Published:Updated:

` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை!' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்

களத்தில் இருக்கின்ற சி.எம் வேட்பாளர்களில் நீ மிகத் திறமையானவன். எனவே, சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் நாம் நிச்சயம் தனித்துத்தான் போட்டியிட வேண்டும் என்றார் ராமதாஸ்.

` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை!'  - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்
` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை!' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் இறங்கியிருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. ` கூட்டணி அமைப்பது தொடர்பாக மருத்துவர் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையில் கருத்து மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதல், இன்னும் முடிவுக்கு வரவில்லை' என்கின்றனர் பா.ம.க நிர்வாகிகள். 

` பிரதமர் வேட்பாளர் மோடி' என்ற முழக்கத்தை முன்வைத்துக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது பா.ம.க. இந்தத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் அன்புமணியும் கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணனும் வெற்றி பெற்றனர். இதன்பிறகு, கடந்த சட்டமன்றத் தேர்தலில் மாற்றம்-முன்னேற்றம்-அன்புமணி என்ற முழக்கத்தை முன்வைத்துத் தனித்துப் போட்டியிட்டது பா.ம.க. இந்தத் தேர்தலில் 5 சதவீத வாக்குகளைப் பெற்றது. இந்த வாக்கு சதவீதம், திராவிடக் கட்சிகளை அதிர வைத்தது. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த வாரம் தீவிர விவாதம் நடந்துள்ளது. 

`` தனித்துப் போட்டியிடும் முடிவில் உறுதியாக இருக்கிறார் மருத்துவர் ராமதாஸ். அவரது கருத்தில் அன்புமணிக்கு உடன்பாடில்லை. இதுதொடர்பாக அன்புமணியிடம் பேசிய ராமதாஸ், ` தனித்துப் போட்டியிடுவதுதான் சரியானது. தி.மு.கவைப் பொறுத்தவரையில், ஸ்டாலினுக்குப் பெரிதாக எந்தத் திறமையும் இல்லை. உன்னுடைய திறமையில் பத்தில் ஒரு சதவீதம்கூட அவருக்குக் கிடையாது. 2016 சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் எதிர்த்ததால்தான் மக்கள் நம்பக்கம் வரவில்லை. இருப்பினும், மூன்றாவது பெரிய கட்சி எனப் பெயர் எடுத்தோம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அண்ணா தி.மு.க உடைந்துவிட்டது. தி.மு.கவும் உடைந்துவிட்டது. ஸ்டாலினை நிர்வாகிகள் பலரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. 

இப்போதுள்ள சூழலில் கவுண்டர் சமூக வாக்குகள் எடப்பாடி பழனிசாமி பக்கம் போய்விட்டது. முக்குலத்தோர் சமூக வாக்குகளில் கணிசமான அளவு தினகரன் பின்னால் சென்றுவிட்டது. இப்படிப்பட்ட சூழலில், நாம் தனித்துப் போட்டியிட்டால், நமது சமூக வாக்குகள் அனைத்தும் நம்மிடம் வந்து சேரும். களத்தில் இருக்கின்ற சி.எம் வேட்பாளர்களில் நீ மிகத் திறமையானவன். எனவே, சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் நாம் நிச்சயம் தனித்துத்தான் போட்டியிட வேண்டும். நான் முதலில் கட்சி தொடங்கியபோது, நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டாம் என அரசியல் ஆலோசகர்கள் கருத்து தெரிவித்தனர். அதையும் தாண்டி போட்டியிட்டு வாக்கு சதவீதத்தில் நல்ல நிலையில் இருந்தோம். இப்போது நாம் தனித்து நின்றாலும் ஆறு தொகுதிகளில் வெல்வோம். தமிழகம் முழுவதும் இரட்டை இலக்கத்தில் வாக்குகளைப் பெறுவோம். அடுத்து நாம் சி.எம் ஆக வருவதற்கு இந்த வாக்குகள் துணை புரியும்' எனக் கூறியிருக்கிறார். 

அவரது இந்தக் கருத்தில் அன்புமணிக்கு உடன்பாடில்லை. இதுதொடர்பாக அவர் பேசும்போது, ` இப்படித்தான்பா.. சட்டமன்றத் தேர்தலில் சொன்னீர்கள். பென்னாகரத்தில்கூட நம்மால் வெற்றி பெற முடியவில்லை. தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க வேட்பாளர் இன்பசேகரன், ` ராமதாஸ் பையனை எம்.பி ஆக்குனீங்க... பெரியண்ணன் பையனை எம்.எல்.ஏ ஆக்குங்கள்' எனக் கூறி சிம்பிளாக ஜெயித்துவிட்டுப் போய்விட்டார். எனவே, கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதுதான் சரியானது. தனித்துப் போட்டியிட்டால் ஓட்டு வரும்... சீட்டு வருமா?' எனக் கேட்டிருக்கிறார். இதற்கு பதில் அளித்த ராமதாஸ், ` கூட்டணிக் கட்சிக்காரர்கள் நம்மை சேர்த்துக் கொண்டு கவிழ்ப்பார்கள். கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டுப் போடாதவர்கள், இப்போது இருக்கும் சாதாரண ஆள்கள் சொல்லியா கேட்கப் போகிறார்கள். எனவே, தனித்துப் போட்டியிடுவதுதான் சரியானது. நாடாளுமன்றத் தேர்தலுக்காக தனியார் ஏஜென்சிகளின் உதவியோடு புரமோஷன் வேலைகளை உடனே தொடங்க வேண்டும். எவ்வளவு செலவானாலும் பார்த்துக் கொள்ளலாம்' எனக் கூறியிருக்கிறார். இந்த விவாதம் இன்னும் முடிவுக்கு வரவில்லை" என்றார் விரிவாக.