சமூகம்
Published:Updated:

“சேது சமுத்திரத் திட்டத்துக்கு ஒரு நியாயம்... நியூட்ரினோவுக்கு ஒரு நியாயமா?”

“சேது சமுத்திரத் திட்டத்துக்கு ஒரு நியாயம்... நியூட்ரினோவுக்கு ஒரு நியாயமா?”
பிரீமியம் ஸ்டோரி
News
“சேது சமுத்திரத் திட்டத்துக்கு ஒரு நியாயம்... நியூட்ரினோவுக்கு ஒரு நியாயமா?”

“சேது சமுத்திரத் திட்டத்துக்கு ஒரு நியாயம்... நியூட்ரினோவுக்கு ஒரு நியாயமா?”

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் அமையவிருக்கும் நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் பற்றி மக்கள் பெரும் அச்சத்திலிருக்கும் சூழலில், இத்திட்டத்தைச் செயல்படுத்த மத்தியச் சுற்றுச்சூழல்துறை சமீபத்தில் அனுமதி அளித்தது. இத்திட்டத்தை எதிர்த்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மதுரையிலிருந்து கம்பம் வரை நடைப்பயணத்தை மார்ச் 31-ம் தேதி தொடங்கினார். பழங்காநத்தத்தில் நடந்த தொடக்க நிகழ்ச்சியில் ஸ்டாலின் இந்தப் பயணத்தைத் தொடங்கி வைக்க, திருமாவளவன், திருநாவுக்கரசர், முத்தரசன், ஜவாஹிருல்லா, கொளத்தூர் மணி, கோவை ராமகிருட்டிணன், திருமுருகன்காந்தி, கௌதமன், தெஹ்லான் பாகவி, ஹென்றி டிபேன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

“சேது சமுத்திரத் திட்டத்துக்கு ஒரு நியாயம்... நியூட்ரினோவுக்கு ஒரு நியாயமா?”

‘‘கற்புக்கரசி கண்ணகி இதே மதுரையில் நீதி கேட்டுப் புறப்பட்டதைப்போல் அண்ணன் வைகோ, நியூட்ரினோவுக்கு எதிராக நடைபயணம் தொடங்கியுள்ளார். மாநில சுயாட்சியைக் காப்பதற்காக நாம் நடத்துகிற போராட்டங்கள் மோடிக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான், தமிழகத்தில் மோசமான திட்டங்களைக் கொண்டுவருகிறார். மக்களுக்குப் பயன்படக்கூடிய சேது சமுத்திரத் திட்டத்தை ராமர் பாலம் என்று காரணம் காட்டி நிறுத்தி வைத்த பி.ஜே.பி அரசு, யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற மேற்குத் தொடர்ச்சி மலையில் மக்களின் எதிர்ப்பையும் மீறி நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்தத் துடிப்பது ஏன்? உங்களுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா?’’ என்றார் ஸ்டாலின்.
சிவகாசியைச் சேர்ந்த ம.தி.மு.க தொண்டர் ரவி என்பவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில், தீக்குளிக்க முயற்சி செய்ததில் வைகோ ரொம்பவே மனம் உடைந்துபோனார்.

இந்நிலையில், இந்தத் திட்டத்துக்கு எதிராகச் சூழலியல் ஆர்வலர்களும் சமூக ஆர்வலர்களும் முன்வைக்கும் பல்வேறு கேள்விகளை நியூட்ரினோ கூட்டு விஞ்ஞானியும் மதுரை அமெரிக்கன் கல்லூரி இயற்பியல்துறை பேராசிரியருமான ஸ்டீபன் ராஜ்குமாரிடம் முன்வைத்தோம்.

‘‘இது முழுக்க முழுக்க நம் மத்திய அரசின் திட்டம். இதில் அமெரிக்காவின் தலையீடோ, அமெரிக்காவின் ஃபெர்மி ஆய்வகத்தின் தலையீடோ இல்லை. மலையைக் குடைவதற்கு வெடிமருந்துகள் பயன்படுத்துவதால் அருகிலுள்ள நீர்த் தேக்கங்களுக்கோ, வன உயிரினங் களுக்கோ நிச்சயமாகப் பாதிப்பு ஏற்படாது. இப்போதுள்ள தொழில் நுட்பத்தில் மிக எளிமையாகச் சுரங்கம் தோண்ட முடியும். கட்டடங்கள் நிறைந்த சென்னையில், மெட்ரோ ரயிலுக்காகச் சுரங்கம் தோண்டவில்லையா? கொங்கன் ரயில்வே திட்டத்துக்காகக் குடையப்பட்ட மலையைவிடவா? இப்படி எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம்.

“சேது சமுத்திரத் திட்டத்துக்கு ஒரு நியாயம்... நியூட்ரினோவுக்கு ஒரு நியாயமா?”

அம்பரப்பர் மலையில், தரைப்பகுதியில் 2 கி.மீ தூரத்துக்கு மலையைக் குடையப் போகிறோம். பூமியைத் தோண்டப்போவதில்லை. பாறைகளை உடைக்கும்போது, மிக மிகச் சிறிய அளவு மட்டுமே அதிர்வுகள் ஏற்படும். அதை, நம்மால் முழுமையாக உணரக்கூட முடியாது. அப்படியிருக்க, நிலநடுக்கம் வருவதற்குச் சாத்தியமே இல்லை. இந்த ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் இருப்பார்கள். அறிவியல் மாணவர்கள், ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்கள். மக்களும், பள்ளி மாணவர்களும் எப்போதும் பார்வையாளர் களாக அனுமதிக்கப்படுவர். இந்தச் சூழலில், அங்கே அணுக்கழிவுகளை எப்படிப் புதைக்க முடியும்? இந்தக் குற்றச்சாட்டை ஏற்கவே முடியாது.

“சேது சமுத்திரத் திட்டத்துக்கு ஒரு நியாயம்... நியூட்ரினோவுக்கு ஒரு நியாயமா?”

உலகில் பல இடங்களில் உள்ள நியூட்ரினோ ஆய்வகங்கள் தங்களின் நோக்கங்களுக்கு ஏற்றபடி, ஆய்வகத்தையும் உணர் கருவிகளையும் (Detector) உருவாக்கிவைத்துள்ளனர். சில ஆய்வகங்கள் கடலுக்கு அடியிலும் பனிப்பாறைகளுக்குக் கீழும் உள்ளன. ரஷ்யாவின் Baikal Deep Underwater Neutrino Telescope ஆய்வகம், உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான பைக்கால் ஏரியில் அமைந்துள்ளது. IceCube Neutrino Observatory என்ற ஆய்வகம், அன்டார்க்டிகாவில் உள்ளது. ஜப்பானின் காமியோகா நியூட்ரினோ ஆய்வு மையத்தில் திரவ உணர்கருவி பயன்படுத்தப் படுகிறது. எந்த வகையான நியூட்ரினோ கதிர்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறோம் என்பதை வைத்து இந்த உணர் கருவிகள் வேறுபடும். நாம் அயர்ன் கலோரிமீட்டர் (Iron Calorimeter) பயன்படுத்த உள்ளோம். இதில் நாம் நிபுணத்துவம் பெற்றிருக்கிறோம். ஆய்வு மையம் அமைப்பதற்கு ஆகும் அதிகபட்ச ஐந்து ஆண்டுக்காலத்துக்கு மட்டுமே தண்ணீர் தேவை. மேலும், இருக்கும் தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது தான் எங்கள் திட்டம்.

நியூட்ரினோ பற்றித் தவறான தகவல்களைச் சொல்லி மக்களைப் பயமுறுத்திவைத்துள்ளார்கள். அந்த பயம் தேவையற்றது என்பதை மக்களுக்குப் புரிய வைப்பதற்காக, மதுரை, நாகமலை புதுக்கோட்டை வடபழஞ்சியில் இருக்கும் உயர் ஆற்றல் இயற்பியல் ஆய்வு மையத்தில், ‘மாதிரி நியூட்ரினோ ஆய்வு மையம்’ அமைக்கிறோம். ஏப்ரல் மாதத்துக்குள் பணிகள் முடிந்துவிடும். அங்கு யார் வேண்டுமானாலும் வந்து பார்வையிடலாம், சந்தேகங்கள் கேட்கலாம். தமிழகத்தைச் சேர்ந்த அறிவியல் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று நியூட்ரினோ குறித்துப் படிக்கும் சூழலில், தமிழகத்திலேயே நியூட்ரினோ ஆய்வு மையம் அமைவது நமக்குத்தான் பெருமை” என்றார் ஸ்டீபன் ராஜ்குமார்.

- செ.சல்மான், எம்.கணேஷ்
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார், வி.சதீஷ்குமார்