Published:Updated:

ஆளுநர் மாளிகை நடத்தும் தீபாவளி, பொங்கல் வசூல் வேட்டை! புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி புகார்

ஆளுநர் மாளிகை நடத்தும் தீபாவளி, பொங்கல் வசூல் வேட்டை! புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி புகார்
News
ஆளுநர் மாளிகை நடத்தும் தீபாவளி, பொங்கல் வசூல் வேட்டை! புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி புகார்

ஆளுநர் மாளிகை நடத்தும் தீபாவளி, பொங்கல் வசூல் வேட்டை! புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி புகார்

``தீபாவளி, பொங்கலுக்கு வசூல் வேட்டை நடத்தப்படுகிறது” என்று ஆளுநர் மாளிகை மீது முதல்வர் நாராயணசாமி குற்றம் சுமத்தியிருக்கிறார்.

``சி.எஸ்.ஆர் நிதி என்ற பெயரில் ஆளுநர் மாளிகை இதுவரை  85 லட்சம் ரூபாய் ஊழல் செய்திருக்கிறது” என்று முதல்வர் நாராயணசாமி நேற்று முன் தினம் அதிரடியாகக் குற்றம் சுமத்தியிருந்தார். முதல்வரின் அந்தக் குற்றச்சாட்டை மறுத்த ஆளுநர் கிரண்பேடி “ஆளுநர் மாளிகையிலிருந்து யாரும் பணம் பெறவில்லை. முதல்வரின் குற்றச்சாட்டு குற்றச்சாட்டாகவே இருக்கும்” என்று தெரிவித்ததோடு, “நீர் வளம் மிக்க மாநிலமாகப் புதுச்சேரியை மாற்றுவதில் முதல்வர் நாராயணசாமிக்கு விருப்பம் இல்லை என்று நினைக்கிறேன். நிதிப் பற்றாக்குறை காரணமாக 84 கிலோமீட்டர் நீர்வழித் தடங்கள் நீண்ட காலமாகத் தூர்வாரப்படாமல் இருந்தது. அதனால் வரவிருக்கும் வடகிழக்குப் பருவமழையில் 84 ஏரிகள், பிரதான ஆறுகள், 600 குளங்கள் என அனைத்தும் பாதிக்கப்படும் நிலையில் இருந்தன. கடந்த மழைக்காலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது கால்வாய்களில் இருந்து முறையாகத் தண்ணீர் வெளியேறவில்லை. அதனால் கொடையாளர்களை அணுகி ஒப்பந்ததாரர்களுக்கு நேரடியாக நிதி வழங்கி நீர்வழித் தடங்களை நீரமைக்கும் பணியை ஆளுநர் மாளிகை மேற்கொண்டது. அதன்படி நீர்வழித் தடங்களைத் தூர் வாரிய ஒப்பந்தக்காரர்களுக்கு நேரடியாக நிதி வழங்கிய கொடையாளர்களை பாராட்டுவதை விடுத்து, இல்லாத தவற்றை இருப்பதுபோல எடுத்துக்காட்ட முயல்கிறார் முதல்வர். புதுச்சேரியின் நீர் வளத்தைப் பெருக்கவே இப்படியான முயற்சிகளை ஆளுநர் மாளிகை எடுத்தது.

ஆளுநரின் சிறப்பு அதிகாரியாகத் திறமை மிக்கவரான தேவநீதிதாஸ் பணிபுரிவதால் முதல்வர நாராயணசாமி கடும் மன உளைச்சலில் இருக்கிறார். மத்திய அரசின் ஒப்புதலுடன்தான் ஓய்வு பெற்ற பின்பும் அவர் பணியமர்த்தப்பட்டுள்ளார். நேர்மையான, திறமையான அதிகாரியாகத் தனது பணிக்காலத்தில் தேவநீதிதாஸ் இருந்துள்ளார். ஆனால், அவரை இடமாற்றாம் செய்வதற்காக முதல்வர் நாராயணசாமி தன்னால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்து பார்த்தார். பணியிலிருந்து தேவநீதிதாஸ் ஓய்வு பெருவதற்கு ஓராண்டுக்கு முன்பே அவரை புதுச்சேரிக்கு வெளியே இடமாற்றம் செய்யவும் ஏற்பாடுகள் நடந்தேறின. ஆளுநர் மாளிகையில் பலத்தைக் குறைக்க இப்படியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இந்த முயற்சிகளில் முதல்வர் நாராயணசாமியால் வெற்றிபெற முடியவில்லை. வரும் காலங்களிலும் இதுபோன்ற முயற்சிகளில் அவரால் வெற்றிபெற முடியாது. முதல்வர் நாராயணசாமியின் நோக்கங்கள் பற்றி மத்திய அரசுக்கு நன்றாகவே தெரியும். அதனால் இப்படியான விஷயங்களில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, அவரது அலுவகலத்தில் தேங்கிக் கிடக்கும் கோப்புகளுக்குத் தீர்வு காண்பதற்கு முன்வர வேண்டும். இந்த விஷயத்தில் முதல்வருக்கு ஆலோசனை சொல்ல யாரும் இல்லை” என்று வாட்ஸ் அப்பில் தெரிவித்திருந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தொடர்ந்து இன்று புதுச்சேரி சட்டப் பேரவையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, “ஆளுநர் மாளிகையில் சி.எஸ்.ஆர் திட்டநிதியில் மோசடி நடைபெற்றுள்ளதாக நான் தெரிவித்திருந்தேன். அதையடுத்து சி.எஸ்.ஆர் திட்ட நிதியை தாம் வசூல்செய்யவில்லை என்றும் ராஜ்நிவாஸில் இது தொடர்பாக யாரையும் அழைத்துப்பேசவில்லை என்றும் யாருடனும் தொடர்பும் கொள்ளவில்லை என்றும் ஆளுநர் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் நிதியை வழங்குபவர்கள் தாமாக முன்வந்து வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை மேற்கொண்டனர். அதனால் நீர்நிலை உயர்ந்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். சி.எஸ்.ஆர் திட்டநிதியை வசூலிக்கவும் செலவு செய்யவும் விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தக் குழுவின் தலைவராக நானும், உறுப்பினர்களாகத் தொழில்துறை அமைச்சர், தலைமைச் செயலர் உள்ளிட்ட ஐந்து செயலர்கள் இருக்கின்றனர். தனியார் நிறுவனங்கள் சி.எஸ்.ஆர் திட்டத்தின் கீழ் நிதி தர முன்வந்தால் இந்தக் குழுவிடம்தான் தர வேண்டும். அது சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தரும். ஆனால், கவர்னர் மாளிகையில் சி.எஸ்.ஆர் திட்டத்தில் வசூல் செய்யப்பட்டது குறித்த தகவல்கள் எனது கவனத்துக்கு வரவில்லை.

தூர் வார வேண்டிய வாய்க்கால்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒருகிலோ மீட்டருக்கு வாய்க்கால்கள் தூர்வார 1 லட்சம் ரூபாய் செலவு ஏற்படுகிறது. சி.எஸ்.ஆர் நிதி வசூல்செய்ய கவர்னர் அலுவலகத்தில் ஆஷா, பாஸ்கர் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது, நிதி தருபவர்கள் அந்தக் குழுவை அனுக வேண்டும். ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் தருபவர்கள் கௌரவிக்கப்படுவார்கள் என்றும் ஆளுநர் அலுவலகத்திலிருந்து ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. பலதொழிலதிபர்களிடம் டெலிபோன் மூலமும் சி.எஸ்.ஆர் பணம்கேட்கப்பட்டிருக்கிறது. கவர்னர் அலுவலகத்துக்கு இதுவரை எவ்வளவு சி.எஸ்.ஆர் பணம் வந்தது? காசோலை, வரைவோலை, ரொக்கமாக என எவ்வளவு பெறப்பட்டது? அப்படிப் பெறப்பட்ட பணம் எந்தக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது? என்கின்ற விளக்கம் வேண்டும். சி.எஸ்.ஆர் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. ஆளுநர் மாளிகை தீபாவளி, பொங்கலின்போதும் வசூல் வேட்டைசெய்கின்றது. மொத்தத்தில் ஆளுநர் மாளிகை பணம் வசூல் செய்யும் இடமாக மாறிவிட்டது” என்றார்.

முதல்வர் நாராயணசாமியின் இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த கிரண் பேடி, “ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறுகிறார் முதல்வர். ஆளுநர் மாளிகையில் எந்தப் பணப் பறிமாற்றமும் நடைபெறவில்லை. ஆளுநர் மாளிகைக்கு வரும் சால்வை மற்றும் பரிசுப் பொருள்கள்கூட ஏழை மக்களுக்கே தரப்படுகிறது. பலரும் தாங்களாகவே முன்வந்துதான் உதவுகிறார்கள். பொய் சொல்வது பெரிய பாவம்” என்று தெரிவித்திருக்கிறார்.