
#WeWantCMB#GoHomeEPSnOPS
‘‘தமிழக மக்களின் உணர்வுகளை எங்கள் தொண்டர்கள் பிரதிபலித்துள்ளனர். இந்தப் பொறி பெரும் தீயாகத் தமிழகம் முழுக்கப் பரவாமல் இருக்க வேண்டுமென்றால், மத்திய அரசுதான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்கிறார் வேல்முருகன்.
காவிரி மேலாண்மை வாரியம் வேண்டித் தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களில் வித்தியாசமானது, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் நடத்திய சுங்கச்சாவடி தகர்ப்புப் போராட்டம்தான். மத்திய அரசைக் கண்டித்துத் தமிழகத்தில் அனைத்துச் சுங்கச்சாவடிகளிலும் ஏப்ரல் 1-ம் தேதியன்று வரி செலுத்தாத போராட்டம் நடத்தப்படும் என அந்தக் கட்சி அறிவித்தது. அதன்படி, த.வா.க-வின் தலைவர் வேல்முருகன் தலைமையில் சுமார் 500 தொண்டர்கள் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை டோல்கேட் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ‘எங்களுக்குக் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசு, எங்களிடமிருந்து சுங்கச்சாவடிகள்மூலம் வரியை மட்டும் எப்படி வாங்கலாம்’’ என ஆவேசப்பட்ட தொண்டர்கள், டோல்கேட்டை அடித்து நொறுக்கினர். அதையடுத்து, வேல்முருகன் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்ட நிலையில், ஏழு பேர் ரிமாண்டு செய்யப்பட்டுள்ளனர். மாலையில் விடுதலையான வேல்முருகனைச் சந்தித்தோம்.

‘‘மத்திய அரசுமீது அப்படி என்னதான் கோபம்?’’
‘‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. அதை நிறைவேற்ற வேண்டிய மத்திய அரசு, ‘கர்நாடகத்தில் கலவரம் ஏற்படும். அங்கு தேர்தல் நடைபெறவிருப்பதால், சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும்’ என்றெல்லாம் மனுத் தாக்கல் செய்து தமிழர்களுக்கு எதிராகக் கர்நாடகாவைத் தூண்டிவிடுகிறது. தீர்ப்பு வெளியாகி ஆறு வார காலம் அமைதியாக இருந்துவிட்டு, உச்ச நீதிமன்றத்தின் கெடு முடியும் நாளில், நீதிமன்றத்துக்குப் போய் விளக்கம் கேட்கிறது மத்திய அரசு. நியூட்ரினோ திட்டம், மீத்தேன் திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம், பெட்ரோலிய மண்டலம் எனத் தமிழ்நாட்டைப் பாலைவனமாகவும் சுடுகாடாகவும் மாற்றி, தமிழர்களை அகதிகளாக வெளியேறும் மனநிலைக்குத் தள்ளும் வேலைகளில் மோடி அரசு ஈடுபட்டிருக்கிறது.
‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத வரை எந்தச் சுங்கச்சாவடி யிலும் தமிழக மக்கள் வரி செலுத்த வேண்டாம்’ என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சொல்லப்பட்டு, தமிழகத்தில் உள்ள 45 சுங்கச்சாவடிகளிலும் வரி செலுத்தாத போராட்டம் நடத்துவது என முடிவு செய்தோம். அதன்படி, ஏப்ரல் 1-ம் தேதி, சுங்கச்சாவடிகளில் துண்டறிக்கைகளைக் கொடுத்து, சுங்கவரி வாங்காமல் அனுப்புமாறு எங்கள் தொண்டர்கள் சொன்னார்கள். அனைத்துச் சுங்கச் சாவடிகளிலும் அது நடைமுறைப்படுத்தப்பட்டுத் தொண்டர் களும் கைதானார்கள். உளுந்தூர்பேட்டை யிலும் எங்கள் தொண்டர்கள் இதைச் சொல்லியுள்ளனர். ஆனால், சுங்கச் சாவடியைத் திறந்துவிட முடியாது என அதன் ஊழியர்கள் கூறிவிட்டனர். எங்கள் கட்சி இளைஞர்களுக்கு மத்திய அரசின்மீது இருந்த கோபம்தான், சுங்கச்சாவடியைத் தாக்கும் அளவுக்குத் தள்ளியிருக்கிறது. தமிழக மக்களின் போராட்டத்தை நாங்கள் முன்னெடுத் துள்ளோம்.’’

‘‘இந்த நேரத்தில், மாநில அரசு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?’’
‘‘நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பில் கூறப்பட்ட 205 டி.எம்.சி தண்ணீரைத் தற்போது 177.22 டி.எம்.சி எனக் குறைத்துவிட்டனர். அதையாவது நாம் பெற்றுவிட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். மத்திய அரசைப் பணிய வைக்க நம்மிடம் ஏராளமான வழிகள் உள்ளன. குறிப்பாக, பெரும் பணக்காரர்களுக்காக மத்திய அரசு இங்கே கொண்டுவரும் மீத்தேன், பெட்ரோலிய மண்டலம், புதிய பொருளாதார மண்டலம் போன்ற திட்டங்களுக்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். எங்களைப் போன்ற அமைப்புகளை மாநில அரசு அழைத்துப் பேசினால் கூட, ஒரு மணி நேரத் தில் மத்திய அரசை முடக்கு வோம். அதைவிடுத்து, மக்களுக்கான போராட்டம் நடத்தும் எங்களை போலீஸை வைத்துத் தாக்குகிறது இந்த அரசு. மக்களுக்கான அரசு கம்பீரமாக நடந்து கொண்டால், நாம் ஏன் போராட்டத்தில் ஈடுபடப் போகிறோம்?’’

‘‘ஆளும்கட்சி உண்ணாவிரதம் இருக்கிறது; பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க-வும் போராட்டம் நடத்துகிறதே?’’
‘‘லட்சக்கணக்கான தொண்டர்களைக்கொண்ட கட்சி, தி.மு.க. தற்போது, தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக அவர்கள் வலிமையான போராட்டங்களை நடத்த வேண்டும். கருப்புக்கொடி, கடையடைப்பு என அவர்கள் செய்யும் மேம்போக்கான அரசியல் எந்தவிதத்திலும் உதவாது. மத்திய பி.ஜே.பி அரசின் பினாமி அரசாகத் தமிழக அ.தி.மு.க அரசு உள்ளது. அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை ஒரு போராட்டமாகவே நாங்கள் நினைக்கவில்லை. இவர்கள் எதிர்பாராமல் நடந்த விபத்தின்மூலம் வந்தவர்கள்தான். இதை ஓர் அரசாகவோ, எடப்பாடி பழனிசாமியை ஒரு முதல்வராகவோ தமிழக மக்கள் பார்க்கவில்லை. அந்தச் சாதாரண மக்களின் பார்வைதான் என் பார்வையும்.’’
- ஜெ.முருகன்
படங்கள்: எஸ்.தேவராஜன்