Published:Updated:

` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு!'  - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி

ஆ.விஜயானந்த்

தினகரனால் பாதிக்கப்படக் கூடிய லோக்கல் அமைச்சர்களிடம், ` உங்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள். தினகரனை எதிர்த்து நில்லுங்கள்' எனக் கூறிவிட்டேன்.

` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு!'  - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி
` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு!'  - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி

` அ.தி.மு.கவுடன் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணையும்' என்ற ரீதியில் தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. ` தினகரன் பெறக் கூடிய வாக்குகளுக்கும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அ.தி.மு.க சென்டிமெண்டுகளுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. அவரால் தி.மு.கவுக்குத்தான் பாதிப்பு வரப் போகிறது' என ஆதரவாளர்களிடம் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

கிண்டி, ராஜ்பவனில் கடந்த 5-ம் தேதி ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்துப் பேசினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இந்தச் சந்திப்பில், அ.தி.மு.கவோடு அ.ம.மு.க இணைவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகத் தகவல் பரவியது. இதன்பின்னர், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார் முதல்வர். இதிலும், இணைப்பு முயற்சிக்கு அ.தி.மு.க தரப்பில் சம்மதம் தெரிவித்துவிட்டதாகத் தகவல் வெளியானது. இதுதொடர்பாக அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், கருத்து தெரிவித்து வந்தனர். இப்படியொரு விவாதம் கிளம்புவதை, எடப்பாடி பழனிசாமி ரசிக்கவில்லை. தினகரன் - பன்னீர்செல்வம் ரகசிய சந்திப்பு வெளிவந்ததன் தொடர்ச்சியாகவே, இதுபோன்ற தகவல்கள் பரவுவதாகவும் கொங்கு மண்டல நிர்வாகிகள் வருத்தப்பட்டனர். நேற்று இதுதொடர்பாக விரிவாகப் பேசியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

தினகரன் கட்சியோடு இணைவது குறித்து நிர்வாகிகளோடு பேசிய முதல்வர், ` இப்படியொரு தகவல் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. தினகரன் பெறக்கூடிய வாக்குகள் என்பது அ.தி.மு.க எதிர்ப்பு வாக்குகள்தான். அம்மா (ஜெயலலிதா) இருந்தபோது, பத்தாண்டுகளாக அவர் கட்சிக்குள் நுழைய முடியாமல்தான் இருந்தார். தினகரனால் பாதிக்கப்படக் கூடிய லோக்கல் அமைச்சர்களிடம், ` உங்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள். தினகரனை எதிர்த்து நில்லுங்கள்' எனக் கூறிவிட்டேன். முக்குலத்தோர் சமூக வாக்குகள் அவர் பக்கம் போவதைத் தடுக்கக் கூடிய வேலைகளும் நடந்து வருகின்றன. பா.ஜ.கவால் அவர் பாதிக்கப்பட்டதால், சிறுபான்மை வாக்குகள் அவர் பக்கம் கொஞ்சம் செல்கின்றன. முத்தலாக், ஹஜ் மானியம் உள்ளிட்ட விவகாரங்களில், இஸ்லாமியர்கள் நலன் காக்கும் விஷயங்களில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது. இதன்மூலம், சிறுபான்மை மக்கள் மத்தியில் நமக்கான இமேஜ் உயர்ந்து வருகிறது. தினகரனால் அதிகம் பாதிக்கப்படப் போவது ஸ்டாலின். நமக்கு அனுகூல சத்ரு வேலையைத்தான் தினகரன் செய்து வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலில், எட்டு தொகுதிகளில் தினகரனால் தி.மு.கவுக்குப் பாதிப்பு ஏற்படும். இதை ஸ்டாலினும் புரிந்துதான் வைத்திருக்கிறார். 

மற்றபடி, தினகரன் பெறக்கூடிய வாக்குகளுக்கும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அ.தி.மு.க சென்டிமெண்டுகளுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. அவரை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க வேண்டிய அவசியமே வரவில்லை. அன்றைக்கு ஜானகி அணியும் ஜெயலலிதா அணியும் இணைந்தது என்றால், அந்தக் காலகட்டம் என்பது வேறு. அன்று அவர்கள் இருவருமே பொதுத்தளத்தில் இருந்தார்கள். என்னுடைய தளம் வேறு, தினகரனின் தளம் வேறு. இதைத் தெரியாமல் ஒரு சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் கீழ்மட்டத்தில் இருந்து வந்தவன். தினகரனுக்கு எந்த ஊரில், எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதைப் பற்றி, முழுமையான அறிக்கைகள் இருக்கின்றன. ` நீதிமன்றத் தீர்ப்பு (எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு) வரும்போது, தமிழ்நாடு முழுக்க போராட்டம் நடத்துவேன்' எனத் தினகரன் தரப்பினர் பொய்யான செய்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு முழுக்க அவரால் உண்ணாவிரதம் நடத்த முடியாது. பத்து தொகுதிகளுக்குள்தான் அவரால் போராட்டம் நடத்த முடியும். மற்ற தொகுதிகளில் 100 பேர் கூட அவரது போராட்டத்துக்கு ஆதரவாக வர மாட்டார்கள். இதுதான் அவருடைய நிலைமை. போராட்டம் நடத்துவது போல சீன் போடலாம். இனி வரும் நாள்களில் அவர் தொடர்பான விஷயங்களை யாரும் என்னிடம் கொண்டு வர வேண்டாம்' எனக் காட்டமாகப் பேசி முடித்திருக்கிறார்.  

இதை நம்மிடம் விவரித்த கொங்கு மண்டல நிர்வாகி ஒருவர், `` கொங்கு பெல்ட்டில் தி.மு.க வீக்காக இருக்கிறது. தினகரனுக்கு இங்கு கட்சிக்கான கட்டமைப்புகளே இல்லை. ` நாம்தான் முடிசூடா மன்னராக இருக்கிறோம்' என நினைக்கிறார் முதல்வர். ` சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளில் பா.ம.கதான் நமக்கு எதிரி. தென்மாவட்டத்திலும் டெல்டாவிலும் தினகரனால், ஸ்டாலின்தான் பாதிப்படைவார்' எனவும் அவர் கணக்கு போடுகிறார். நாடாளுமன்றத் தேர்தலை வலிமையாக எதிர்கொள்வது குறித்தும் கட்சி நிர்வாகிகளிடம் அவர் விரிவாக விவாதித்து வருகிறார்" என்றார் நிதானமாக.