Published:Updated:

மிஸ்டர் கழுகு: ''யார் இங்கே சி.எம்.?"

மந்திரிகளிடம் கொந்தளித்த ஜெ.

பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: ''யார் இங்கே சி.எம்.?"
##~##

''கொஞ்ச நாட்களாகவே குஜராத் காற்று போயஸ் கார்டன் பக்கம் வீசுகிறது...'' என்ற முன்னுரையுடன் நுழைந்தார் கழுகார். 

''கடந்த இதழில் நீர் கொடுத்த 'மீண்டும் மன்னார்குடி அசெம்பிளி?’ மேட்டருக்கு சுறுசுறுப்பான ரெஸ்பான்ஸ்!'' என்று நாமும் தூண்டில் போட்டோம்!

''பெங்களூரு கோர்ட்டில் இருந்துதான் இந்த பூகம்பம் வெடித்தது. அதைச் சொல்வதற்கு முன்பு குஜராத் சமாச்சாரம்...'' என்றார் கழுகார்.

''குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையே நல்ல நட்பு உண்டு. பிரதமர் கனவில் இருப்பவர் மோடி. அதனால், ஜெயலலிதா ஆதரவு தனக்கு இருந்தால் நல்லது என்று நினைக்கிறார். ஆனால், நான் சொல்ல வந்த விஷயம் அதுவல்ல. ஒருமுறை ஜெயலலிதா உடல்நிலை பற்றி அக்கறையோடு விசாரித்த மோடி, அதற்கான சில யோசனைகளையும் சொன்னாராம். கூடவே, குஜராத்தில் இருந்து சகல பயிற்சிகளையும் முடித்த சீனியர் நர்ஸ் ஒருவரை அனுப்புவதாகவும் கூறியிருக்கிறார். அதன்படி, ஒன்றரை மாதங்களாக போயஸ் கார்டனில் குஜராத் நர்ஸ் ஒருவர் வந்து உதவுவதாக, கார்டனுக்கு அடிக்கடி சென்று வருகிறவர்கள் சொல்கிறார்கள். உணவு முறை தொடங்கி உடல் பயிற்சி வரை அந்த நர்ஸ் பொறுப்பேற்று  இருக்கிறாராம். டிசம்பர் 15 அன்று குஜராத்தில் இருந்து டாக்டர் தேசாய் என்பவர், மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை வந்ததாக ஒரு தகவல். குஜராத் நர்ஸின் வருகையை சிலர் ரசிக்கவில்லை'' என்ற கழுகார், பெங்களூரு மேட்டருக்குத் தாவினார்.

''பெங்களூரு நீதிமன்ற விசாரணைக்குச் சென்ற சுதாகரனுக்கு ஒரு பக்கத்தில் சசிகலாவும் இன்னொரு பக்கத்தில் இளவரசியும் உட்கார்ந்த விவகாரம்தான், அதிரடிகளுக்குக் காரணமாகிவிட்டது. சுதாகரனின் நட்பு வட்டாரத்துப் பிரமுகர் ஒருவருக்கு தமிழக போலீஸ் அதிகாரிகள் தங்கள் அதிகார எல்லையை மீறிச் செய்த உதவிகளும் முதல்வரை எரிச்சலுக்கு உள்ளாக்கியது. இத்தகைய நிலையில் சென்னையில் உருவாக இருக்கும் புதிய ரயில் திட்டத்தில் டெண்டர் விட்டதில் விளையாடிய கைகள் குறித்து, முழுத் தகவலும் முதல்வர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன!''

''ஓஹோ!''

''பெங்களூருவில் சசிகலா இருக்கும் நேரத்தைப் பயன்படுத்திய மேல்மட்ட அதிகாரிகள், முதல்வரிடம் இதுவரை சொல்ல முடியாமல் தவித்த பல தகவல்களைக் கொட்டித் தீர்த்து விட்டார்கள். 'இந்த ரயில் திட்டத்தில் பங்கேற்பதில், முக்கியமான விதி ஒன்று உண்டு. அந்த விதியை முதல்வர் கவனத்துக்கு வராமல் திருத்தி விட்டார்கள்’ என்று சொல்லப்பட்டதாம். அதற்கு யார் காரணம் என்று முதல்வர் கேட்க, அந்த அதிகாரி அழைக்கப்பட்டு, லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கப்பட்டார். இந்த அதிகாரிக்கு அத்தகைய அதிகாரத்தையும் தைரியத்தையும் கொடுத்தது சசிகலாவா என்ற சந்தேகம் முதல்வருக்கு வந்தது. 'எனக்கே தெரியாமல் இது மாதிரி இன்னும் எத்தனை நடக்கிறது?’ என்று கொந்தளித்த முதல்வர்... முக்கிய அமைச்சர்கள் அனைவரையும் கார்டனுக்கு அழைத்தார்.''

''அப்புறம்?''

''அன்று காலை போயஸ் கார்டனில் உளவுத் துறையை சேர்ந்த அதிகாரி ஒருவரிடம் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினாராம் ஜெ. அதன் பிறகு கார்டனில் உள்ள உதவியாளரை அழைத்த ஜெ., 'சென்னையில் இப்போது இருக்கும் அனைத்து அமைச்சர்களையும் உடனே வரச் சொல்லுங்கள்’ என்று உத்தரவு போட்டாராம். அந்த நேரத்தில் சென்னையில் இருந்த ஏழு அமைச்சர்களுக்கும் விஷயம் சொல்லப்பட்டது. ஓ.பி.எஸ்., செங்கோட்டையன், என்.சி.சம்பத், கோகுல இந்திரா ஆகியோர் முக்கியமானவர்கள். ஒவ்வொரு அமைச்சரையும் தனித்தனியாகத் தனது அறைக்கு வரவழைத்துப் பேசினாராம் ஜெ. 'இங்கே நான்தான் சி.எம். அது உங்களுக்கு ஞாபகம் இருக்கா? இல்லையா? எந்த விஷயத்தையும் நீங்க என்கிட்ட சொல்றது கிடையாது. யாருகிட்ட சொல்றீங்கன்னு எனக்குத் தெரியலை. எதுவா இருந்தாலும் இனி என்கிட்டதான் சொல்லணும். அவங்க சொன்னாங்க... இவங்க சொன்னாங்கன்னு ஏதாவது செஞ்சா, நீங்க யாரும் அமைச்சரா இருக்க மாட்டீங்க. ஒவ்வொருத்தரும் யாரு பேரைச் சொல்லி ஆட்டம் போடுறீங்கன்னு எனக்குத் தெரியும். எல்லா விஷயமும் என் கவனத்துக்கு வந்துக்கிட்டுத்தான் இருக்கு’ என்று ஏகத்துக்கும் திட்டித் தீர்த்தாராம்!

''யாரு சி.எம். நானா? சசிகலாவா?'' என்று ஓர் அமைச்சரிடம் கேட்டபோது, அதிர்ந்துவிட்டார் மனிதர்!''

''சொல்லும்... சொல்லும்!''

''அமைச்சர் ஒருவரிடம், 'வேளாண்மைத் துறைக்கு யார் அமைச்சர்?’ என்று ஜெயலலிதா கேட்டாராம். அதற்கு அவர், 'தாமோதரன்ம்மா...’ என்று வளைந்து நெளிந்து சொன்னாராம். 'தாமோதரன் பேருக்குத்தான் அமைச்சரா இருக்கார். வேளாண்மைத் துறையில் அதிகாரியாக இருக்கும் பொன்னுசாமி என்ற அதிகாரிதான் அத்தனை வேலைகளையும் செஞ்சிட்டு இருக்காராமே. அக்ரி டிபார்ட்மென்ட் மீட்டிங்ல, அமைச்சருக்கே அந்த ஆள் உத்தரவு போட்டிருக்கார். போன ஆட்சியில நேரு பின்னாடியே சுத்திக்கிட்டு இருந்த பொன்னுசாமிக்கு இன்னைக்கு அத்தனை அதிகாரம் கொடுத்து வெச்சிருக்கீங்க. அந்த பொன்னுசாமி நேருகூட நெருக்கமாக இருந்தது... நேருவைக் கடலூர் ஜெயில்ல போய் பார்த்தது வரைக்கும் என்கிட்ட ஆதாரம் இருக்கு. யாரோட சப்போர்ட்ல இப்படி ஒவ்வொருத்தரும் ஆட்டம் போடுறீங்கன்னு எனக்கு ரிப்போர்ட் வந்துட்டுத்தான் இருக்கு. சீக்கிரமே எல்லாத்துக்கும் முடிவு கட்டுறேன்’ என்று கொந்தளித்தாராம்.''

''இதே பொன்ன்னுசாமியைப் பற்றி எமது நிருபர் ஒரு கட்டுரை ஏற்கெனவே எழுதி இருந்தாரே?''

'’ஆம். அவர்தான். விசாரணையின்போது ஓர் அமைச்சர், 'சின்னம்மாகிட்ட எல்லாத்தையும் சொல்லிக்கிட்டுதாம்மா இருக்கோம்’ என்று பவ்யம் காட்டினாராம். 'எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க.... புரியுதா?’ என்று வார்த்தைகளில் அக்னியைக் கக்கினாராம்.

இந்த சந்திப்பின் போது முதல்வருக்கு ஓர் அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது. திட்ட அமலாக்கத் துறையில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பன்னீர்செல்வம் மீது பலரும் புகார் சொல்லி இருக்கிறார்கள். 'பன்னீர் செல்வம் சொல்லித்தான்மா நாங்க எல்லாம் செய்றோம்’ என்றார்களாம். மறுநாளே பன்னீர் செல்வத்தைப் பதவி நீக்கம் செய்துவிட்டார் முதல்வர். சசிகலா குடும்பத்துக்கு வேண்டியவர் இந்த பன்னீர் செல்வம். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவருக்கு இந்தப் பதவியை சசிகலாதான் வாங்கிக் கொடுத்தார். சசிகலாவுக்கும் மற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குமான மீடியேட்டராக இவர்தான் இருந்துள்ளார். 'பன்னீரை நீக்கியதன் மூலமாக சசிகலாவின் மிக முக்கியமான தளபதியின் தலை உருட்டப்பட்டுள்ளது. இது சசிகலாவுக்கு வைக்கப்பட்டுள்ள செக்’ என்கிறார்கள்.

மிஸ்டர் கழுகு: ''யார் இங்கே சி.எம்.?"

கடந்த 15 ஆண்டுகளாக ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த திருமலைசாமியை உடனடியாக அந்தப் பதவியில் இருந்து தூக்கி, அடித்துவிட்டார். கிட்டத்தட்ட சசிகலாவுக்கு ஆல் இன் ஆளாக இருந்தது திருமலைசாமிதான். சசி கண்ணசைக்கும் விஷயத்தை கனகச்சிதமாகச் செய்து முடித்து விடுவாராம் இவர். அதேபோல, கார்டனுக்கு வரும் கடிதங்களைப் பிரித்துப் படிக்கும் குமார் என்பவரையும் உடனடியாக வெளியே போகச் சொல்லி விட்டாராம். கட்சியில் உள்ள சிலர் அனுப்பும் புகார்கள் தனக்கு வந்து சேரவில்லை என்பதுதான் இவரது நீக்கத்துக்குக் காரணமாம்!''

''இவை அனைத்தும் சசிகலாவுக்கு ஆத்திரம் ஏற்படுத்தும் சமாச்சாரம் ஆச்சே?''

''பெங்களூருவில் இருந்த சசிகலாவுக்கு கார்டனில் நடந்த அத்தனை விவகாரங்களையும் உடனுக்குடன் தெரியப்படுத்தினார்களாம். சசிகலா ரொம்பவே அப்செட்!''

''அந்த அளவுக்கு செல்வாக்கு ஆனவரா பன்னீர்?''

''சிறப்பு செயலாக்கத் திட்டத் துறைக்கு சரியான ஆளை நியமிக்க வேண்டும் என்று ஜெயலலிதா முடிவு செய்த சமயத்தில், அரசின் இலவசத் திட்டங்களை செயல்படுத்துவதில் நல்ல வருமானம் வரும் என்பதைக் கணக்குப் போட்டே, பன்னீர் செல்வத்தை அந்தத் துறைக்குக் கொண்டு வந்தார்கள். ஆபீஸர் ஆன் ஸ்பெஷல் டியூட்டி என்ற பதவியில் அந்தத் துறைக்கு நியமனம் ஆனார். இவரைக்  கண்டு அமைச்சர்கள் அஞ்சி நடுங்கினார்கள். புரோட்டோகால்படி அமைச்சரைத்தான் அரசு செயலாளர்கள் வந்து சந்திப்பார்கள். ஆனால் பன்னீர்செல்வத்தைத் தேடி, அவருடைய அலுவலகத்துக்கே அமைச்சர்கள் படையெடுத்தார்கள். கோட்டையின் இரண்டாவது மாடியில் நிதித்துறைச் செயலாளருக்கு அடுத்த அறைதான் பன்னீர் செல்வத்துடையது. அங்கே தினமும் அமைச்சர்கள் அட்டன்டென்ஸ் போட்டு வந்தார்கள். கிட்டத்தட்ட தனி அரசாங்கத்தை, அந்த அறையில் நடத்தி வந்தாராம்.

லேப்டாப், மிக்ஸி போன்றவைக்கு டெண்டர் விடுவதில் ஏகத்துக்கும் தில்லுமுல்லுகள் நடப்பது ஜெயலலிதாவின் கவனத்துக்கு முதலில் வந்தது. உடனே, எம்.ஜி.ஆரிடம் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பிச்சாண்டியை, கார்டனுக்கு அழைத்தார் ஜெயலலிதா. ஓய்வில் இருந்த பிச்சாண்டி ஓடிவந்தார். 'யாருக்கும் தெரியாமல் ஒரு விஷயத்தை நீங்கள் கண்டுபிடித்து எனக்கு உண்மையான ரிப்போர்ட் தர வேண்டும்’ என்று, பன்னீர் செல்வத்தைப் பற்றி விசாரிக்க உத்தரவிட்டார். அவர் நடத்திய விசாரணைதான், இப்போது பதவியைக் காலி செய்துள்ளது!''

''இன்னும் பலருக்கு இது கிலி கொடுத்​திருக்குமே?''

''சமீபத்தில் குடவாசல் அருகே உள்ள நரசிங்கன்​பேட்டையில் நடந்த ஒரு துக்க நிகழ்ச்சியில், மன்னார்குடி அசெம்பிளியின் முக்கியப் பிரமுகர்​கள் கலந்துகொண்டு தனியாக நீண்ட நேரம் பேசினார்களாம். இவர்களை, முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படும் 'இன்டலிஜென்ஸ் கிராக்' என்கிற பிரிவின் அதிகாரிகள் ரகசியமாகக் கண்காணித்தனர். 'யாரெல்லாம் கலந்து கொண்டார்கள், தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் யார்?’ போன்ற விவரங்கள், ஸ்பாட்டில் இருந்து முதல்வர் கவனத்துக்குச் சென்றதாம். இவை அனைத்தும் அடுத்து நடக்க இருக்கும் பெரிய வெடிப்புக்கு சிறு அறிகுறி என்கிறார்கள்! முதல்வரின் செயலாளர்கள் அளவிலும் கல்தாக்கள் இருக்கலாம்!'' என்றபடி கழுகார் எழுந்தார்... பறந்தார்!

படங்கள்: சு.குமரேசன்

'குஷ்புக்கு ஒரு கப்!’

மிஸ்டர் கழுகு: ''யார் இங்கே சி.எம்.?"

முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருந்தார்கள். உண்ணாவிரதத்தை பழரசம் கொடுத்து முடித்து வைத்தார் கருணாநிதி. 5 கப் பழரசம் இருந்தது. முதல் இரண்டை தென் சென்னை, வட சென்னை மாவட்டச் செயலாளர்களுக்கு கொடுத்தார். அடுத்து சற்குணபாண்டியனுக்கும் லியோனிக்கும் தரப்பட்டது. 'குஷ்புக்கு கொடுங்க’ என்று கருணாநிதி சொல்ல... இருவர் முகத்திலும் சந்தோஷ ரேகைகள் அதிகமாகவே படர்ந்தன.

 லேட்டாக வந்தவர்.... பேசவும் இல்லை!

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பற்றி விவாதிக்க சிறப்பு சட்டசபைக் கூட்டம் 15ம் தேதி நடந்தது. முதலில், ஜெயலலிதா பேசினார். முல்லைப் பெரியாறு தொடர்பாக தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு முன்பு அணையின் பாதுகாப்பு தொடர்பாக விவரித்தார். ஜெயலலிதா பேசிக்கொண்டு இருந்தபோது திடீரென்று அவைக்குள் நுழைந்தார் விஜயகாந்த். ஜெயலலிதா பேசும்போது அவருக்கு எந்த இடையூறும் இருக்கக் கூடாது என்பதற்காக எதிர்மாடத்தில் இருந்த பார்வையாளர்கள் அசையக்கூடாது என்று  சபைக் காவலர்கள் தடை போட்டிருந்தார்கள். இந்த நிலையில்தான், விஜயகாந்த் உள்ளே நுழைந்தார். இதனால், முதல்வரின் பேச்சு சில நொடிகள் தடைபட்டது. விவாதத்தில், பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுவார் என்று இருந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் வந்ததால், யார் பேசுவது என்று சிறு குழப்பம் தெரிந்தது. ஆனால், முதலில் முடிவு செய்தபடி பண்ருட்டியார்தான் பேசினார்.

மிஸ்டர் கழுகு: ''யார் இங்கே சி.எம்.?"
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு