‘சாதிகளைக் கடந்து இந்துக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவே ‘வேல் சங்கமம்’ நிகழ்வு நடத்தப்படுவதாகச் சொல்கிறார்களே?’’

‘‘கோயிலுக்குள்கூட விடமாட்டேன்- என்ற இந்து மத சாதிய இழிவை எதிர்த்துத்தானே அய்யா வைகுந்தர் எதிர்ப்புரட்சி செய்கிறார். இதையேதான் கர்நாடகத்தில், பாசவனாயர் ‘லிங்காயத்’ என்ற பெயரில் சாதிய இழிவுக்கு எதிரான மதமாக உருவாக்கினார்.

இந்து மதத்தில், விவேகானந்தரைத் தூக்கிப்பிடிக்கும் நீங்கள், ஏன் வள்ளலாரையும் வைகுந்தரையும் கொண்டாடுவதில்லை? ‘தமிழனையும் இந்துவையும் பிரிக்கமுடியாது’ என்று சொல்லிக்கொண்டே மராட்டிய வீர சிவாஜியைத் தூக்கிக்கொண்டு தமிழ் மண்ணுக்கு வருகிறாயே... ஏன் என் பாட்டன் தீரன் சின்னமலை, பூலித்தேவன், மருதுபாண்டியர், அழகு முத்துக்கோன், வேலு நாச்சியாரையெல்லாம் தொடவே இல்லை?

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விநாயகர் சதுர்த்தி, குருநானக் பிறந்தாள், மகாவீர் ஜயந்தி என எல்லாவற்றுக்கும் விடுமுறை இருக்கும்போது, தமிழ்க் கடவுள் முருகனின் தைப்பூசத் திருநாளுக்கு மட்டும் ஏன் விடுமுறை விடவில்லை? அதற்காக நான் கத்தும்போதும்கூட, ‘ஆமா.... சீமான் சொல்வது சரி... தைப்பூசத்துக்கு விடுமுறை விடவேண்டும்’ என்று ஏன் நீங்கள் சொல்லவில்லை? அதனால், சாதி வேற்றுமையைக் கடந்து ஒற்றுமை என்று இவர்கள் சொல்வதெல்லாம் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்!’’

ஹெச்.ராஜா தமிழனா? - சீமான்;    பாபநாசம் கோவத்தக்குடி தமிழன் நான்! - ஹெச்.ராஜா

‘‘திராவிடர் கழக மேடைகளில், ராமனையும் இந்து மதத்தையும் கேவலமாகப் பேசிவந்த சீமான், இப்போது மக்களை ஏமாற்ற ‘முருகனை’க் கையில் எடுப்பதாக பி.ஜே.பி-யினர் சொல்கிறார்களே?’’

‘‘நான் அன்றைக்கு வைத்த வாதங்கள் அனைத்தும் அறிவியல்பூர்வமானவை. அப்படிப் பேசியதை எந்த இடத்திலும் நான் மறுக்கவும் இல்லை.

‘விழுந்த ஓர் இனத்தின் மகன் நான். என் தேசிய இனம், வரலாற்றிலிருந்துதான் மீள் எழுச்சி பெற வேண்டும். எனவே, என் பண்பாடு-வழிபாட்டையும் சேர்த்து மீட்க வேண்டியதிருப்பதாலேயே நான் இங்கே வந்து நிற்கிறேன்’ என்பதையும்தான் தெளிவாகச் சொல்கிறேனே... நான் வேஷம் போடுவதாகச் சொல்லும் ராஜா, இவ்வளவு நாள்களாக ‘வேல்’ எடுக்காமல் என்ன செய்து கொண்டிருந்தார்?’’ என்ற கேள்விச் சீறலுடன் பேட்டியை முடித்துக்கொண்டார் சீமான். 

சீமானின் அடுக்கடுக்கானக் கேள்விகளை, அப்படியே ஹெச்.ராஜாவுக்கு பார்சல் செய்து விளக்கம் கேட்டோம்.

‘‘இ
ந்திய அரசியல் சட்டப்படி இஸ்லாமியரோ, கிறிஸ்தவரோ, பார்ஸிக்களோ அல்லாதவர்கள் அனைவருமே இந்துக்கள்தான். இதனுடைய கரு, ‘இந்து என்பது மதம் அல்ல. ஆனால், இந்து தேசத்திலே தோன்றியவை எல்லாம் இந்து மதங்கள்’ என்பதுதான்.  ஆரிய - திராவிட இனவாதமே ஒரு கட்டுக்கதை; குப்பைத் தொட்டியில் வீசவேண்டியவை’ என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.

ஹெச்.ராஜா தமிழனா? - சீமான்;    பாபநாசம் கோவத்தக்குடி தமிழன் நான்! - ஹெச்.ராஜா

சைவம் என்பதே சிவன்தானே! சிவனின் இருப்பிடம் கைலாயம்; இந்தியாவின் வடகோடி இமயமலை. எனவே, சைவ மதம் வடமாநிலங்களில் இல்லை என்று சீமானுக்கு யார் சொன்னது? இங்கே முருகன் என்றால், வடமாநிலங்களில் கார்த்திகேயன் என்று சொல்லி வழிபடுகிறார்கள். இதேபோல், வைணவமும் இந்தியா முழுக்க இருக்கிறது. ஆனால், இவர்கள்தான் ராமருக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறார்கள். ‘கடவுளே இல்லை’ என்று தமிழ்நாட்டில் சொல்லிக்கொண்டிருந்தவருக்கு என்ன பெயர்?

‘வங்காளத்தைச் சேர்ந்த விவேகானந்தர் எங்களுக்கு மட்டுமே சொந்தம்’ என்று அந்த மாநிலத்தவர்கள் தங்களுக்குள் கட்டுப்படுத்தி வைக்கவில்லை. அதேபோல், வள்ளலாரை விசாலமாகக் கொண்டுசென்றால் அனைவருமே ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள். பி.ஜே.பி-யில் இருக்கிற நான், காஷ்மீர், அஸ்ஸாம் என எல்லா இடங்களுக்கும் போயிருக்கிறேன். ஏன் இதுபோல், சீமான் இந்தியா முழுக்கப் போக வில்லை? அவர் தன்னைதமிழ்நாட்டுக்குள்ளேயே குறுக்கிக்கொள்கிறார். குப்தப் பேரரசு, மகதப் பேரரசுகளை விடவும் பெரிய பேரரசு சோழப் பேரரசு. ஆனால், அந்த ராஜேந்திர சோழனையே விமர்சித்துவரும் திராவிட இயக்கங்கள் இருக்கும்வரை, தமிழர் பெருமை எப்படி வெளி உலகில் பேசப்படும்? தமிழ்நாட்டில், 38 ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் இருக்கின்றன. இவற்றில், ஐயாயிரம் கோயில்களில்கூட பிராமணப் பூசாரிகள் கிடையாது. நான் தமிழனா என்று சீமான் கேட்கிறார். தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா, அம்மாப்பேட்டை யூனியன், மெலட்டூர் அருகேயுள்ள கோவத்தக்குடியைச் சேர்ந்த பூர்வீகக் குடி நான்!’’ என்று விளக்கம் சொல்கிறார் ஹெச்.ராஜா!

ஆண்டாள், பெரியார், யாத்திரை.... என ‘ரத வேகத்தில்’ அரசியல் செய்பவர்கள், தவித்துக் கிடக்கும் தமிழனுக்கான தண்ணீரைப் பெற்றுத் தருவதிலும் வேகம் காட்டினால், தமிழகத்தில் தாமரை செழிக்கும்!

- த.கதிரவன்