சமூகம்
Published:Updated:

‘சித்து’ விளையாட்டு Vs 'மோடி’ மஸ்தான் வேலை!

‘சித்து’ விளையாட்டு Vs 'மோடி’ மஸ்தான் வேலை!
பிரீமியம் ஸ்டோரி
News
‘சித்து’ விளையாட்டு Vs 'மோடி’ மஸ்தான் வேலை!

கர்நாடக தேர்தல் வெற்றி யாருக்கு?

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணிப்பதற்குக் காரணமாகச் சொல்லப்படும் ஒற்றை விஷயம், கர்நாடகா சட்டமன்றத் தேர்தல். எதிர்க்கட்சியான காங்கிரஸ் வசமிருக்கும் இரண்டு மாநிலங்களில் கர்நாடகா ஒன்று. (இன்னொன்று பஞ்சாப்). இங்கு காங்கிரஸை வீழ்த்தினால், அநேகமாக காங்கிரஸை இந்தியாவி லிருந்து அப்புறப்படுத்தும் தங்கள் இலக்கு நிறைவேறிவிட்டதாக பி.ஜே.பி கருத முடியும். அதற்காகவே பிரதமர் மோடியும், பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷாவும் கர்நாடகாவை முற்றுகையிடுகிறார்கள்.

‘‘இதுதான் என் கடைசித் தேர்தல்’’ என அறிவித்திருக்கும் முதல்வர் சித்தராமையா, தன் அரசியல் சித்து விளையாட்டுகளை அடுத்தடுத்து நிகழ்த்திவருகிறார்.  பி.ஜே.பி வழக்கம் போல மோடியின் இமேஜையும், அவரின் பிரசாரத்தால் நிகழப்போகும் மாற்றங்களையும் நம்பியிருக்கிறது. எனவே, கர்நாடகத் தேர்தல் சித்தராமையாவுக்கும் மோடிக்குமான மோதலாக வர்ணிக்கப்படுகிறது.

‘சித்து’ விளையாட்டு Vs 'மோடி’ மஸ்தான் வேலை!

தென் மாநிலங்களில் முதன்முறையாக பி.ஜே.பி தனித்து ஆட்சி அமைத்தது கர்நாடகாவில்தான். 2008-ம் ஆண்டு மே மாதம் இங்கு பி.ஜே.பி ஆட்சி அமைத்தது. எடியூரப்பா முதல்வர் ஆனார். (அதற்கு முன்பு 2004-ம் ஆண்டு காங்கிரஸ், மதச் சார்பற்ற ஜனதா தளம், பி.ஜே.பி ஆகிய மூன்று கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பின்னர் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைத்து பி.ஜே.பி ஆட்சியைப் பிடித்தது. முதல்வர் பதவியைப் பகிர்ந்துகொள்வதில் ஏற்பட்ட சிக்கலில் அந்த ஆட்சி முடிவுக்கு வந்தது.) ஆனால், உள்கட்சிக் குழப்பம், எடியூரப்பா மீது எழுந்த ஊழல் புகார் போன்ற காரணங்களால், அடுத்துவந்த 2013 தேர்தலில் பி.ஜே.பி ஆட்சியை இழந்தது. எடியூரப்பா வெளியேறிய நிலையில், அந்தத் தேர்தலில் பி.ஜே.பி-யால் 40 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. 224 உறுப்பினர் களைக்கொண்ட சட்டமன்றத்தில், 122 எம்.எல்.ஏ-க்கள் பலத்துடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஆனால், 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது எடியூரப்பாவை மீண்டும் அரவணைத்த பி.ஜே.பி, கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 எம்.பி தொகுதிகளில் 17 தொகுதிகளை வென்றது. அந்த வேகத்தைத் துளியும் இழக்காமல், இப்போது மீண்டும் ஆட்சியைப் பிடிக்க களத்தில் இறங்கியிருக்கிறது பி.ஜே.பி.

‘சித்து’ விளையாட்டு Vs 'மோடி’ மஸ்தான் வேலை!

இன்றைய நிலவரப்படி, காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக எந்தவித அதிருப்தி அலையும் இல்லை. கடந்த ஓராண்டு காலமாக அடுத்தடுத்து சிக்ஸர்களைப் பறக்க விட்டுக்கொண்டிருக்கிறார் முதல்வர் சித்தராமையா. பி.ஜே.பி ‘இந்துத்வா’ என்ற அடையாளத்துடன் வந்தபோது, ‘கர்நாடகாவுக்குத் தனிக் கொடி’ என மாநில உணர்வைத் தூண்டிவிட்டார். எல்லா இடங்க ளிலும் ‘பிரிவினை ஏற்படுத்துவதாக’ பி.ஜே.பி மீதுதான் குற்றச்சாட்டு கிளம்பும். ஆனால், கர்நாடகாவில் லிங்காயத் சமூகத்தினரைத் தனி மதமாக அறிவித்து, அவர்களைச் சிறுபான்மை யினராக அங்கீகரித்தார் சித்தராமையா. ‘‘இது சிவனை வணங்கும் வீரசைவர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் சதி’’ என பி.ஜே.பி கொந்தளிக்கிறது. 110 தொகுதிகளின் வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகத்தினராக லிங்காயத்துகள் உள்ளனர். பி.ஜே.பி-யின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா, அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். தங்கள் அடிமடியிலேயே சித்தராமையா கைவைப்பதாகக் கொதிக்கிறது பி.ஜே.பி.

இதனால், மாநில அமைச்சர்கள்மீதான ஊழல் புகார்களைப் பெரிதாக்கிப் பேசுகிறது பி.ஜே.பி. முதல்வர் வேட்பாள ராக நிறுத்தப்பட்டுள்ள எடியூரப்பா மீது ஏற்கெனவே ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும், அவை நிரூபிக்கப்படவில்லை. அதனால், ‘பழிவாங்கப்பட்ட தலைவராக’ அவரை முன்னிறுத்துகிறார்கள். அமித் ஷாவின் வியூகங்களும் மோடியின் பிரசாரமும் தங்களைக் கரைசேர்த்துவிடும் என பி.ஜே.பி நம்புகிறது. ஆனால், மாநிலத் தலைவர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல் டெல்லியில் வியூகங்கள் வகுக்கப்படுவதாகக் குமுறல்கள் எழுந்துள்ளன.

‘சித்து’ விளையாட்டு Vs 'மோடி’ மஸ்தான் வேலை!

அமித் ஷா, நரேந்திர மோடி, ராகுல் காந்தி ஆகியோர் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

கர்நாடகாவின் வடக்குப் பகுதிகளில் காங்கிரஸுக்கும் பி.ஜே.பி-க்கும் இடையே போட்டி இருக்கிறது. பழைய மைசூரு பகுதியான தென் கர்நாடகாவைப் பொறுத்தவரை காங்கிரஸுக்கும் முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கும் இடையே போட்டி நிலவுகிறது. ‘‘10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத எங்கள் கட்சிக்கு இது வாழ்வா, சாவா தேர்தல் யுத்தம்’’ என ஆக்ரோஷம் காட்டுகிறார், முன்னாள் முதல்வரும் தேவ கவுடாவின் மகனுமான குமாரசுவாமி. ஒக்கலிக சமூகத்தின் ஓட்டு வங்கியை நம்பியிருக்கிறது இவர்கள் கட்சி.

சமீப நாள்களில் எடுக்கப்பட்ட மூன்று கருத்துக் கணிப்புகள், ‘காங்கிரஸ் கட்சிக்கே அதிக இடங்கள் கிடைக்கும்’ எனச் சொல்கின்றன. ‘மதச்சார்பற்ற ஜனதா தளம் நிறைய இடங்களில் ஜெயித்தால், அது காங்கிரஸுக்குப் பாதிப்பு ஏற்படுத்தலாம்’ எனக் கணிப்புகள் சொல்கின்றன. மே 12-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர் தேர்வும் அதையொட்டி நடைபெறும் குழப்பங்களும் முடிவை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கலாம். 

- சி.வேங்கடசேது