Published:Updated:

2019 தேர்தலில் தொகுதி மாறுகிறாரா பிரதமர் மோடி?

2019 தேர்தலில் தொகுதி மாறுகிறாரா பிரதமர் மோடி?
2019 தேர்தலில் தொகுதி மாறுகிறாரா பிரதமர் மோடி?

2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மோடி, குஜராத் மாநிலம் வதோதராவிலும் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியிலும் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றிபெற்றார். பின்னர், வதோதரா தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

டுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், தற்போது வாரணாசி தொகுதியின் எம்.பி-யாக உள்ள பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவாரா என்ற ஐயம் எழுந்துள்ளது.

பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டால், அவரை எதிர்த்து சமாஜ்வாதி கட்சி சார்பில் பி.ஜே.பி எம்.பி-யும், முன்னாள் மத்திய அமைச்சருமான சத்ருகன் சின்ஹா போட்டியிடக்கூடும் என்று பரவலாகத் தகவல்கள் அடிபடுகின்றன. பி.ஜே.பி-யில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, சத்ருகன் சின்ஹா தற்போது கட்சி நடவடிக்கைகளில் ஈடுபாடு செலுத்தாமல் இருந்துவருகிறார். அண்மைக்காலமாக, பிரதமர் மோடியின் கருத்துகளுக்கு அவர் பதிலளிப்பதுடன், தொடர்ந்து தாக்கிப் பேசி வருகிறார். அவர் பி.ஜே.பி-யில் இருந்து வெளியேறினால், சமாஜ்வாதி சார்பில் வாரணாசியில் போட்டியிடலாம் என்று அந்தக் கட்சியின் முக்கியத் தலைவர்கள் இப்போது கருத்து தெரிவித்துள்ளனர்.

வாரணாசி தொகுதியில் அதிகளவில் உள்ள குறிப்பிட்ட ஒரு பிரிவினரின் வாக்குகளை சத்ருகன் சின்ஹா பெறுவார் என்றும் பீகாரை ஒட்டியுள்ள கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி தொகுதி அமைந்திருப்பது அவருக்குக் கூடுதல் பலம் என்றும் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர்கள் கருதுகிறார்கள். என்றாலும், வாரணாசி தொகுதி தொடர்பாக எந்தவொரு கட்சியும் இறுதி முடிவை எடுக்கவில்லை.

2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மோடி, குஜராத் மாநிலம் வதோதராவிலும் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியிலும் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றிபெற்றார். பின்னர், வதோதரா தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்தச் சூழ்நிலையில் கடந்த நான்கரை ஆண்டுகளில் வாரணாசி தொகுதி மக்களுக்கு அவர் அளித்த பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. கடந்த சில மாதங்களாக வாரணாசி தொகுதியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதில் மோடி தீவிரம் காட்டி வருகிறார். புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். 

என்றாலும், இந்த முறை மீண்டும் வாரணாசியில் போட்டியிட்டால் வெற்றிவாய்ப்பு பறிபோய்விடுமோ என்ற அச்சம் மோடி மட்டுமல்லாது, பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கும் இருப்பதாகச் சொல்கிறார்கள் கட்சி மேலிட விவரம் அறிந்தவர்கள். எனவே, பி.ஜே.பி-க்குச் செல்வாக்கு அதிகம் உள்ள வேறு ஏதாவதொரு தொகுதியைத் தேர்ந்தெடுத்து அதில் போட்டியிடலாமா என்பது பற்றி மோடி ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. தவிர, ஜி.எஸ்.டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை போன்றவற்றால் மத்திய அரசின் மீது நாடு முழுவதிலும் ஒருவித அதிருப்தி இருப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். எனவே, வெற்றி உறுதிப்படுத்தப்பட்ட, பி.ஜே.பி-க்கு அதிக வாக்குச் சதவிகிதம் உள்ள தொகுதி ஒன்றில் மோடி போட்டியிடலாம் என்கிறார்கள். 

இந்துக்களின் புனித நகரமாகக் கருதப்படும் வாரணாசியைத் தலைமையிடமாகக் கொண்ட தொகுதியைக் கைவிட்டு, வேறு தொகுதிக்கு மோடி இடம்பெயர்ந்தாலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இதைப் பெரிதுபடுத்தி தேர்தல் பிரசாரம் செய்யும் என்பதையும் பி.ஜே.பி தலைவர்கள் இப்போதே ஆலோசிக்கத் தொடங்கியுள்ளனர். 

அண்மையில் பி.ஜே.பி முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய யுக்திகள், வேட்பாளர்களை இறுதி செய்தல் போன்ற விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. என்றாலும், பிரதமர் மோடி போட்டியிடும் தொகுதி பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பி.ஜே.பி மூத்த நிர்வாகிகள் உறுதிப்படத் தெரிவிக்கிறார்கள்.

எப்படி இருப்பினும், பி.ஜே.பி, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கவனம், நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி இப்போதே திரும்பிவிட்டது என்பது உறுதி.

அடுத்த கட்டுரைக்கு