அலசல்
Published:Updated:

40 நாள் ‘கைவிரி’ நாடகம்

40 நாள் ‘கைவிரி’ நாடகம்
பிரீமியம் ஸ்டோரி
News
40 நாள் ‘கைவிரி’ நாடகம்

#WeWantCMB

காவிரி பிரச்னை தலைதூக்கும் போதெல்லாம், அரசியல் ரீதியான சர்ச்சைகள் பாய்ந் தோடுவது வழக்கம். ‘கர்நாடகாவில் தேர்தல் நடக்கிறது. அதனால்தான், மத்திய அரசு கர்நாடகாவுக்குச் சாதகமாக நடந்து கொள்கிறது’, ‘மத்தியில் பி.ஜே.பி ஆட்சி செய்கிறது. அதனால் தான் அநீதி இழைக்கப்படுகிறது’, ‘காங்கிரஸாக இருந்தால் இதுபோல் நடக்காது’, ‘கருணாநிதியால் தான், காவிரி பிரச்னையில் தமிழ்நாட்டுக்குப் பின்னடைவு ஏற்பட்டது’, ‘ஜெயலலிதா முயற்சியால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 2003-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது’. இப்படியாக, பல கருத்துகள் விவாதங்களாகவே நீடிக்கின்றன. இந்த அரசியலுக்குள்தான், நம்மை முடக்கி வைக்கிறார்கள். இந்த அரசியலிலிருந்து காவிரி முதலில் மீட்கப்பட்டாக வேண்டும்.

கர்நாடகா தேர்தல் காரணமா?

இல்லை! தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரைப் பெற்றுத்தர திராணி இல்லாத அரசியல் கட்சிகள், திட்டமிட்டே கிளப்பிவிடும் பொய் இது. தங்களது பலகீனத்தையும் கையாலாகாத்தனத்தையும் மறைப்பதற்காகவே, இப்படிக் கிளப்பிவிடுகிறார்கள். கர்நாடகாவில் தற்போது தேர்தல் இல்லாத காலமாக இருந்தாலும், பி.ஜே.பி இப்படித்தான் நடந்துகொள்ளும். 2014-ம் ஆண்டு, இந்தியப் பிரதமராக மோடி பதவியேற்றார். மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது எனக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசு மறுத்து வருகிறது. கடந்த 40 ஆண்டுகளாக, காவிரியில் தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் தேர்தல் வருகிறது. ஆனால், பெரும்பாலான ஆண்டுகளில், தண்ணீர் பற்றாக்குறையால் தமிழ்நாட்டு விவசாயிகள் தவிக்கிறார்கள். விவசாயிகள் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு வறட்சி தாண்டவமாடிய காலங்களிலும் கூட, மத்திய அரசு கர்நாடகாவுக்குச் சாதகமாகத்தான் நடந்து கொண்டுள்ளது. அதுபோன்ற ஆண்டுகளில், கர்நாடகாவில் பெரும்பாலும் தேர்தல் தருணம் இல்லை. பிறகு எப்படித் தேர்தல் அரசியலுடன் காவிரியை ஒப்பிடுவது?

40 நாள் ‘கைவிரி’ நாடகம்

காங்கிரஸ் செய்த தவறுகள்!

காந்திய வழியில் வந்ததாகச் சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், காவிரி பிரச்னையில் எப்போதுமே நேர்மையாக நடந்துகொண்டதில்லை. இந்திரா காந்தி தொடங்கி மன்மோகன் சிங் வரை, காங்கிரஸ் பிரதமர்கள் அனைவருமே தமிழ்நாட்டுக்கு, காவிரியில் துரோகம்தான் இழைத்துள்ளார்கள். தமிழ்நாட்டுக்கு 205 டி.எம்.சி தண்ணீர் தரவேண்டும் என 1991-ம் ஆண்டு, காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பில் உத்தரவிடப்பட்டது. 1991 முதல் 96 வரை, காங்கிரஸ்தான் மத்தியில் ஆட்சி செய்தது. பிரதமராக இருந்த நரசிம்ம ராவ், தமிழ்நாட்டுக்கு 205 டி.எம்.சி தண்ணீரைப் பெற்றுத்தர எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

2004 முதல் 2014 வரை, மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசுதான் மத்தியில் ஆட்சி செய்தது. அப்போது கர்நாடகாவுக்குச் சாதகமாகவே மத்திய அரசு நடந்துகொண்டது.

2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. அத்தீர்ப்பை அரசிதழிலில் வெளியிட்டு, உடனடியாகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருக்க வேண்டும். ஆனால், மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஜெயலலிதாவின் சாதனையா?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடக் கோரி, தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா எந்த ஒரு வழக்கையும் தொடுக்கவில்லை. 2007-ம் ஆண்டு, காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பில் தங்களது மாநிலத்துக்கு உரிய தண்ணீரின் அளவு குறைவாக இருப்பதாகவும், அதனை மறுவரையறை செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுமே உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தன. அந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தாமாகவே முன்வந்து, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அந்த உத்தரவு வெளியானதால், காவிரித்தாய், பொன்னியின் செல்வி போன்ற பட்டங்கள் அவருக்குச் சூட்டப்பட்டன. அந்த உத்தரவுக்குப் பிறகு, தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ஜெயலலிதாதான் தமிழக முதல்வராக இருந்தார். ஆனாலும், காவிரி மேலாண்மை வாரியம் அமையவில்லை.

40 நாள் ‘கைவிரி’ நாடகம்

கருணாநிதி செய்த பழைய தவறு!

1960-களின் இறுதியில், காவிரி ஆற்றில் ஹேமாவதி, ஹேரங்கி, கபினி உள்ளிட்ட அணைகளை கர்நாடகம் கட்டத் தொடங்கியது. 1967-ல் தமிழகப் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த கருணாநிதி, கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும், கர்நாடகம் செவிசாய்க்கவில்லை. காவிரி ஒப்பந்தத்தை மீறி, சட்டவிரோதமாக அணைகளை கர்நாடகம் கட்டுவதாகவும், தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கட்டப்படும் அணைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் விவசாயிகளின் சார்பில் ஜி.கே.மூப்பனார், மன்னை நாராயணசாமி, முரசொலி மாறன் உள்ளிட்டோர் 1970-ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்கள். அந்த வழக்கில், தமிழக அரசும் தன்னை இணைத்துக்கொண்டது.

இந்திரா காந்தி தலைமை ஓர் அணி, கர்நாடகா வைச் சேர்ந்த நிஜலிங்கப்பா தலைமையில் ஓர் அணி என இரண்டு அணிகளாக காங்கிரஸ் கட்சி பிளவுப்பட்டது. இந்திரா காந்தி அணியைச் சேர்ந்த தேவராஜ் அர்ஸ், கர்நாடகாவில் முக்கியத் தலைவராக இருந்தார். 1972-ம் ஆண்டு, கர்நாடகாவில் தேர்தல் வந்தது. தேவராஜ் அர்ஸ் தலைமையில் இந்திரா காந்தி அணி தேர்தலைச் சந்தித்தது. கன்னடர்களிடம் செல்வாக்குப் பெறுவதற்காக, காவிரி வழக்கைத் தமிழ்நாடு அரசு வாபஸ் வாங்க வேண்டும் என ஆசைப்பட்டார் இந்திராகாந்தி. அவருடன் கூட்டணியில் இருந்த கருணாநிதியை இதற்குச் சம்மதிக்க வைத்தார். ‘இப்போது வழக்கை வாபஸ் வாங்குங்கள். காவிரி பிரச்னையை நான் தீர்த்து வைக்கிறேன்’ என இந்திராகாந்தி கொடுத்த வாக்குறுதியை நம்பி, கருணாநிதி ஏமாந்தார். 

40 நாள் ‘கைவிரி’ நாடகம்

தமிழகத்தைப் புறக்கணிக்க என்ன காரணம்?

தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்யும் தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுமே லட்சக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட பெரிய கட்சிகள். இவற்றின் தலைவர்களான கருணாநிதியும், ஜெயலலிதாவும் பெரும் தலைவர்கள். ஆனால், இவர்கள் இருவரும் எந்தப் பிரச்னையிலும் ஒன்றுசேர மாட்டார்கள். கர்நாடகாவில் அப்படியல்ல. காங்கிரஸ், பி.ஜே.பி எனத் தேசியக் கட்சிகளில் இருந்தாலும்கூட, இன உணர்வுடன் அவர்கள் ஒன்றுபட்டுப் போராடு கிறார்கள். காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி இரண்டுமே கர்நாடகாவில் ஆட்சிக்கு வரும் கட்சிகள் என்பதால், எப்போதுமே காவிரி விஷயத்தில் அந்த மாநிலத்துக்குச் சாதகமாகவே அவை நடந்து கொள்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு இந்தக் கட்சிகளுக்கு இல்லை. அதனால், தமிழகத்தை இவர்கள் இரண்டாம் தரமாக நடத்துகிறார்கள்.

40 நாள் நாடகம்!

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, கடந்த பிப்ரவரி 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித்தீர்ப்பு அளித்தது. காவிரி நடுவர் மன்றம் அளித்த 192 டி.எம்சி அளவைக் குறைத்து 177.25 டி.எம்.சி-யாக ஆக்கியது. இந்த அளவு தண்ணீரை கர்நாடகம் தருகிறதா என்பதைக் கண்காணிக்க, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். அதுவும் ஆறு வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆறு வாரங்கள் என்றால், மார்ச் 29-ம் தேதிக்குள் அமைக்கப்பட வேண்டும். இந்த இதழ் அச்சுக்குச் செல்லும் வரை, அது தொடர்பாக எந்த முடிவையும் மத்திய அரசு சொல்லவில்லை. அதிகாரபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை. சுமார் 40 நாள்கள் மத்திய அரசு தூக்கத்தில் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கிடையில், தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்துள்ளது. அனைத்துக் கட்சித் தலைவர்களும் பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டார்கள். அவரும் மத்திய நீர்வள அமைச்சரைச் சந்திக்கச் சொன்னார். பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டு, முதல்வர் கடிதம் எழுதினார். தமிழகம் உள்பட நான்கு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடந்தது. இதைத் தொடர்ந்து, மார்ச் 15-ம் தேதி தமிழக சட்டசபையின் சிறப்புக்கூட்டம் கூட்டப்பட்டு, சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். கடந்த 17 நாள்களாக தமிழக எம்.பி-க்கள் அனைவரும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நாடாளுமன்றத்துக்கு முன்பாக, அடையாளப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன், தமிழக பி.ஜே.பி-யைச் சேர்ந்த இல.கணேசன், கருப்பு முருகானந்தம், விஜயராகவன் ஆகியோர் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியைச் சந்தித்தார்கள். இப்படி, 40 நாள்களாக நினைவூட்டிக்கொண்டே இருந்தும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.

40 நாள் ‘கைவிரி’ நாடகம்

‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் இல்லை. அதனால், விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்துக்கு மனு கொடுக்க உள்ளனர்” என டெல்லி தகவல்கள் சொல்கின்றன. காவிரி மேலாண்மை வாரியம், காவிரிநீர் ஒழுங்காற்று வாரியம் ஆகிய இரண்டையும் அமைக்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தெளிவாக உள்ளது. இது பற்றி ஏதாவது சந்தேகம் வந்தால், மத்திய நீர் ஆணையத்தின் ஆலோசனையைப் பெறலாம் என்று உள்ளது. இதைத்தான் செயல்படுத்தச் சொன்னது உச்ச நீதிமன்றம். இப்போது, மீண்டும் விளக்கம் கேட்கப் போகிறார்கள் என்றால், காவிரியைக் ‘கைவிரி’ ஆக்க முயற்சி செய்கிறார்கள் என்றுதான் அர்த்தம். 1991-ம் ஆண்டு, காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 28 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் இழுத்தடித்து, தமிழ்நாட்டுக்கும் காவிரிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று காட்ட முயற்சி செய்கிறார்கள். இதை, தாங்கள் செய்யாமல் நீதிமன்ற இழுத்தடிப்புகள் மூலம் செய்து காட்ட முயற்சி செய்கிறார்கள்.

- கு.இராமகிருஷ்ணன்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன், கே.குணசீலன்
அட்டைப் படம்: ராஜ்குமார் ஸ்தபதி