பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

டி.ஜெய்சிங், கோயமுத்தூர்

கழுகார் பதில்கள்

அரசியல்வாதிகளுக்கு நம்நாட்டில் மட்டும்தான் ரிட்டயர்மென்ட் வயது கிடையாதா... வெளிநாடுகளிலும் வீல் சேரில் பயணித்து அரசு பதவி வகுக்கும் அரசியல்வாதிகள் உண்டா?

இதற்கு எந்த நாடும் விதிவிலக்கு இல்லை போலும்!

கழுகார் பதில்கள்

சமீபத்தில் தனது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் வாழ்த்தை மாளிகையைவிட்டு வெளியே வந்து வாங்கிச் சென்றுள்ளார் தாய்லாந்து மன்னர். அவரை, வீல் சேரில்தான் கொண்டு வந்தார்கள். 84 வயது ஆகிறதாம் அவருக்கு. உலகத்தில் அதிக ஆண்டுகள் மன்னராக இருப்பவர் அவர்தான் என்றும் பெருமையாகச் சொல்லப்படுகிறது. 1946-ல் இருந்து இன்று வரை என்று கணக்கெடுத்தாலே அவர் 65 ஆண்டுகள் மன்னராக இருக்கிறார். பெயர் பூமிபால் அதுல்யதேஜ்!

இந்தப் புள்ளிவிவரம் இங்கு உள்ள தலைவர்களுக்கு நிச்சயம் பயன்படும். எப்போதாவது பயன்படுத்திக் கொள்வார்கள்!

 இரா.வளன், புனல்வாசல்

கழுகார் பதில்கள்

அரசியல் சாணக்கியன் - அரசியல் சகுனி வேறுபாடு?

சாணக்கியன் சொல், முன்னே கசந்து பின்னே இனிக்கும். அதற்கு எதிர் மறையானது சகுனியின் சொல்!

இரா.தமிழினியன், விழுப்புரம்

கழுகார் பதில்கள்

டிசம்பர் 19-ம் தேதி பிறந்த நாள் கொண்டாட இருக்கும் 'பரிதாப’ப் பேராசிரியர் அன்பழகனைப் பற்றி?

##~##

அவர் 'பரிதாப’ப் பேராசிரியராக இப்போது இருக்கலாம். ஆனால் ஆரம்பத்தில் அவர் அப்படி அல்ல. அண்ணாவின் கருத்தை விமர்சித்துப் பேசக் கூடிய ஒரு சிலருள் அவரும் ஒருவர். எம்.ஜி.ஆர். இவரை அ.தி.மு.க.வுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தபோது, 'ராமச்சந்திரனுக்கு அன்பழகன் தேவை இல்லை. அன்பழகன் வீட்டு சமையல்காரன் போதும்’ என்று சொன்னவர். கருணாநிதிக்கு இருக்கும் அபாரமான ஞாபக சக்தியையும் தனக்கு இருக்கும் மறதியையும் ஒரு மேடையில் விளக்கிய அன்பழகன், 'இந்த மறதிதான் கலைஞருக்கு வசதி யாகப்போனது’ என்று பஞ்ச் அடித்ததும் உண்டு. 'அரசு ஊழியர்கள் தாய் மடியாக நினைத்து என்னிடம் பழகிவருகிறார்கள்’ என்று ஒருமுறை ஜெயலலிதா சொல்ல.. 'அது தாய் மடி அல்ல.... பேய் மடி’ என்று முகத்துக்கு நேராகச் சொன்னவர். எனவே, அன்பழகன் சீறுவார். ஆனால், எப்போது என்றுதான் தெரியாது!

 இ.சிகாமணி, அத்தனூர்

கழுகார் பதில்கள்

எதற்கு வெட்கப்பட வேண்டும்?

பழிச்சொல் வரும்போது!

 க.சுல்தான் ஸலாஹுத்தீன், காயல்பட்டினம்

கழுகார் பதில்கள்

2ஜி வழக்கில் உள்துறை அமைச்சரே சிக்கிக் கைது செய்யப்பட்டால், நம் பாரதத் திருநாட்டுக்கு தலைகுனிவு ஆகாதா?

இதுவரை நடந்தது எல்லாம் தலைகுனிவைத் தரவில்லையா? இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பேன் என்று பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டவர்கள் அரசுக்கு வருவாய் ஏற்படுத்தித் தரவேண்டிய நாட்டு வளத்தை, தங்களது வீட்டு வளத்துக்குப் பயன்படுத்திக்கொண்டதை உலகத்தில் இருக்கும் அத்தனை மீடியாக்களும் அசிங்கப்படுத்திய பிறகும் தலைகுனிவு ஏற்படவில்லையா? சிதம்பரம் சிக்கிய பிறகுதானா அது வரவேண்டும்?

ஆ.ராசாவால் தி.மு.க. தொண்டன் தலை குனிந்ததைப் போல... சிதம்பரத்துக்கு சிக்கல் வந்தால், தேசபக்தி மட்டுமே உள்ள காங்கிரஸ் தொண்டன் கலங்கிப் போவான்!

 சு.பாலகிருஷ்ணன், வண்டலூர்

கழுகார் பதில்கள்

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்ற முடிவை மத்திய அரசு நிறுத்தி வைத்து இருப்பது, மக்களுக்குக் கிடைத்த வெற்றிதானே?

மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் கிடைத்த வெற்றிதான். இதைக்கூட நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னால், தனது கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு... குறிப்பாக மம்தா பானர்ஜிக்கு வாக்குறுதியாகக் கொடுத்திருக்கிறார் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி.

பொதுவாக நாடாளுமன்றம் நடக்கும்போது சில விதிமுறைகள் உண்டு. அந்தக் காலகட் டத்தில் வெளியில் எந்த அறிவிப்புகளையும் செய்யக் கூடாது. ஆனால், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்பதை அமைச்சரவைக் கூட்டம் அறிவிக்கிறது. அதை வாபஸ் வாங்க இருக்கிறார்கள் என்பதை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா அறிவிக்கிறார். சட்டம், நாடாளுமன்ற நெறிமுறைகள் எவ்வளவு தூரம் காற்றில் பறக்கிறது என்று பாருங்கள்!

'பொதுத் தேர்தலைத் தவிர்க்கவே சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை நிறுத்தி வைத்தோம்’ என்று பிரணாப் ஒப்புக்கொண்டு இருக்கிறார். எனவே, மக்கள் நன்மைக்காக இவர்கள் இந்த முடிவை எடுக்கவில்லை, ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள இந்த முடிவுக்கு வந்திருப்பது தெரிகிறது!

 காந்திலெனின், திருச்சி

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாது எனச் சட்டம் போட வேண்டும் என்கிறாரே மாயாவதி?

அவர் திருமண பந்தமோ வாரிசுப் பிரச்னையோ இல்லாதவர். அதனால் சொல்கிறார். அவருக்கு இன்று இருக்கும் ஒரே குடைச்சல் சோனியாவின் வாரிசான ராகுல். அந்தக் கோபத்தை இப்படிக் காட்டுகிறார். மற்றபடி அரசியலைச் சுத்தப்படுத்தும் நோக்கத்தில் அவர் இதைச் சொல்லவில்லை!

 மு.கந்தப்பன், நாமக்கல்

கழுகார் பதில்கள்

'முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழர்களின் செங்குருதி தெருவில் சிந்தாமல் காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கருணாநிதி எச்சரிக்கை செய்துள்ளாரே?

கருணாநிதியின் எத்தனையோ எச்சரிக்கைகளைப் பார்த்ததுதானே இன்றைய மத்திய அரசு. இதுபோன்ற வெற்று எச்சரிக்கைகளை விடுத்து, உருப்படியாய் ஏதாவது செய்யலாம். மனிதச் சங்கிலி போன்றவை, ஒரு விஷயத்தை மக்கள் மத்தியில் சொல்லி விழிப்புஉணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தப்படுபவை. மொத்த மக்களும் ஆவேசமாக குமுளியை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கும்போது இவர் இன்னமும் மனிதச்சங்கிலி நடத்துகிறார். மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், மத்திய அமைச்சரவையைத் தாங்கிப் பிடிக்கக்கூடிய கருணாநிதி, இதைவிட கூடுதலாக பல விஷயங்களைச் செய்ய வேண்டும். இந்த ஒரு நாள் பேச்சு எதற்கும் பயன்படாது!

 சங்கத்தமிழன், சென்னிவீரம்பாளையம்

கழுகார் பதில்கள்

  முதல்வர் ஜெயலலிதா, தற்போது தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராகக் கருதுவது யாரை?

அவரும் ஒரு பெண்தான்!

கழுகார் பதில்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு