சமூகம்
Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.

 கருணாநிதி - ஸ்டாலின் ஒப்பிடுக?


 கருணாநிதியுடன் தன்னை ஒப்பிட முடியாது என ஸ்டாலினே சொல்லிவிட்டாரே! ‘அண்ணாவைப்போல அறிஞர் இல்லை. கலைஞரைப்போலப் பன்முகத்தன்மை படைத்தவர் இல்லை. ஆனால், அவர்களது கனவுகளை உங்கள் ஆதரவுடன் நிறைவேற்றும் உங்களில் ஒருவன்’ என்று ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். கருணாநிதியுடன் ஸ்டாலினை ஒப்பிடுவதற்கு இன்னும் காலம் இருக்கிறது!

கழுகார் பதில்கள்!

உமரி.பொ.கணேசன், மும்பை-37.

 பி.ஜே.பி-யின் ஆட்சிக் கனவு தமிழகத்தில் பலிக்குமா?


 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில், அவர்களது செயல்பாட்டைப் பார்க்கும்போது கனவு, பலிக்குமா? பழிக்குமா?

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.


கழுகார் பதில்கள்!

 கூடும் கூட்டமெல்லாம் ஓட்டுக்கு வேட்டு வைத்து விடுகின்றனவே?

 கருணாநிதி ஒருமுறை சொன்னார், ‘‘எனது பேச்சைக் கேட்க வந்துவிட்டு, ஓட்டை மாற்றிப் போட்டுவிடாதீர்கள்” என்று. பேச்சு கேட்கக் கூட்டம் கூடுவதற்கும் ஓட்டுகள் குவிவதற்கும் பெரிய அளவு தொடர்பு இல்லை என்பதைத்தான் தேர்தல் பிரசாரக் காட்சிகள் காட்டுகின்றன.

சம்பத்குமாரி, பொன்மலை.


 ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால், கட்சி ஆரம்பிக்கும் முன் அவரையும் சந்தித்து கமல் ஆசீர்வாதம் வாங்கியிருப்பாரா?


 ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால், கட்சியே ஆரம்பித்திருக்க மாட்டார் கமல்!

செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.


 அன்புக்கு மிகையானது உலகில் உண்டா?

 உண்டு... அதுதான் பேரன்பு!

கே.கே.சுப்பிரமணியன், கோயமுத்தூர்.

 கறுப்பு எம்.ஜி.ஆர்., நெட்டை அண்ணா, குட்டை என்.டி.ஆர்., சிவப்பு காமராஜர் என யாரும் கிடையாது என்கிறேன். சரிதானே?


 கே.கே சொன்னால் ஓகேதான்!

காயல் எஸ்.ஏ.நெய்னா, காயல்பட்டினம்.

 ஹெச்.ராஜா எது பேசினாலும், அது அவரது தனிப்பட்ட கருத்து என்கிறாரே தமிழிசை?


 ஹெச்.ராஜா தனிப்பட்ட மனிதர் அல்ல. அவர், பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர்களில் ஒருவர். அவர் சொல்வது எல்லாம் அவரது தனிப்பட்ட கருத்தாக எப்படி இருக்க முடியும்? பிரச்னைக்குரிய கருத்தாக இருந்தால், அதைத் தனிப்பட்ட கருத்து என்றும், யாரும் எதிர்க்காத கருத்தைக் கட்சிக் கருத்து என்றும் எடுத்துக்கொள்ள முடியுமா?

அப்படியானால், ராஜா எந்தக் கருத்து சொன்னாலும் அடுத்த நிமிடமே, ‘இது கட்சிக் கருத்து’, ‘இது அவரது சொந்தக் கருத்து’ என்று கமலாலயத்திலிருந்து அறிக்கை கொடுத்தால் நல்லது.

கழுகார் பதில்கள்!

பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

 ‘‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தை முடக்குவோம்’’ என மக்களவை துணை சபாநாயகராகப் பதவி வகிக்கும் தம்பிதுரை கூறியது சரியா?


 நாடாளுமன்ற உறுப்பினர்களாக 50 பேரை வைத்திருக்கும் ஒரு கட்சி, நாடாளுமன்றத்தை முடக்குவதுடன் தன் கடமை முடிந்துவிட்டதாகத் திருப்தி அடைந்துவிட முடியாது. அதையும் தாண்டி, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்திருக்க வேண்டும். இந்த ஆட்சிக்குத் தருகிற தார்மீக ஆதரவை வாபஸ் வாங்குவதாகவும் நெருக்கடி கொடுத்திருக்க வேண்டும். தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்களைச் சந்திப்பதற்கு பிரதமர் நேரம் ஒதுக்காவிட்டாலும், மக்களவை துணை சபாநாயகர் என்ற அடிப்படையில், தம்பிதுரையாவது பிரதமரைச் சந்திக்க முயற்சி செய்திருக்க வேண்டும். அதிகாரப்பூர்வமற்ற முறையிலாவது சந்தித்துத் தமிழகத்தின் போராட்டங்களை, கொந்தளிப்பைச் சொல்லியிருக்க வேண்டும். முதலமைச்சர் எடப்பாடியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் டெல்லி சென்றிருக்க வேண்டும். பிரதமர், மத்திய அமைச்சர்கள், பி.ஜே.பி-யின் அகில இந்தியத் தலைவர் ஆகியோரைச் சந்தித்திருக்க வேண்டும்.

இவை எதையும் செய்யாமல், நாடாளுமன்றத்துக்கு முன்னால் முழக்கம் போடுவதாலோ, சபையை நடத்தவிடாமல் செய்வதாலோ மட்டும் என்ன நடந்துவிடப்போகிறது?

இவ்வளவு கொந்தளிப்பான நேரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதும், தடபுடல் திருமணங்கள் நடத்துவதும், தமிழகத்தை ஆளும் அரசுக்கும் கட்சிக்கும் காவிரிப் பிரச்னையில் இருக்கும் அக்கறையின்மையையே காட்டுகிறது.

எஸ்.பி.விவேக், தாதம்பட்டி.


கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் என்பதற்குச் சமீபத்திய உதாரணம்?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 16-ம் தேதி தீர்ப்பளித்தது. மார்ச் 29-க்குள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த 42 நாள்களும் எதுவும் செய்யாமலிருந்த அ.தி.மு.க, கெடு தேதி முடிந்ததும் உண்ணாவிரதம் அறிவித்துப் போராட்ட நாடகம் நடத்துவதுதான்!

எஸ்.கிருஷ்ணராஜ், அதிகாரட்டி.

 தமிழ்நாட்டுக்கு இத்தனை கட்சிகள் தேவையா?

 எத்தனை கட்சிகளும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், அவர்கள் யாருக்கு உண்மையாக இருக்கிறார்கள் என்பதே முக்கியம். கட்சி ஆரம்பிப்பது அவர்களது ஜனநாயக உரிமை. அப்படி ஆரம்பிக்கப்பட்ட கட்சியானது, ஜனநாயகக் கடமையைச் செய்ததா என்பதே முக்கியம்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

 ‘‘அரசியலில் வெற்றிபெற புகழ் மட்டும் போதாது, மக்களின் அன்பும் என்னுடைய நேர்மையும் போதும்’’ என்று கமல் கூறுவது?


 அவர் எந்தக் காலத்தில் இருக்கிறார்?

ஸ்யாம், ஓவியர்

கழுகார் பதில்கள்!

தற்கொலை, கொலை என ஏதாவது ஒரு குற்றம் நடைபெறுவதும், அதைத் தொடர்ந்து அதே ஸ்டைலில் தொடர்ச்சியான குற்றங்கள் நடைபெறுவதுமாகச் சமீபகாலமாகச் சமூகம் மாறியிருக்கிறதே... இதன் உளவியல் என்ன?

கொலை என்பது பிரச்னையை எதிர்கொள்ள முடியாமல் ஆளையே காலி செய்வது. தற்கொலை என்பது பிரச்னையை எதிர்கொள்ள முடியாமல் தன்னைத்தானே கொலை செய்துகொள்வது. இரண்டுக்குமே காரணம் உளவியல்தான். (ரவுடிகள் செய்யும் ஆதாயக் கொலைகள், திருட்டுக் கொலைகளைச் சொல்லவில்லை)

ஒருவர் கொலை செய்வதோ தற்கொலை செய்துகொள்வதோ, அந்த வழக்கைப் பொறுத்தவரை தனிப்பட்ட சம்பவமாக இருக்கலாம். ஆனால், சமூகத்துக்கு இது பாடமாகத்தான் அமைகிறது. வழிமுறையாகக் கற்பிக்கப்படுகிறது. இதேபோன்ற பாதிப்பில் இருப்பவர்கள் இதையே தீர்வாக ஏற்றுக்கொள்கிறார்கள். ‘நமக்கும் வேறு வழியில்லை, இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும்’ என நினைக்கிறார்கள். அதனால்தான், ஒரு சம்பவம் நடந்ததுபோல இன்னொரு சம்பவம் நடக்கிறது.

காதல் திருமணத்துக்கு எதிராக நடக்கும் ஆணவக் கொலைகளுக்கும் இதுதான் காரணம். தேர்வில் தோல்விக்காக நடக்கும் தற்கொலைகளுக்கும் இதுதான் காரணம். தன்னம்பிக்கையை உருவாக்காத கல்வி முறையும், குற்றம் செய்தால் அதிலிருந்து எந்த ரூபத்திலாவது தப்பிவிடலாம் என்ற சமூக நிலைமையும் இருக்கும்வரை இதுபோன்ற தவறுகளைத் தடுக்க முடியாது.

இந்த நாட்டில் குற்றச்செயல்களைவிடக் குற்றமனங்கள் அதிகமாகி வருகின்றன. அதாவது, அந்தச் செயலைச் செய்யத் தைரியம் இல்லாமல் இருப்பார்கள். ஆனால், அந்தச் செயலைச் செய்தாக வேண்டும் என்ற வெறி அவர்களுக்கு இருக்கும். இது சமூகத்துக்கு இன்னும் ஆபத்தானது. இதைத்தான் திருவள்ளுவர், ‘மக்களே போல்வர் கயவர்’ என்றார்.