Published:Updated:

`நிதிச் சுமையைக் குறைக்க என்னால் முடிந்தது!' - 1 கி.மீ தூரம் சைக்கிளில் புதுச்சேரி பேரவைக்கு வந்த சபாநாயகர்

ஜெ.முருகன்
`நிதிச் சுமையைக் குறைக்க என்னால் முடிந்தது!' - 1 கி.மீ தூரம் சைக்கிளில் புதுச்சேரி பேரவைக்கு வந்த சபாநாயகர்
`நிதிச் சுமையைக் குறைக்க என்னால் முடிந்தது!' - 1 கி.மீ தூரம் சைக்கிளில் புதுச்சேரி பேரவைக்கு வந்த சபாநாயகர்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலியால், புதுச்சேரி சட்டப் பேரவைக்கு சைக்கிளில் வந்தார் சபாநாயகர்.

பெட்ரோல் மற்றும் டீசல் உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை மக்கள் முன்னெடுத்து வருவதோடு, மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். இந்நிலையில், சபாநாயகர் வைத்திலிங்கம் இன்று கந்தப்ப முதலியார் வீதியிலுள்ள தனது வீட்டிலிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள புதுச்சேரி சட்டப்பேரவைக்கு சைக்கிளில் வந்தார். அப்போது, செய்தியாளர் சந்திப்புக்காகச் சென்றுகொண்டிருந்த முதல்வர் நாராயணசாமி அதைப் பார்த்துவிட்டு, பேரவையின் வாசலில் நின்று அவரை கைகுலுக்கி வரவேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து மக்களை வாட்டிவருகிறது. அதனால், அரசுக்கும் கடுமையான நிதிச் சுமை ஏற்பட்டிருக்கிறது. என்னால் முடிந்த அளவு அதைக் குறைக்க முடிவுசெய்துதான் சைக்கிளில் வந்தேன். நகரப் பகுதிகள் மற்றும்  தொகுதிக்குச் செல்லும்போதும் சைக்கிளைப் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று முடிவு எடுத்துள்ளேன்.

சைக்கிளைப் பயன்படுத்துவது நாட்டுக்கும், அரசுக்கும், குடும்பத்துக்கும் மட்டுமல்லாமல் உடலுக்கும் நல்லது. எனது உடல் ஒத்துழைக்கும் வரை சைக்கிளைப் பயன்படுத்த முடிவெடுத்திருக்கிறேன். நகரப் பகுதிகளில் நடக்கும் அரசு விழா மற்றும் அரசுப் பணிகளுக்கு நிறைய கார்களில் அதிகாரிகள் வருவதையும் தவிர்க்க வேண்டும். எரிபொருள் சிக்கனத்தை அவர்களும் பின்பற்ற வேண்டும். முதல்வர் மற்றும் அமைச்சர், கழிவுநீர்க் கால்வாய்களைத் தூய்மை செய்யும் பணியில் இறங்கியதுபோல, அரசு அதிகாரிகளும் முன்வர வேண்டும்'' என்றார். தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்காக மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கத்தான் இந்த சைக்கிள் பயணமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், "இது எதிர்ப்பு அல்ல. மக்களின் உணர்வை சைக்கிள் ஓட்டி நான் வெளிப்படுத்துகிறேன்” என்றார்.