
#WeWantCMB#GoHomeEPSnOPS
காவிரி விவகாரத்தில் ஆறு வாரங்களாக ஓடி ஒளிந்த மத்திய அரசு, எதிர்பார்த்ததுபோலவே உச்ச நீதிமன்றத்தின் கெடு முடியும் நாளில் விளக்கம்கேட்டு நீதிமன்றத்துக்கு வந்தது. மத்திய அரசு மனுத்தாக்கல் செய்த அடுத்த 15 நிமிடங்களில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு. மத்திய அரசு கேட்கும் ‘ஸ்கீம்’ என்பதன் விளக்கம் ‘காவிரி மேலாண்மை வாரியம்தான்’ என்பதை உச்ச நீதிமன்றம்மூலம் உறுதிப்படுத்தும் ஓர் உத்தரவைப்பெறும் கட்டாயத்தில் இப்போது தமிழக அரசு உள்ளது.
காவிரி வழக்கில், கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்த வழக்கறிஞர்கள் சேகர் நாப்டே, ராகேஷ் திவேதி ஆகியோர்தான் இப்போதும் தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு மனுவைத் தயாரித்துள்ளனர். அவர்கள்தான் வாதிடவும் உள்ளனர். ஆட்சியாளர் களின் மனம்கோணக் கூடாது என்பதற்காகத் தந்திரமாகச் நாடக மாடி, மத்திய அரசுக்கு எதிரான மனுவில் பிரதிவாதிகளாக அதிகாரி களை மட்டுமே சேர்த்துள்ளனர். முதலாம் பிரதிவாதியாக மத்திய அரசின் அமைச்சரவைச் செயலர் பி.கே.சின்ஹாவையும் இரண்டாம் பிரதிவாதியாக மத்திய நீர்வளத்துறைச் செயலர் உ.பி.சிங்கையும் சேர்த்துள் ளனர். ‘தீர்ப்பைச் செயல்படுத்த வலியுறுத்தி மூன்று கடிதங்களை மத்திய அரசுக்கு நாங்கள் எழுதினோம்’ என்று தமிழக மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும், ‘மத்திய அரசின் விளக்கம்கோரும் மனுவை முதல்கட்ட விசாரணையின் போதே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்’ என்றும் கூறப் பட்டுள்ளது.
அதேநேரத்தில், மத்திய அரசின் விளக்கம்கோரும் மனுவில், தீர்ப்பைச் செயல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுக்குக் கர்நாடக அரசு முன்வைத்த ஆலோசனையின் ஒரு பகுதியைக் குறிப்பாகச் சுட்டிக் காட்டியுள்ளனர். அதாவது, ‘2007-ல் காவிரி நடுவர் மன்றம் தந்த தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடவில்லை, பரிந்துரைதான் வழங்கியுள்ளது’ என்பது கர்நாடகாவின் வாதம். அதைத்தான், இப்போது மத்திய அரசும் சுட்டிக்காட்டியுள்ளது. இதைத் தமிழக அரசின் வழக்கறிஞர்கள் எப்படி முறியடிக்கப் போகிறார்கள் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்துவது தொடர்பாக மார்ச் 5-ம் தேதி தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களின் அதிகாரிகளுடன் மத்திய அரசு ஏற்கெனவே ஆலோசனை நடத்தியது. அந்த ஆலோசனைக்குப் பிறகு, இந்தியாவில் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள நதிநீர் வாரியங்களின் விவரங்களை எடுத்துள்ளனர். அவற்றில், எதைப் போன்ற வாரியம் அல்லது ஒழுங்குமுறைக் குழுவை அமைப்பது என்பது குறித்து மனுவில் முன்னெச்சரிக்கையாகக் குறிப்பிட்டுள்ளது மத்திய அரசு.
பக்ரா - பியாஸ் மேலாண்மை வாரியமானது பக்ரா அணை, பியாஸ் அணை ஆகியவற்றின் உரிமம், கட்டுப்பாடு, பராமரிப்பு மற்றும் நீர்ப் பகிர்வு என அனைத்தையும் கைவசம் வைத்துள்ளது. அதேநேரத்தில், நர்மதா கட்டுப்பாட்டுக் குழுமமானது நீரைச் சேமிப்பது, ஒழுங்குபடுத்திப் பகிர்ந்தளிப்பது, அணைகளைத் திறப்பது என நீர் கட்டுப்பாட்டை மட்டுமே தன் வசம் வைத்துள்ளது. இதேபோன்று, கிருஷ்ணாநதி மேலாண்மை வாரியம், கோதாவரி, துங்கபத்ரா மேலாண்மை வாரியங்களின் பணிகளையும் ஆராய்ந்த பின்னரே இந்த விளக்கம்கோரும் மனுவைத் தாக்கல் செய்திருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. காவிரித் தீர்ப்பைச் செயல்படுத்தும்போது ‘நடுவர் மன்றம் கூறியதுபோல் முழுமையாகப் பொறியாளர்களைக்கொண்ட அமைப்பை உருவாக்குவதா?’ அல்லது ‘இரு மாநில மக்களின் உணர்வு பூர்வமான காவிரிப் பிரச்னை தொடர்பான தீர்ப்பைச் சிறப் பாகச் செயல்படுத்த, அதிகாரி களையும் உட்படுத்திய குழுவை மத்திய அரசு மாற்றியமைக்க முடியுமா?’ என்று கேட்டுள்ளது.
இந்த மனுவை ஆராய்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலர், ‘‘இரு மாநிலங்களும் ஒப்புக் கொள்ளும் ஒரு ‘ஸ்கீமை’ செயல் படுத்தவே மத்திய அரசு விரும்புகிறது என்பதை மனுவிலேயே சொல்லிவிட்டது’’ என்கிறார்கள். ஆனால், ‘தமிழகமும் கர்நாடகாவும் எப்படி இந்த விஷயத்தில் ஒத்துப்போக முடியும்?’ என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. அதேபோல, ‘கர்நாடகாவில் தேர்தல் அறிவித்துள்ள நேரத்தில் தீர்ப்பைச் செயல்படுத்தினால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்பட்டு, அது கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலையே பெருமளவுக்குப் பாதிக்கும்’ என மத்திய அரசு குறிப்பிட்டு, மூன்று மாத கால அவகாசம் கேட்டுள்ளது. அதற்குள், கர்நாடகத் தேர்தல் முடிந்துவிடும் என்பதுதான் மத்திய அரசு போட்டிருக்கும் கணக்கு. இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு அவகாசம் வழங்க வாய்ப்பு உள்ளதாகவே மூத்த வழக்கறிஞர்கள் கருதுகிறார்கள். இன்றைய நிலையில் கால அவகாசத்தைவிட நடுவர் மன்றம் சொல்லி யிருக்கும் காவிரி மேலாண்மை வாரியத்தை நிலைநாட்டுவதுதான், தமிழக அரசின் முன்னால் உள்ள மிகப்பெரிய சவால்.

தமிழக அரசின் வழக்கறிஞர் உமாபதி, ஏப்ரல் 2-ம் தேதி திங்கள் கிழமை காலை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் சென்று, ‘‘மத்திய அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும்’’ என முறையிட்டார். அப்போது தலைமை நீதிபதி, ‘‘ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியத்தையும் உள்ளடக்கியதுதான்...’’ என்றார். ஏப்ரல் 9-ம் தேதியே வழக்கை விசாரிப்பதாகத் தெரிவித்த தீபக் மிஸ்ரா,‘‘தமிழகத்தின் பிரச்னைகள் எங்களுக்குப் புரிகிறது. தமிழகத்துக்குத் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வோம்’’ என்றும் கூறினார். ஏப்ரல் 9-ம் தேதியன்று தமிழக, கேரள மனுக்களுடன் மத்திய அரசின் மனுவும் விசாரணைக்கு வரவுள்ளது.
‘இந்த ஆண்டாவது ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுமா?’ என்பது தான் விவசாயிகளின் நெஞ்சில் நிறைந்து நிற்கும் கேள்வி.
- டெல்லி பாலா