Published:Updated:

“அதிகாரிக்கு மிரட்டல்?” - புழல் ஜெயிலைச் சுற்றும் அடுத்த சர்ச்சை!

அ.சையது அபுதாஹிர்
“அதிகாரிக்கு மிரட்டல்?” - புழல் ஜெயிலைச் சுற்றும் அடுத்த சர்ச்சை!
“அதிகாரிக்கு மிரட்டல்?” - புழல் ஜெயிலைச் சுற்றும் அடுத்த சர்ச்சை!

புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக வெளியான புகைப்படங்களால் ஒட்டுமொத்த சிறைத்துறையுமே ஆடிப்போனது. புழல் சிறைக்குள் அதிரடி ஆய்வுகள் நடத்தி, பல்வேறு பொருள்களைப் பறிமுதல் செய்தனர். மேலும், புழல் சிறையில் பணியாற்றிய சிலரை வேறு சிறைக்கு மாற்றியும் உத்தரவிட்டது சிறைத் துறை நிர்வாகம்.

இந்நிலையில் புழல் சிறையில் அதிகாரியாக இருக்கும் சுப்பையாவை கொல்லச் சிறைக்குள் இருக்கும் தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறையினர் சிறைத் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார்கள். இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சொல்லியுள்ளார்கள். குறிப்பாக, உயர் பாதுகாப்புப் பகுதியில் இருக்கும் குற்றவாளிகள் சிலர், சுப்பையாவால்தான் தங்களது சொகுசு வாழ்கைக்குப் பங்கம் ஏற்பட்டிருப்பதாகக் கருதி, இந்தத் திட்டத்தை கையில் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. 

ஆனால், புழல் சிறையில் பணிபுரியும் காவலர்கள் சிலரோ “இப்படி ஒரு தகவலே சிறைத்துறை நிர்வாகத்தால் உளவுத்துறைக்குக் கசிய விடப்படுகிறது. அதற்குக் காரணம் சுப்பையா மீது இருக்கும் தனிப்பட்ட காழ்ப்பு உணர்ச்சியே என்கிறார்கள். அவரால் பாதிக்கப்பட்ட சில அதிகாரிகள் புழல் சிறையிலிருந்து அவரை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படித் தகவலைக் கசியவிடுகிறார்கள். இதே காரணத்தைச் சொல்லி ஏற்கெனவே இரண்டு அதிகாரிகளை மாற்றிய சம்பவமும் நடைபெற்றுள்ளது. சுப்பையாவை இங்கிருந்து மாற்ற வேண்டும் என்ற உயர் அதிகாரிகளின் திட்டமே இது” என்று சொல்கிறார்கள். புழல் சிறை சர்ச்சை இப்போதுதான் ஓய்ந்த நிலையில் மீண்டும் அதிகாரிக்குக் கொலை மிரட்டல் என்ற தகவலால் பரபரத்து கிடக்கிறது புழல் சிறை.