அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஸ்டாலினிடம் வருத்தப்பட்ட கவர்னர்!

மிஸ்டர் கழுகு: ஸ்டாலினிடம் வருத்தப்பட்ட கவர்னர்!
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு: ஸ்டாலினிடம் வருத்தப்பட்ட கவர்னர்!

மிஸ்டர் கழுகு: ஸ்டாலினிடம் வருத்தப்பட்ட கவர்னர்!

மிஸ்டர் கழுகு: ஸ்டாலினிடம் வருத்தப்பட்ட கவர்னர்!

‘‘‘கவர்னரைச் சந்திக்கவிருக்கிறார் ஸ்டாலின்’ என்று நீர் சொன்னீர். இதழ் வெளிவந்த நாளன்று கவர்னரைச் சந்தித்துவிட்டாரே ஸ்டாலின்?” என்று கழுகார் வந்ததும் உற்சாகம் ஊட்டினோம்!

‘‘கவர்னரை ஸ்டாலின் சந்தித்தது உண்மை. ஆனால், இன்றைய அமைச்சர்கள்மீது ஊழல் புகார் கொடுப்பதற்காக அவர் சந்திக்கவிருக்கிறார் என்று சொன்னேன். அது தொடர்பான தகவல்களைத் திரட்டிய பிறகு, அந்த விஷயம் தொடர்பாக சந்திப்பார்களாம். இப்போது, கவர்னரே ஸ்டாலினை வரவழைத்துப் பார்த்தார். கவர்னர் அலுவலகத்திலிருந்து மார்ச் 27-ம் தேதி இரவு, ஸ்டாலினுக்கு அழைப்பு வந்தது. கவர்னருடன் சந்திப்புக்கான அந்த அழைப்பு, மிக ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. ஆனால், மறுநாள் விஷயம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் செய்தியால், மற்ற அரசியல் கட்சிகளைவிட, அ.தி.மு.க வட்டாரம்தான் கதிகலங்கிப்போனது. என்ன காரணமாக இருக்கும் என்று செய்தியைத் தோண்டினர். துணைவேந்தர் நியமனம் தொடர்பாக என்றதும் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டனர். ஆனாலும், பதற்றம் குறையவில்லை!”

‘‘கவர்னர் மாளிகையில் என்ன நடந்ததாம்?”

‘‘ஸ்டாலினுடன் துரைமுருகனும் சென்றிருந்தார். கவர்னருடன் அவருடைய செயலர் ராஜகோபால் ஐ.ஏ.எஸ் இருந்துள்ளார். வழக்கமான வரவேற்பு வைபவங்கள் முடிந்ததும், அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்துக்கு, தம்ம சூர்ய நாராயண சஸ்திரியை கவர்னர் நியமனம் செய்தது தொடர்பாக, சந்தேகம் கிளப்பியும் கண்டனம் தெரிவித்தும் ஸ்டாலின் அனுப்பிய கடித விவகாரத்தை கவர்னர் தொடங்கினார். உடனே, சில கோப்புகளை அவசரமாக விரித்து ஸ்டாலின் முன் வைத்துள்ளார் ராஜகோபால். அதன் பிறகு பேச ஆரம்பித்த கவர்னர், ‘சர்ச் கமிட்டியின் பரிந்துரையில், சூர்ய நாராயண சாஸ்திரியின் பெயர் இருந்தது. இதோ பாருங்கள் அதற்கான ஆதாரம். அந்தப் பரிந்துரை மற்றும் மெரிட் அடிப்படையில்தான் அவரை நியமித்தேன். வேறு எந்த நோக்கமும் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு பேசிய மு.க.ஸ்டாலின், ‘அவர், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இளநிலை சட்டக்கல்வி இயக்குநராக இருந்தபோது, சம்ஸ்கிருத மொழியைச் சட்டப் பல்கலைக்கழக மாணவர்களிடம் திணிக்கும் வேலையில் ஈடுபட்டார். அவர்மீது வேறு பல முறைகேடு புகார்களும் இருந்தன. அதையடுத்து, அப்போதைய தி.மு.க அரசால் கடும் கண்ட னத்துக்குள்ளாகி, அங்கிருந்து மாற்றப்பட்டார். அதை நீங்கள் கவனத்தில் கொண்டிருக்கலாமே’ எனக் கேட்டதும், ‘குற்றச்சாட்டுகள் அவர்மீது எழுந்தது உண்மைதான். ஆனால், விசாரணையின் இறுதியில் அவை எதுவும் நிரூபிக்கப் படவில்லையே. அதைக் கருத்தில்கொண்டுதான், அவரை நியமித்தேன்’ என்று கவர்னர் கூறியிருக்கிறார். அதன் பிறகு, கவர்னர் மற்றொரு விவகாரத்தை எழுப்பி வருத்தப்பட்டாராம்!”

மிஸ்டர் கழுகு: ஸ்டாலினிடம் வருத்தப்பட்ட கவர்னர்!

‘‘கவர்னருக்கு என்ன வருத்தம்?”

‘‘தி.மு.க மீது அதிகமான வருத்தத்தில் கவர்னர் இருக்கிறாராம். ‘நான் ஆய்வுக்குச் செல்லும் இடங்களில் தி.மு.க-வினர் கறுப்புக்கொடி காட்டுவது ஏன்?’ என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார். அதற்கு, ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாமல் இருந்தால், நீங்கள் ஆய்வு செய்யலாம்; அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. சரியோ தவறோ, எங்களுக்கு உடன்பாடு இல்லையென்றாலும், இந்த மாநிலத்தில் ஓர் அரசு நடக்கிறது. அப்படியிருக்கும் போது, நீங்கள் ஆய்வுக்குச் செல்வது என்பது ஜனநாயகத்தில் வழக்கமில்லை. அது ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும். அதனால்தான், நாங்கள் கறுப்புக் கொடி காட்டுகிறோம்’ என ஸ்டாலின் விளக்கம் கொடுத்துள்ளார். அதைக் கேட்டுக்கொண்ட கவர்னர், ‘நான் அதைப் பரிசீலிக்கிறேன்’ என்று பதில் கொடுத்துள்ளார். இவ்வளவுதான் நடந்தது. வெளியில் வந்த ஸ்டாலின், ‘எங்களை அழைத்து கவர்னர் விளக்கம் அளித்தது பாராட்டுக்குரியது’ என்றார். இந்தத் தகவல்கள் முதல்வர் எடப்பாடிக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், ‘இவ்வளவு தூரம் தி.மு.க-வுடன் அனுசரித்துப் போகவேண்டுமா கவர்னர்?’ என்று கேட்டாராம் முதல்வர்!”

‘‘பா.ம.க நிறுவனர் ராமதாஸும் கவர்னரைச் சந்திக்க உள்ளாராமே?”

‘‘ஆம். கவர்னரை, ஏற்கெனவே பா.ம.க சார்பில் அன்புமணி ராமதாஸ் சந்தித்து ஊழல் புகார் கொடுத்தார். அதில், தமிழக அரசு மீது 18 வகையான ஊழல்களைப் பட்டியலிட்டிருந்தார். அது தொடர்பாக, கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஓர் ஊழல் பட்டியலுடன் கவர்னரைச் சந்திக்கவுள்ளார் ராமதாஸ். இந்தப் பட்டியலில், பல்கலைக் கழகங்கள் மீதான ஊழல் புகார்கள் மட்டுமே இருக்குமாம். கடந்த ஆட்சி தொடங்கி இப்போதுவரை, துணைவேந்தர் நியமனத்தில் என்னென்ன முறைகேடுகள் நடந்துள்ளன, பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் நியமனங்கள் தொடங்கி, சாதாரண ஊழியர்களின் நியமனங்கள் வரை நடக்கும் முறைகேடுகள், பல்கலைக்கழகத்தின் நிதி எப்படியெல்லாம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; அதில் யாரெல்லாம் ஆதாயம் அடைந்தனர் என்பது உள்ளிட்ட அனைத்தையும் ராமதாஸ் திரட்டிவருகிறார். முழுமையான தகவல்கள் கிடைத்ததும், அவற்றை கவர்னரிடம் கொடுக்கப்போகிறார். தேதி முடிவு செய்யப் படவில்லை. இந்த விவகாரத்தை, மிகப்பெரிதாகக் கொண்டுசெல்ல பா.ம.க திட்டமிட்டுள்ளது. பல்கலைக் கழகங்களுக்கு கவர்னர்தான் வேந்தர். எனவே, இந்த முறைகேடு புகார்கள் மீது கவர்னர் நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும். அல்லது, முறையான காரணங்களைச் சொல்ல வேண்டும். இப்படியொரு இக்கட்டான நிலையை கவர்னருக்கு ஏற்படுத்த பா.ம.க திட்டமிட்டுள்ளது.”

மிஸ்டர் கழுகு: ஸ்டாலினிடம் வருத்தப்பட்ட கவர்னர்!

‘‘காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் தமிழக அரசு விழிபிதுங்கி நிற்கிறதே?”

‘‘உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாது என்பது தெரிந்ததுதானே. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த நாளிலிருந்தே மத்திய அரசு சார்பில் பேசிய அதிகாரிகளும், நீர்வளத் துறை இணையமைச்சரும் அதைத்தானே மறைமுகமாகச் சொல்லிக் கொண்டிருந்தனர். ‘தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும்’ என்று பலரும் சொல்லி வருகிறார்கள். அப்படி எதுவும் நடந்துவிடாது. ‘உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்க மனுவைத் தாக்கல் செய்வதுபோல, தமிழக அரசும் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று டெல்லியிலிருந்து பிரஷர் வந்துள்ளதாம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பில், தெளிவான வாசகம் இல்லை. அதனால், தீர்ப்பை விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்று தமிழக அரசும் மனு தாக்கல் செய்யும். அதைவைத்து, கொஞ்சம் காலம் கடத்தலாம். ‘கர்நாடகத் தேர்தல் முடிந்துவிட்டால், அதன்பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்று எடப்பாடியும் நினைப்பதாகச் சொல்கிறார்கள். உச்ச நீதிமன்றத்துக்கும் கோடை விடுமுறை வந்துவிடும். அப்படியே காலத்தை ஓட்டலாம் என்று நினைக்கிறார்களாம்.”

“திடீரென, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியைத் தமிழக பி.ஜே.பி குழு சந்தித்துள்ளதே? அவர்களுக்காவது நம்பிக்கையான வாக்குறுதி எதுவும் தரப்பட்டதா?”

“பி.ஜே.பி-யின் இல.கணேசன், கருப்பு முருகானந்தம், பொன்.விஜயராகன் ஆகியோர் கொண்ட ‘தமிழக காவிரி குழு’, நிதின் கட்கரியை மார்ச் 28-ம் தேதி டெல்லியில் சந்தித்தது. ‘எப்படியாவது காவரி மேலாண்மை வாரியத்தை அமையுங்கள். தமிழ்நாட்டில் ஒரே பிரச்னையாக இருக்கிறது. எங்களால் பதில் சொல்லி முடியவில்லை’ என்று மூவரும் கூறியுள்ளனர். அதற்கு, ‘உடனடியாக, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது. நாளாகும்’ என்று சொன்ன கட்கரி, ‘தூத்துக்குடியில் கடல்நீராக்கும் திட்டத்தை விரைவில் கொண்டுவரவிருக்கிறோம். அதில், குடிநீர் தேவை போக, மீதித் தண்ணீரை விவசாயத்துக்குத் தருவோம். நதிநீர் இணைப்பு வேலைகள் துரிதமாக நடந்துவருகின்றன. அதன் மூலம், தமிழகத்துக்கு உரிய தண்ணீர் கிடைக்கும்’ என்று வாக்குறுதிகளை அள்ளிவிட்டாராம். அதற்கு மேல் அவரிடம் என்ன பேசுவது என்று தெரியாமல், மூவரும் சென்னை திரும்பி விட்டார்கள்.”

மிஸ்டர் கழுகு: ஸ்டாலினிடம் வருத்தப்பட்ட கவர்னர்!

‘‘மூத்த அமைச்சர்களை மட்டும் அழைத்து மார்ச் 29-ம் தேதி காலையில் முதல்வர் ஆலோசனை நடத்தியிருக்கிறாரே?”

‘‘ஆமாம்! ‘பிரதமரைச் சந்திப்பது, மீண்டும் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்துவது, மத்திய அரசுமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பது என நமக்கு முன் மூன்று வழிகள்தான் உள்ளன. மத்திய அரசுமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பது சாத்தியமில்லை. பிரதமர் நேரம் கொடுத்தால்தான் நம்மால் சந்திக்க முடியும். எனவே, அனைத்துக்கட்சிக் கூட்டத்தை மீண்டும் நடத்தலாம்’ என்று முதல்வர் கூறியுள்ளார்.”

மிஸ்டர் கழுகு: ஸ்டாலினிடம் வருத்தப்பட்ட கவர்னர்!

‘‘அதனால் என்ன பயன்?”

‘‘காலத்தைக் கடத்துவதும், நாமும் ஏதோ செய்தோம் என்பதும்தான்” என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார், ‘‘சசிகலாவைத் திடீரென வைகோ சந்தித்துள்ளார். மார்ச் 28-ம் தேதி தஞ்சாவூருக்கு வைகோ சென்றார். நடராசன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்திய வைகோவிடம், ‘சசிகலா, தஞ்சாவூரில்தான் இருக்கிறார். அவரைச் சந்தியுங்கள்’ என்று கட்சிக்காரர்கள் சொல்லியுள்ளனர். ‘இதில் அரசியல் எதுவுமில்லை. என் கல்லூரிக் கால நண்பர் நடராசன். அவர் இறப்புக்கு அஞ்சலி செலுத்துவதும், துக்கம் விசாரிக்க சசிகலாவைச் சந்திப்பதும் அரசியல் அல்ல’ என்று வைகோ சொல்லியுள்ளார். சசிகலா தங்கியுள்ள பரிசுத்தம் நகர் வீட்டுக்குச் சென்ற வைகோ, ஒரு மணி நேரத்துக்கு மேலாக சசிகலாவுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, நடராசன் குறித்துப் பேசிய வைகோ, சசிகலாவின் உடல் நலம் குறித்து அக்கறையாக விசாரித்தாராம். வைகோ புறப்பட்டபோது, ‘நான், இக்கட்டான சூழ்நிலையில் இருக்கேன். இந்த நேரத்துல  எனக்கு ஆறுதல் சொல்ல நீங்கள் வந்தது, எனக்கு மிகப்பெரிய பலம்’ என்று நா தழுதழுக்க சசிகலா சொன்னாராம். கடைசியில், ‘ரொம்ப நன்றிண்ணே’ என்று சசிகலா சொன்னபோது, அவரது கண்கள் கலங்கினவாம். சந்திப்பின்போது உடனிருந்த தினகரன், வாசல் வரை வந்து வைகோவை வழியனுப்பி வைத்தாராம்” என்றபடி பறந்தார்.