Published:Updated:

`குறிவைக்கப்படுகிறாரா அமைச்சர் காமராஜ்?’ - மன்னார்குடி ரெய்டும் பின்னணியும்

கே.குணசீலன்
`குறிவைக்கப்படுகிறாரா அமைச்சர் காமராஜ்?’ - மன்னார்குடி ரெய்டும் பின்னணியும்
`குறிவைக்கப்படுகிறாரா அமைச்சர் காமராஜ்?’ - மன்னார்குடி ரெய்டும் பின்னணியும்

மன்னார்குடியில், அமைச்சர் ஆர்.காமராஜின்  நெருங்கிய உறவினரான கான்ட்ராக்டர் மனோகரன் என்பவருக்குச் சொந்தமான அலுவலகம், லாட்ஜ், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட 6 இடங்களில் வருமான வரிதுறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். காலையில் தொடங்கிய வருமான வரித் துறையினரின் சோதனை, தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அமைச்சர் ஆர்.காமராஜை சிக்க வைக்கவே இந்தச் சோதனை  நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளதால், அ.தி.மு.க-வினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மன்னார்குடி சேரன்குளத்தைச் சேர்ந்தவர் மனோகரன். அரசு சார்பில் நடைபெறும் வேலைகளை டெண்டர் எடுத்து பணிகள் செய்துகொடுக்கும் தொழில் செய்துவருகிறார். இந்த டெண்டர் தொழிலில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து, முதல் நிலை ஒப்பந்ததாரராக விளங்கிவருகிறார். இவர், அமைச்சர் ஆர்.காமராஜுக்கு சம்பந்தி முறை உறவினராவார். தற்போது, தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் இயக்குநராக இருக்கும் மனோகரன், திருவாரூர் மாவட்டம் மட்டுமில்லாமல், வெளி மாவட்டங்களிலும் பெரிய அளவில் சாலைப் பணிக்கான டெண்டர் எடுத்துச் செய்துவருகிறார். அதோடு, ரயில்வே துறையிலும் டென்டர் எடுத்து பணிகள் செய்துவருகிறார். இதன்மூலம் பெரும் செல்வந்தராகவும் விளங்கிவருகிறார். இந்த நிலையில், இன்று காலை மன்னார்குடியில் உள்ள மனோகரனின் அலுவலகம், லாட்ஜ், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட 6 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனையைத் தொடங்கினர். மனோகரன் ஊரில் இல்லாததால், ஆறாம் தெருவில் உள்ள அவரது வீட்டில் மட்டும் சோதனை நடத்தவில்லை.

இதுகுறித்து விவரமறிந்தவர்களிடம் பேசினோம். ``மனோகரன், நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் எடுத்துப் பணிகளைச் செய்துவந்தார். இதில், அவர் கொடிகட்டிப் பறந்தார். மேலும், பல தொழில்கள் செய்துவருகிறார். பெரும் ஒப்பந்தக்காரராக விளங்கியதால், ஜெயலலிதா இவரை பிளாக் லிஸ்ட்டில் வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.  அமைச்சர் காமராஜுவின் நெருங்கிய உறவினர் என்பதால், சசிகலா குடும்பத்திடம் இருந்து கொஞ்சம் தள்ளியே இருந்திருக்கிறார். அமைச்சரின் உறவினர் என்பதாலும் நெடுஞ்சாலைத் துறை டெண்டர் எடுத்து வந்ததாலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் நன்கு அறிமுகமானவர் என்றும் சொல்கிறார்கள்.

கடந்த சில மாதங்களில்,  மனோகரன் பெரிய அளவில் சொத்துக்கள் வாங்கியுள்ளதாகக் கூறுகிறார்கள். இந்தத் தகவலை அவருக்கு வேண்டாதவர்கள் வருமான வரித் துறையில் தொடர்ந்து புகார் கூறியுள்ளார்கள். இதன் அடிப்படையிலேயே இந்த ரெய்டு நடக்கிறது என சொல்லப்பட்டாலும், அமைச்சர் ஆர்.காமராஜை சிக்கவைக்கவே மனோகரன் குறிவைக்கபட்டிருக்கிறார் என்கிறார்கள். முறைகேடான ஆவணங்கள் கொடுத்து சொத்து ஒன்றை தன் பெயருக்கு வாங்கி, அதை பெரிய தொகை அதிகமாக வைத்து வேறு ஒருவருக்கு விற்றிருக்கிறார் மனோகரன். இதில் பாதிக்கப்பட்ட பெண், நீதிமன்றத்துக்குச் செல்ல, சில தினங்களுக்கு முன் இவரைக் கைதுசெய்ய போலீஸ் வந்திருக்கிறது. அப்போது, இவரை அமைச்சர் காப்பாற்றினார். உடனே சென்னை சென்ற மனோகரன், இன்னும் திரும்பி வரவில்லை. அதனால், அவர் வீடு ரெய்டில் இருந்து தப்பிவிட்டது. சோதனை நடத்தப்பட்ட இடங்களில் பல ஆவணங்கள் சிக்கியுள்ளன என்கிறார்கள்.  காமராஜ், `எனக்கு நிறைய உறவினர்கள் இருக்கிறார்கள். அதனால் யார் வீட்டில் ரெய்டு நடந்தாலும் என் உறவினர் எனச் சொல்வீர்களா?’ எனக் கூறிவருகிறார். இந்தச் சிக்கலிலிருந்து தப்பித்துக்கொள்ளவே, அமைச்சர் இப்படிக் கூறிவருகிறார்’’ என்றனர்.