Published:Updated:

`டி.டி.வி.தினகரன் மன்னர் பரம்பரை... தங்கத்தட்டில் சாப்பிட்டவர்!' - தங்கமணி

ர.ரகுபதி
`டி.டி.வி.தினகரன் மன்னர் பரம்பரை... தங்கத்தட்டில் சாப்பிட்டவர்!' -  தங்கமணி
`டி.டி.வி.தினகரன் மன்னர் பரம்பரை... தங்கத்தட்டில் சாப்பிட்டவர்!' - தங்கமணி

``டி.டி.வி.தினகரனின் வழக்கறிஞர் ராஜா  செந்தூர் பாண்டியன், அ.தி.மு.க அமைப்பு செயலாளர் மனோஜ்  பாண்டியனைச்  சந்தித்து  இணைப்பு பற்றி பேசினார்'' எனப் பரபரப்பு குற்றசாட்டை வைத்துள்ளார் அமைச்சர் தங்கமணி.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் செய்தியாளர்களை இன்று சந்தித்த அவர், "எவ்வித முறைகேடும் இல்லாமல் இதுவரை 95 சதவிகித கூட்டுறவு சங்கத் தேர்தல் முறையாக நடந்துள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பத்தாயிரம் தட்கல் மின் இணைப்புகள் வழங்கப்படும். அதேபோல, இலவச மின்சாரமும் தொடரும். கடந்த ஆட்சியின்போது 16 மணிநேரம் மின்சார கட் இருந்தது. தற்போது, தமிழ்நாடு மின்மிகை மாநிலமாகத் திகழ்கிறது. எதிர்க்கட்சியான தி.மு.க, காழ்ப்பு உணர்வுடனே குற்றச்சாட்டுகளை வைக்கிறது. அவர்கள் ஆட்சிக் காலத்தில் வாங்கிய விலையைவிட, குறைவான விலைக்கே நிலக்கரியை  வாங்குகிறோம். சாமான்யனான அண்ணன் எடப்பாடி ஆட்சியை வேண்டுமென்றே ஸ்டாலினும் தினகரனும் கைகோத்துக்கொண்டு கலைக்கப் பார்க்கிறார்கள்'' என்று கூறினார்.

தினகரனைப் பற்றிய கேள்விக்கு, "நான்  சாதாரண அ.தி.மு.க அடிமட்டத் தொண்டன். அவர்,  ( டி.டி.வி.தினகரன்) மன்னார்குடியில் பிறந்த மன்னர் பரம்பரை. தங்கத்தட்டில் சாப்பிட்டவர். பி.ஜே.பி-யை வெறுப்பவர். அப்படி இருக்க, எதற்காக குருமூர்த்தியைச் சந்தித்தார். வடநாட்டில் உள்ள தொழிலதிபர்களையும் ஆர்.எஸ்.எஸ் காரர்களையும் பார்த்து, எப்படியாவது சேர வேண்டும் என்று கூறியிருக்கிறார். நாங்கள் அம்மாவால் வளர்க்கப்பட்டவர்கள். அவர், அம்மாவால் விலக்கிவைக்கப்பட்டவர். அது மட்டுமில்லாமல், கடந்த வாரம் அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர்  மனோஜ்  பாண்டியன்,  தேர்தல் ஆணையத்தில் விளக்கமளித்துவிட்டு வெளியே வரும்போது, டி.டி.வி.தினகரனின்  வழக்கறிஞர் ராஜா  செந்தூர் பாண்டியன்  சந்தித்துப்  பேசினார். அப்போது ராஜா  செந்தூர் பாண்டியன், 'உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள். அண்ணன் தினகரன் சேர்வதற்கு முயற்சிசெய்துகொண்டிருக்கிறார். சேர்ந்துவிட்டால்,  உங்களுக்கு ஏன் தேவையில்லாத சங்கடம். ஆகையால், நீங்கள் கருத்தை மாற்றிக் கூற வேண்டும்" என்று கூற, அதற்கு மனோஜ் பாண்டியன், `எங்கள் கருத்து ஒரே கருத்துதான். மாறுபட மாட்டேன்' என்று கூறினார் என அமைச்சர் தங்கமணி கூறி முடித்தார்.