Published:Updated:

சபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்!

சபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்!
சபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்!

'ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்லக் கூடாது' என்று போராட்டம் நடத்திவரும் நிலையில், அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற 2 பெண் பத்திரிகையாளர்களையும் போராட்டக் குழு விட்டுவைக்கவில்லை. பத்திரிகையாளர்களாக இருந்தாலும் பெண்கள் எதற்கு இங்கு வரவேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்குப் பெண்களை அனுமதிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் பா.ஜ.க, இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். எந்தக் காரணத்துக்காகவும் பெண்களைச் சந்நிதானத்துக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று இந்து அமைப்புகள் தொடர்ந்து கூறிவந்தனர். இதனால், கோயிலுக்கு வரும் பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதாக கேரள அரசு தெரிவித்தது. இதையடுத்து, இன்று சபரிமலை கோயில் சந்நிதானம் திறக்கப்பட்டது. தீர்ப்புக்குப் பிறகு கோயிலுக்குப் பெண்கள் வருவார்கள் என்று கருதப்பட்ட நிலையில், இந்தியா முழுவதிலுமிருந்து ஊடகங்கள் செய்தி சேகரிப்பதற்காக சபரிமலைக்குச் சென்றிருந்தன. 

நியூஸ் மினிட் செய்தியாளர் சரிதா பாலன் மற்றும் ரிபப்ளிக் டி.வி செய்தியாளர் பூஜா ஆகியோர் சபரிமலைகுறித்து பம்பா அருகே செய்தி சேகரித்துவந்திருக்கிறார்கள். அப்போது, 20-க்கும் அதிகமான ஐயப்ப பக்தர்கள் இருவரையும் தாக்கியதாக, நியூஸ் மினிட் ஆசிரியர் தான்யா ராஜேந்திரன் தெரிவித்திருக்கிறார். செய்தி சேகரிப்பில் இருந்தவர்கள், தங்களுடைய அடையாள அட்டையைக் காண்பித்தும்கூட தாக்குதலைத் தொடர்ந்திருக்கிறார்கள். மேலும், அவர்களுடைய வாகனங்களையும் சேதப்படுத்தியிருக்கிறார்கள். தற்போது, இருவரும் அருகிலிருக்கும் நிலக்கல் காவல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல, சி.என்.என், நியூஸ் 18 பத்திரிகையாளர் ராதிகா செய்தி சேகரிக்கச் சென்றபோது, அவர் சென்ற காரைச் சூழ்ந்துகொண்டு திரும்பிச் செல்லுமாறு சிலர் கோஷமிட்டுள்ளனர்.