அலசல்
Published:Updated:

தினகரன் ஆதரவாளரைக் காப்பாற்றுகிறாரா செல்லூர் ராஜு?

தினகரன் ஆதரவாளரைக் காப்பாற்றுகிறாரா செல்லூர் ராஜு?
பிரீமியம் ஸ்டோரி
News
தினகரன் ஆதரவாளரைக் காப்பாற்றுகிறாரா செல்லூர் ராஜு?

தினகரன் ஆதரவாளரைக் காப்பாற்றுகிறாரா செல்லூர் ராஜு?

கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு எதிராக சிவகங்கை அ.தி.மு.க-வினரே கொம்பு சுத்த ஆரம்பித்துள்ளனர். ‘தினகரனின் ஸ்லீப்பர் செல் செல்லூர் ராஜு’ என ஆளும்கட்சி பிரமுகரே குற்றம் சாட்டுகிறார். என்ன விவகாரம் இது?

தினகரன் ஆதரவாளரைக் காப்பாற்றுகிறாரா செல்லூர் ராஜு?

“சிவகங்கை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகச்சாலை (பாம்கோ) தலைவராக உள்ள உமாதேவன்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு மறைமுகமாக உத்தரவிட்டுள்ளார். அந்த உமாதேவன், தினகரன் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளராக இருக்கிறார். அவரை செல்லூர் ராஜுதான் காப்பாற்றுகிறார்” என்று சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க அவைத்தலைவரும் பாம்கோ துணைத் தலைவருமான காளிதாஸ் குற்றம் சாட்டுகிறார். தமிழகம் முழுவதும், சசிகலா அணிக்குத் தாவியர்கள் வகித்து வந்த பதவிகளைப் பறித்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், உமாதேவன் பதவி பறிக்கப்படவில்லை. உமாதேவனைக் காப்பாற்றியது செல்லூர் ராஜு என்பதும் இவர்களது குற்றச்சாட்டு.

நம்மிடம் பேசிய காளிதாஸ், ‘‘தமிழக அரசையும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரையும் தரமில்லாமல் பேசும் தினகரன் அணியின் மாவட்டச் செயலாளருக்கு  ஏன் அரசாங்க பதவி?  விலகிப் போகவேண்டியதுதானே... இவரைப் பதவியை விட்டுத் தூக்க அமைச்சர் செல்லூர் ராஜு மறுக்கிறார். கட்சிக்காக உழைக்கும் நாங்கள் பழிவாங்கப்படுகிறோம்” என்று குமுறினார்.

நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் மாநிலத் தலைவராகவும்  உமாதேவன் உள்ளார். அவரிடம் பேசினோம்.  ‘‘என் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்ததாகச் சொல்லப் படுகிறது. அது சம்பந்தமாக எனக்கு விசாரணை அதிகாரி யிடமிருந்து எந்தக் கடிதமும் வரவில்லை. காளிதாஸும் மற்ற இயக்குநர்களும் கமிஷன் வேண்டும் என்கிறார்கள். நான் எப்படி அவர்களுக்கு கமிஷன் கொடுக்க முடியும்? நான் தலைவராக வந்த பிறகு, கொள்முதல் விஷயங்களில் தலையிடுவதில்லை.  கொள்முதல் விவகாரங்கள் அனைத்தையும் அதிகாரிகள்தான் பார்த்துக் கொள்கிறார்கள். என் மீது நடவடிக்கை எடுக்கவேண்டாம் என நான் கூட்டுறவுத் துறை  அமைச்சரிடம் கேட்டதாகவும், அவர் எனக்காகப் பரிதாபம் காட்டுவதாகவும் சொல்லப்படுவது பொய்” என்றார்.

தினகரன் ஆதரவாளரைக் காப்பாற்றுகிறாரா செல்லூர் ராஜு?

அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் கேட்டபோது, ‘‘உமாதேவன் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாம்கோ இயக்குநர்கள் கொண்டு வந்துள்ளனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி நான்கு மாதங்களாகி விட்டன. உமாதேவன் பதவியை  நான் காப்பாற்றுகிறேன் என்பது பொய். நான் தினகரனின் ஸ்லீப்பர் செல் அல்ல” என்றார்.

சிவகங்கை மாவட்டக் கூட்டுறவுத் துறை இணைப்பதிவாளர் திலிப் குமாரிடம் கேட்டதற்கு, “பாம்கோ மாவட்டத் தலைவராக உள்ள உமாதேவன் மீது பதவிநீக்க நடவடிக்கை எடுக்கும் நேரத்தில்,  உயர் நீதிமன்றத்தில் அவர் தடையாணை வாங்கிவிட்டார். நாங்கள் பதில் மனு தாக்கல் செய்ய இருக்கிறோம்” என்றார்.

- தெ.பாலமுருகன்
படங்கள்: சாய் தர்மராஜ்