பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

காந்திலெனின், திருச்சி-26.

சகிப்புத்தன்மை யாருக்கு அதிகம் வேண்டும்?


அனைவருக்கும்தான். சகிப்புத்தன்மை இல்லாத மனிதன் எந்தத் துறையிலும் வெற்றி பெற முடியாது. சமூகத்துடன் ஒத்துப்போக முடியாது. ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் கல்லான் அறிவிலாதான்’ என்கிறது வள்ளுவம்.

சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம்.

மதுரை ஆதீனத்துக்குள் நித்யானந்தா நுழையத் தடை விதித்துத் தீர்ப்பு வந்திருப்பது குறித்து..?


இவர்கள் இருவருமே இந்து மதத்துக்கு இழுக்கு ஏற்படுத்திக்கொண்டிருப்பவர்கள்தான்!

கழுகார் பதில்கள்!

பி.ஸ்ரீதர்ஷினி, பாபநாசம்.

‘தமிழகத்தில் அரசியல் வெற்றிடத்தை கமல், ரஜினி ஆகிய இருவருமே நிரப்புவதற்கு நடைமுறையில் சாத்தியம் இல்லை’ என்று கவுதமி சொல்லியிருக்கிறாரே?


அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். இருவரையும் நன்றாக அறிந்தவர் அவர். கவுதமி இதை மட்டும் சொல்லவில்லை. கவனமாக இன்னொன்றையும் சொல்லியிருக்கிறார். ‘தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை அவர்கள் நிரப்புவதற்கு, நிறைய காலம் தேவைப்படும்’ என்கிறார் கவுதமி. அவசரப்படாமல் காத்திருக்க வேண்டும் என்பதுதான் ரஜினி, கமலுக்கு அவர் சொல்லும் அறிவுரை.

ஆர்.ஜேஸ்மின் ரமேஷ், கம்பம்.


அ.தி.மு.க-வும் இரட்டை இலையும் ரஜினிக்குக் கிடைத்து விட்டால்..?

ரஜினி, அ.தி.மு.க பொதுச்செயலாளராக ஆகிறார் என்றால்தான் இது சாத்தியம். அப்படி ஏதாவது முயற்சிகள் நடக்கின்றனவா ஜேஸ்மின் ரமேஷ்? தேனிக்குப் பக்கத்தில்தானே கம்பம்? உங்களுக்கு முன்கூட்டியே தெரியலாம்!

கழுகார் பதில்கள்!

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கும் இமயமலைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கும் போலிருக்கிறதே?


அது அவரின் நம்பிக்கை சார்ந்த விஷயம்!

ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

முன்னாள் மேயர் சைதை துரைசாமி, ரஜினி கட்சியில் சேருவாரா?


ஏதோ ஒரு ஆபரேஷன் நடக்கிறது!

ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி.

 ‘அரசியலில் எனக்குச் சவாலாக எந்தப் பெண்ணையும் நினைக்கவில்லை. எனக்கு நானே சவால்’ எனக் கூறியிருக்கிறாரே தமிழிசை செளந்தரராஜன்?


இந்தத் தன்னம்பிக்கைதான் ஒரு தலைவிக்கு அவசியத் தேவை. இவ்வளவு அவமானங்களுக்கு மத்தியிலும் அவரைச் செயல்பட வைத்திருப்பது இதுதான்.

கழுகார் பதில்கள்!

எம்.சுந்தரமூர்த்தி, கீழ்புதுப்பாக்கம்.

‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்பதன் பொருள் என்ன?


அரசியலில் பிழை செய்தவர்களை, அறமே தண்டிக்கும் என்பதுதான் சிலப்பதிகாரம் தீட்டிய இளங்கோவடிகள் சொல்லியது. சாமான்யன் தவறு செய்தால் அரசன் தண்டிப்பான். அரசனோ, அரசியல் அதிகாரம் பொருந்தியவரோ தவறு செய்தால் யார் தண்டிப்பது? ஆட்சியியலில் அடிப்படையான அறம்தான் அந்தச் செயலைச் செய்தாக வேண்டும்.

‘அறநெறி முதற்றே அரசின் கொற்றம்’ என்கிறது புறநானூறு.அதாவது, ஓர் அரசுக்கு அடிப்படையானது அறநெறிதானே?

‘கோவலன் குறித்த நிகழ்வில், மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியன் தவறு செய்தான். அவனை யார் தண்டிப்பது? அந்தக் குற்றவுணர்வே அவனைத் தண்டித்துவிட்டது’ என்றார் இளங்கோ. அதாவது, அறநெறி தண்டித்து விட்டது. இதுதான் சிலப்பதிகாரத்தின் அடிப்படை கருத்து.

ச.பா.ராஜா, குரும்பகரம்.

தலைக்கவசம் அணியாவிட்டால் வாகனம் ஓட்டுபவர்களுக்கு மட்டும்தான் உயிரிழப்பு. இதனைக் கட்டாயப்படுத்துவது தனிமனித சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் அல்லவா?


தலைக்கவசம் அணிவது என்பது தனிமனிதனின் பாதுகாப்புச் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. அவரின் குடும்ப நலனையும், சமூக நலனையும் சார்ந்ததுதான். இதனை உணர்ந்து தலைக்கவசம் அணிய வேண்டும். இதனால், தனிமனித சுதந்திரம் எங்கும் பறிக்கப்படவில்லை. சாலையில் செல்லும்போது, போக்குவரத்து விதிகள் காரணமாக சிக்னலில் நிற்கிறோம். இது ஒரு தனிமனிதனைச் செல்லவிடாமல் தடுப்பது என்று சொல்ல முடியுமா? சாலை விதிகள் மட்டுமல்ல இவை. சமூக விதிகளும்தான். சமூகத்துக்கு நலம் பயக்கும் விதிகளையும், தனிமனித சுதந்திரத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.

படங்கள்: ஜெ.வேங்கடராஜ், கே.குணசீலன், வீ.நாகமணி

‘நீயா நானா’ கோபிநாத், தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர்

கழுகார் பதில்கள்!

தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக பலர் சொல்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை?

வெ
ற்றிடம் ஏற்பட்டுள்ளது என்ற வார்த்தையை ரஜினிகாந்த் பயன்படுத்தினார். அந்த வெற்றிடத்தை நான் நிரப்ப வந்துள்ளேன் என அவரே சொல்லிக் கொள்கிறார். கருணாநிதிக்கு உடல்நலமில்லை என்பதும் ஜெயலலிதா இறந்துவிட்டார் என்பதும் அவர் சொல்லும் காரணங்கள். ஜெயலலிதா இறந்துபோனாலும், அவரது ஆட்சி அப்படியேதான் இருக்கிறது. அந்த ஆட்சிக்குப் பிரதமர் நரேந்திரமோடியின் அருளாசியும் இருக்கிறது. நடக்கவிருக்கும் தேர்தல்களில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி சேரவே பி.ஜே.பி-யும் இதுவரை திட்டமிட்டுள்ளது. கருணாநிதி உடல்நலமில்லாமல் இருக்கிறார் என்பது ரஜினியின் கருத்து. தி.மு.க உற்சாகத்துடன் இருப்பதை அந்தக் கட்சியின் ஈரோடு மாநாடு காட்டுகிறது. இதில் வெற்றிடம் என்று எதைச் சொல்ல வருகிறாரோ ரஜினி? ஆளும் அ.தி.மு.க அரசால் கொடுக்க முடியாத அழுத்தத்தை மத்திய அரசுக்குக் கொடுத்து, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் வல்லமை ஒரு தலைவருக்கு இருக்குமானால், அந்தத் தலைவர் மட்டுமே வெற்றிடம் நிரப்பும் தலைவராக இருக்க முடியும். ‘அரசியலைப் பற்றியே என்னிடம் கேட்காதீர்கள்’ என்றும், ‘கொள்கையா... இப்பவேவா?’ என்றும் கேட்கும் மனிதரால் எந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும்?

 கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,  757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு