Published:Updated:

டெல்டா அல்லாத மாவட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம்: ஜெயலலிதா

டெல்டா அல்லாத மாவட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம்: ஜெயலலிதா
டெல்டா அல்லாத மாவட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம்: ஜெயலலிதா
டெல்டா அல்லாத மாவட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம்: ஜெயலலிதா

சென்னை: தமிழகத்தில் டெல்டா அல்லாத ஏனைய மாவட்டங்களில் வறட்சியால் 50 விழுக்காட்டிற்கும் மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ள 17,94,342 விவசாயிகளுக்கு 835 கோடியே 21 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:

டெல்டா அல்லாத ஏனைய மாவட்டங்களில் நிலவும் வறட்சி நிலையை நேரில் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்கும் வகையில், நிதியமைச்சர் தலைமையில் ஓர் உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு 18 மாவட்டங்களில் தனது ஆய்வினை மேற்கொண்டதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளுடனும், மாவட்ட அலுவலர்களுடனும் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தது.

மேற்கண்ட குழுவினரின் ஆய்வு மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமிருந்து பெறப்பட்ட வறட்சி தொடர்பான அறிக்கைகளின் அடிப்படையில் டெல்டா அல்லாத ஏனைய மாவட்டங்களில் வறட்சியால் நெற்பயிர் உள்ளிட்ட பயிர் வகைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், டெல்டா அல்லாத மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான சலுகைகளை நான் இந்த மாமன்றத்தில் அறிவிக்க விழைகின்றேன்.

மத்திய அரசின் பேரிடர் நிவாரண வரையறைப்படி 50 விழுக்காட்டிற்கும் மேல் நெற்பயிர் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 2,429 ரூபாய் மட்டுமே நிவாரணமாக வழங்க இயலும். எனினும், 50 விழுக்காட்டிற்கு மேல் நெற்பயிர் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கர் ஒன்றுக்கு 5,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும். இதன்படி 50 விழுக்காட்டிற்கும் மேல் நெற்பயிர் மகசூல் பாதித்துள்ள சுமார் 6,25,481 விவசாயிகளின் 6,25,786 ஏக்கர் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 5,000 ரூபாய் என்ற வீதத்தில் நிவாரணத் தொகை வழங்கப்படும். இதனால் அரசுக்கு 312 கோடியே 89 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் காப்பீட்டு நிவாரணத் தொகையை பொறுத்த வரையில், டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் செலுத்தப்பட வேண்டிய கட்டணத்தை அரசே செலுத்தியதால், முழு நிவாரணத் தொகையை முன்கூட்டியே தமிழக அரசு வழங்கியது. இந்தத் தொகை பின்னர் காப்பீட்டு நிறுவனங்களால் அரசு கணக்கில் செலுத்தப்படும். டெல்டா அல்லாத இதர மாவட்டங்களைப் பொறுத்தவரை  பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டுத் தொகையை நேரடியாக வழங்கும்.

பாசன ஆதாரமுள்ள நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களைப் பொறுத்த வரையில், 50 விழுக்காட்டிற்கும் மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மத்திய அரசின் பேரிடர் நிவாரண வரையறைப்படி ஏக்கர் ஒன்றுக்கு 2,429 ரூபாய் மட்டுமே நிவாரணமாக வழங்க இயலும். இருப்பினும், தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கர் ஒன்றுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும். இதன்படி, பாசன ஆதாரமுள்ள நிலங்களில் நெற்பயிர், நீண்டகால மற்றும் மல்பெரி அல்லாத பயிர்களை சாகுபடி செய்து 50 விழுக்காட்டிற்கும் மேல் மகசூல் பாதித்துள்ள சுமார் 1,01,802 விவசாயிகளின் 1,25,386 ஏக்கர் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 4,000 ரூபாய் என்ற வீதத்தில் நிவாரணத் தொகை வழங்கப்படும். இதன்மூலம் அரசுக்கு 50 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

பாசன ஆதாரமற்ற நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களைப் பொறுத்த வரையில், 50 விழுக்காட்டிற்கும் மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மாநில பேரிடர் நிவாரண வரையறைப்படி ஏக்கர் ஒன்றுக்கு 1,215 ரூபாய் மட்டுமே நிவாரணமாக வழங்க இயலும். இருப்பினும், தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கர் ஒன்றுக்கு 3,000 ரூபாய்  என உயர்த்தி வழங்கப்படும்.  இதன்படி, பாசன ஆதாரமற்ற நிலங்களில் நெற்பயிர், நீண்டகால மற்றும் மல்பெரி அல்லாத  இதர பயிர்களை சாகுபடி செய்து  50 விழுக்காட்டிற்கும் மேல்  மகசூல் பாதித்துள்ள 10,05,549 விவசாயிகளின் 14,14,126 ஏக்கர் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 3,000 ரூபாய் என்ற வீதத்தில் நிவாரணத் தொகை வழங்கப்படும். இதனால் அரசுக்கு 424 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

தென்னை உள்ளிட்ட நீண்ட கால பயிர்களைப் பொறுத்த வரையில், மத்திய அரசின் பேரிடர் நிவாரண வரையறைப்படி 50 விழுக்காட்டிற்கும் மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 3,239 ரூபாய் மட்டுமே நிவாரணமாக வழங்க இயலும். இருப்பினும், தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கர் ஒன்றுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும். இதன்படி 50 விழுக்காட்டிற்கும் மேல் மகசூல் பாதித்துள்ள  தென்னை உள்ளிட்ட நீண்ட கால பயிர்களை சாகுபடி செய்த  50,908 விவசாயிகளின் 1,08,383 ஏக்கர் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 4,000 ரூபாய் என்ற வீதத்தில் நிவாரணத் தொகை வழங்கப்படும். இதன்மூலம் அரசுக்கு 43 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

இதே போன்று, மல்பெரி, அதாவது முசுக்கொட்டை சாகுபடி செய்து 50 விழுக்காட்டிற்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் பேரிடர் நிவாரண வரையறைப்படி ஏக்கர் ஒன்றுக்கு 1,296 ரூபாய் மட்டுமே நிவாரணமாக வழங்க இயலும். இருப்பினும், தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கர் ஒன்றுக்கு 3,000 ரூபாய் வழங்கப்படும்.  இதன்படி 50 விழுக்காட்டிற்கும் மேல்  மகசூல் பாதித்துள்ள  மல்பெரி  சாகுபடி செய்த  10,602 விவசாயிகளின் 15,262 ஏக்கர் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 3,000 ரூபாய் என்ற வீதத்தில் நிவாரணத் தொகை வழங்கப்படும். இதன்மூலம் அரசுக்கு 4 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

மொத்தத்தில், தமிழகத்தில் டெல்டா அல்லாத ஏனைய மாவட்டங்களில் வறட்சியால் 50 விழுக்காட்டிற்கும் மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ள 17,94,342 விவசாயிகளுக்கு 835 கோடியே 21 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்.

இது தவிர, வறட்சி காரணமாக ஏற்படும் கால்நடை தீவன பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், டெல்டா அல்லாத ஏனைய மாவட்டங்களில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை வாயிலாக 6 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு பசுந்தீவனம், 18 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு உலர்தீவனம் என 24 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

வறட்சி காரணமாக டெல்டா அல்லாத ஏனைய பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், முதல் கட்டமாக 40 கோடி ரூபாய் மதிப்பில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலம் நகராட்சிகளிலும், 20 கோடி ரூபாய் மதிப்பில் பேரூராட்சிகளிலும், 40 கோடி ரூபாய் மதிப்பில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் மூலம் கிராமப் புறங்களிலும், 25 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல்  மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் மூலம் சென்னையிலும், 20 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமும், ஆக மொத்தம் 145 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

##~~##
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வாயிலாக 750 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50,000 பண்ணைக் குட்டைகள் டெல்டா அல்லாத இதர மாவட்டங்களில் அமைக்கப்படும்.  டெல்டா அல்லாத இதர மாவட்டங்களுக்கென தற்போது 1,754 கோடியே 86 லட்சம் ரூபாய்க்கான நிவாரண உதவிகளை நான் அறிவித்துள்ளேன். இந்தியாவிலேயே வறட்சிக்காக நிவாரண உதவிகள் வழங்கப்படுவது இதுதான் முதன்முறை என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விழைகிறேன்.
இதுவன்றி, வறட்சி கோரிக்கை மனு, அதாவது Drought Memorandum ஒன்று மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பப்படும். இந்த வறட்சி கோரிக்கை மனுவில், வேளாண்மைத் துறையில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டதற்காக 9,286 கோடியே 20 லட்சம் ரூபாய்; விவசாயிகள் பெற்ற கூட்டுறவு கடன்களை மாற்றியமைத்த வகையில் கூட்டுறவு துறைக்கு 182 கோடியே 10 லட்சம் ரூபாய்; விவசாயிகளுக்கு பயிரிழப்பு நிவாரணம் வழங்கிய வகையில் மாநில அரசுக்கு ஏற்பட்ட செலவினத்திற்காக 1,376 கோடியே 71 லட்சம் ரூபாய்; வேளாண்மை தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு உறுதித் திட்டங்களுக்காக 2,424 கோடியே 47 லட்சம் ரூபாய்; தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு இழப்பீடாக 2,661 கோடியே 32 லட்சம் ரூபாய்; வன விலங்குகளை பாதுகாப்பதற்காக 5 கோடி ரூபாய்; குடிநீர் வழங்கல் பணிகளுக்காக 1,195 கோடியே 79 லட்சம் ரூபாய்; கால்நடை பராமரிப்பு துறைக்கென 247 கோடியே 16 லட்சம் ரூபாய்; பண்ணை குட்டை மீன் வளர்ப்புக்கென 12 கோடியே 47 லட்சம் ரூபாய்; பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதார அமைப்பிற்கென 1,390 கோடியே 31 லட்சம் ரூபாய்; ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மையங்கள் மற்றும் சத்துணவு மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு கூடுதல் சத்துணவு வழங்க 333 கோடியே 60 லட்சம் ரூபாய்; பொது விநியோகத் திட்டத்திற்கென 7.92 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் 550 கோடி ரூபாய்; என மொத்தம் 19,665 கோடியே 13 லட்சம் ரூபாய்க்கான நிவாரண கோரிக்கைகள் அடங்கும்.
மேற்காணும் அரசின் நடவடிக்கைகள் விவசாயிகளின் வாழ்வில் விடியலை ஏற்படுத்த வழிவகுக்கும்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.