Published:Updated:

`அணு உலை ஆபத்தா..?’- அப்துல் கலாம் சொன்ன அந்த பதில்..! #HBDAbdulkalam

`அணு உலை ஆபத்தா..?’-  அப்துல் கலாம் சொன்ன அந்த பதில்..!  #HBDAbdulkalam
`அணு உலை ஆபத்தா..?’- அப்துல் கலாம் சொன்ன அந்த பதில்..! #HBDAbdulkalam

`அணு உலை ஆபத்தா..?’- அப்துல் கலாம் சொன்ன அந்த பதில்..! #HBDAbdulkalam

இன்று அப்துல்கலாம் பிறந்ததினம். கிராமத்தில் பிறந்து இந்தியாவின் முதல் குடிமகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதென்பது வார்த்தைகளில் சுருக்கவியலாத ஆச்சர்யம். அப்துல்கலாம், ஒரு தலைமுறை இளைய சமூகத்தின் நம்பிக்கை நாயகன். திரைபிரபலம் தவிர்த்து அறிவியல் துறை சார்ந்த ஒரு மனிதனை, மிகப்பெரிய அளவில் இளைஞர் கூட்டம் தங்களின் ஆதர்சமாக நினைத்துப் பின்பற்றியது அப்துல்கலாமைத்தான். அப்துல்கலாமைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைக் காணலாம். 

பலருக்கும் அப்துல்கலாம் ஆச்சர்யமளிக்கக் கூடிய ஒரு மனிதர். ஆனால், அப்துல்கலாம் ஒரு மனிதரைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுள்ளார். அவர்தான் கோவை கிருஷ்ணமூர்த்தி. ``ஜனாதிபதியாக இருந்தபோது, ஒருமுறை அப்துல்கலாம் கோயம்புத்தூர் சென்றுள்ளார். இரவு 11 மணி அளவில் பார்வையாளர்களைப் பார்த்தபோது, ஒருவர் வீல் சேரில் வந்துள்ளார். அவரைப் பார்த்ததும் ஆச்சர்யமடைந்துள்ளார் அப்துல்கலாம். அவருக்கு இரண்டு கைகளும் இல்லை, கால்களும் இல்லை. அவரிடம், `உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானால் சொல்லுங்கள் சார்... செய்கிறேன்’ எனக் கூறியுள்ளார் அப்துல்கலாம். கணீர் என்ற குரலில் அவர் சொன்னார், `எனக்கு உங்களிடமிருந்து ஒன்றும் வேண்டாம். நான் நன்றாகப் பாடுவேன். உங்கள் முன்பு பாடட்டுமா?’ என்று கேட்டுள்ளார் கிருஷ்ணமூர்த்தி. அப்துல்கலாம் `பாடுங்கள்' எனக் கூறியுள்ளார். `எந்தரோ மகானுபாவலு’ என்ற தியாகராஜ கீர்த்தனையை ஸ்ரீராகத்தில் பாடியுள்ளார் கிருஷ்ணமூர்த்தி. அவர் பாடியதைக் கேட்டு வியந்துபோன அப்துல்கலாம், அவரை ராஷ்டிரபதி பவனுக்கு அழைத்துக் கௌரவித்து, அங்கும் பாடச் செய்துள்ளார். 

பலருக்கும் இன்று அப்துல்கலாம் `ரோல்மாடல். அப்துல்கலாமுக்கு ரோல்மாடல் இருவர். ஒருவர், ராக்கெட் சமன்பாட்டைக் கண்டு பிடித்த ரஷ்யாவின் கான்ஸ்ஸான்டின் டிஸ்யோல்ஸ்கி என்பவர். அவர்தான் ராக்கெட் துறையில் உள்ள அனைவருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்துள்ளார். மற்றொருவர் அப்துல்கலாம் தன்னுடைய குரு எனச்சொல்லும் விக்ரம் சாராபாய்.

 ​​​​​அப்துல்கலாம் மீது வைக்கும் இரு முக்கியமான குற்றச்சாட்டுகள், அவர் காலத்தில் இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் அவர் பெரிதாக எதுவும் செய்யவில்லை என்பது. அதற்கு அவர் பின்னர் பதிலளித்தார். 

`ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தாய் நாட்டுக்கு என்று சொல்லிக்கொள்ளும்படி எதுவும் செய்யவில்லை’ என்ற குற்றஉணர்வு உங்களுக்கு இருந்திருக்கிறதா?

``ஜனாதிபதி பதவியில் இருக்கும்போது, இந்தியா 2020-க்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற தாரக மந்திரத்தை விதைத்தேன். ஒருங்கிணைந்த நீடித்த வளர்ச்சியைக் கிராமப்புறங்கள் அடைய வேண்டி, நகர்ப்புற வசதிகள் கிராமப்புறங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற `புரா’ திட்டத்தைப் பிரபலப்படுத்தினேன். வளர்ச்சி அரசியல்தான் நாட்டுக்குத் தேவை என மக்களிடம் வலியுறுத்தினேன். அதன் பயன்பாடு இந்தியா முழுவதும் இப்போதும் எதிரொலிக்கிறது’’ என்றார்.

மற்றொரு கேள்வி கூடங்குளம் அணு உலை சம்பந்தப்பட்டது. 

ஜப்பானின் அணு உலைகள் வெடித்துச் சேதம் விளைவிக்கின்றன என்பதைக் கண்கூடாகப் பார்த்துவிட்டோம். இந்நிலையில்.. கல்பாக்கம், கூடங்குளம் அணு மின் நிலையங்களை மூட வேண்டும் என்று எழும் கோரிக்கைகள் குறித்து உங்கள் கருத்து என்ன?''

``டைட்டானிக் கப்பல் கவிழ்ந்து 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் நடுக் கடலில் மரித்தார்கள் - கப்பல் பயணத்தையே விட்டுவிட்டோமா? வருடம்தோறும் விமான விபத்து நடக்கிறது - விமானப் பயணத்தையே தவிர்த்துவிட்டோமா? இல்லையே!

ஜப்பானில் மோசமான ஒரு சூழ்நிலையில், சுனாமியும் பூகம்பமும் ஒருங்கே நிகழ்த்திய சோகம் அது. அதை எதிர் பாராததால், மாற்று மின் சக்தியைச் சரியான நேரத்தில் கொடுக்கத் தவறியதால், உபயோகிக்கப்பட்ட எரிபொருள் குளிர்ச்சியாகாத காரணத்தால், விபத்து நேர்ந்துவிட்டது. பாதுகாப்புத் தன்மையில் அவ்வப்போது மாற்றம் செய்யாததின் விளைவே அந்த விபத்து.

எனவே, உலகின் அனைத்து அணு உலைகளையும் மீண்டும் ஆய்வு செய்து, அவற்றுக்கு இப்படிப்பட்ட சிக்கலான இயற்கைச் சீற்றங்களைத் தாங்கும் சக்தி உள்ளதா என்பதை ஆராய்ந்து, அதற்கேற்ப அணு மின் நிலையங்களின் பாதுகாப்பைப் பலப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளன. இந்தியாவும் தனது அணு உலைகளின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் மும்முரமாக இருக்கிறது. அணு மின் சக்திதான் தூய்மையான எரிபொருள். எனவே, அணு மின்சாரம் கண்டிப்பாகத் தேவை. இந்தியாவின் ஆராய்ச்சியில் தோரியம் மூலம் உருவாக்கப்படும் அணு மின் நிலையங்கள், யுரேனியத்தின் அணு மின் நிலையங்களைவிட மிகவும் பாதுகாப்பானவை. அவை சீக்கிரம் உருகாத தன்மைகொண்டவை. ஒரு மெட்ரிக் டன் தோரியத்தில் கிடைக்கும் எரிசக்தி, 200 மெட்ரிக் டன் யுரேனியத்தில் அல்லது 3.5 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரியில் கிடைக்கும் சக்திக்குச் சமம். அதை அமைக்க ஆகும் செலவும் மிகக் குறைவு. எனவே, நம்பிக்கையோடு இருங்கள்!'' என பதிலளித்தார்.

 இன்றைக்கும் பல நூறு இளைஞர்கள் தங்கள் லட்சியப் பயணத்தைத் தொடங்கும் முன் அப்துல்கலாமின் மணிமண்டபத்துக்குச் சென்று ஆசிபெற்ற பின் தொடங்குகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை அப்துல்கலாம் அவர்களின் கனவுகளில் வாழ்பவர்.

அடுத்த கட்டுரைக்கு