Published:Updated:

கோபம், ஆவேசம், ஆதங்கம்... கமலின் 3 நாள் சுற்றுப் பயணத்தில் என்ன நடந்தது?

கோபம், ஆவேசம், ஆதங்கம்... கமலின் 3 நாள் சுற்றுப் பயணத்தில் என்ன நடந்தது?
கோபம், ஆவேசம், ஆதங்கம்... கமலின் 3 நாள் சுற்றுப் பயணத்தில் என்ன நடந்தது?

டந்த 3 நாள்களாக சேலம் மற்றும் நாமக்கல்லில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் கமல் இறுதி நாளான நேற்று ராசிபுரம், புதுசத்திரம், நாமக்கல், குமாரபாளையம் ஆகிய இடங்களில் கலந்துகொண்டு பேசினார். அவை பின்வருமாறு... 

நாமக்கல்

``அரசியல்வாதிகளுக்குத் தனியாக தொழில் இருக்க வேண்டும். திரைப்படத்தொழிலில் இருந்த என்னுடைய நேர்மை, அரசியலில் தொடரும். படித்தவர்கள், `இந்த அரசியல் எதற்கு?' என ஒதுங்கி விடாதீர்கள். அப்படி ஒதுங்கிவிட்டதால்தான் அரசியல் அசிங்கம் ஊரையே சூழ்ந்துவிட்டது. நோட்டாவுக்கு ஓட்டுப் போடும் நபர்களை மாற்றுவது பற்றி யோசித்து வருகிறேன்."

ராசிபுரம் 

``எனக்கு ராசிபுரம் புதிது அல்ல. நற்பணி மன்றத்தினர், தொண்டர்கள் பலர் இங்கே இருக்கிறார்கள். இப்போது மக்கள் நீதி மய்யம் குடும்பத்தின் அளவு கூடிக்கொண்டே செல்கிறது. ராசிபுரத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ரத்த தான முகாமை நற்பணி மன்ற நிர்வாகிகள் தொடர்ந்து சிறப்புடன் நடத்தி வருகிறார்கள். என்னுடன் 17 வயதில் நற்பணிகளை ஆரம்பித்தவர்கள், இப்போது அதே உற்சாகத்துடன் செயல்பட்டு வருவது பெருமையாக உள்ளது.

ராசிபுரத்தில் 3 ஆண்டுகளாக, `பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்துகிறோம்' என்று கூறி ஆங்காங்கே தோண்டப்பட்ட குழிகளால் சாலைகள் மோசமாகக் காணப்படுகின்றன. இதுவே அரசின் மெத்தனப் போக்கைக் காட்டுகிறது. இப்படிப்பட்ட அரசு ஒதுங்கி இருக்க வேண்டும். தமிழக அரசு மீது மக்கள் மிகவும் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை என்னால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. நான் போகும் இடத்திலெல்லாம், `வாய்ப்பு வந்தால் நாங்கள் யார் என்று காட்டுகிறோம்' என்று பொதுமக்கள் கோபத்திலும், பொறுமை காக்கின்றனர். அதற்கான காலம் வந்துவிட்டது. குருசாமிபாளையம், அத்தனூர் பகுதியில் நெசவுத் தொழில் முடங்கிக் கிடப்பதாக எங்களுக்குச் செய்தி வந்துகொண்டிருக்கிறது. அதைச் சரி செய்யும் காலம் விரைவில் வரும்."

புதுச்சத்திரம் 

`` `புதுச்சத்திரம் பகுதியில் கிராம சபைக் கூட்டம் நடந்ததே கிடையாது' என்று கூறுகிறார்கள். அது சரியாக நடக்க வேண்டும். பாராளுமன்றம், சட்டமன்றத்துக்கு எப்படி பலம் இருக்கிறதோ? அதே பலம் கிராம சபைக் கூட்டத்துக்கும் உண்டு.

கிராம சபைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம். ஒருவேளை கிராம சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைச் சரிவர செயல்படுத்தவில்லை என்றால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். உங்களுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைந்து போராட்டக் களத்தில் குதிக்கும். அந்தப் போராட்டம் அமைதியாகவும், நியாயமாகவும் இருக்கும். புதிய தமிழகத்தை உருவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்."

குமாரபாளையம் 

``தமிழ்நாட்டில் மாற்றம் நிகழ வேண்டும். ஓட்டுக்காக அரசியல்வாதிகள் கொடுக்கும் பணம் எல்லாம் உங்கள் சொத்து என்பதை மறந்துவிட வேண்டாம். உங்களை யாரும் காசு கொடுத்து விலைக்கு வாங்க அனுமதிக்காதீர்கள். அரசியல்வாதிகள் மொத்தமாகக் கொள்ளையடித்துவிட்டு தேர்தல் நேரத்தில் சொற்ப அளவில் பணத்தைத் தருகிறார்கள். அதை வாங்குவதற்கு நாம் என்ன சில்லறைக் கூட்டமா? 5 வருடங்களுக்கு உங்களை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துவிடுகிறார்கள். அது ஒன்றும் அவர்களின் தாத்தா சொத்து இல்லை... உங்கள் பணம். அவர்களின் பையில் நிறைய பணத்தை வைத்துக்கொண்டு, கொஞ்சமே கொஞ்சம் உங்களுக்குத் தருகிறார்கள். அதை மட்டும் மறந்துவிடாதீர்கள்" என்றார்.