Published:Updated:

ஆ.ராசாவை தி.மு.க.-வில் இருந்து நீக்குங்கள்!

கருணாநிதிக்கு கோரிக்கை வைக்கும் காங்கிரஸ்!

##~##
'ஏக பில்ட்-அப் கொடுத்து வைத்தோம்... கடைசியில் ஏமாற்றிவிட்டாரே ராகுல்!' என்பது தமிழக இளைஞர் காங்கிரஸின் பாத யாத்திரைக் குழு குமுறல்! சென்னைக்குள் 10 ஆண்டுகளாக ஊர்வலத்துக்கு விதிக்கப்பட்ட தடையை உடைத்து, தலைநகரத்தில் நுழைந்தது இளைஞர் காங்கிரஸ் நடைபயணம். அக்டோபர் 2-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி... 53 நாட்கள் நடந்து 1,100 கி.மீ. தொலைவைக் கடந்து, நவம்பர் 24-ம் தேதி நிறைவடைந்தது 'யுவாபாத் 2010’!

 தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற்ற நிறைவு விழாவில் கலந்துகொள்ள, தனக்கு பதிலாக தன் தூதராக மத்திய கனரகத் தொழில் துறை இணை அமைச்சர் அருண் யாதவை அனுப்பி வைத்துவிட்டார் ராகுல் காந்தி! அவர் ஆப்சென்ட்தான் குமுறலுக்குக் காரணம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆ.ராசாவை தி.மு.க.-வில் இருந்து நீக்குங்கள்!

இருந்தாலும், வேகம் குறையாமலே மைக் பிடித்த இளைஞர் காங்கிரஸின் தமிழகத் தலைவர் யுவராஜா, 'ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பதவி விலகிய ஆ.ராசா குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரை, அவரை தி.மு.க-வில் இருந்தும் நீக்க வேண்டும்...’ என்று சொல்ல, பெரும் பரபரப்பு! விழா முடிந்து மேடையைவிட்டு இறங்கியயுவராஜாவிடம் பத்திரிகையாளர்கள் கேள்விகளால் துளைத்தெடுக்க... 'இதுபற்றி தனியாக விளக் கம் கொடுப்பேன்...’ என்று தப்பித்தார்.

அவரை ஜூ.வி-க்காகப் பேச வைத் தோம்!

''இளைஞர் காங்கிரஸ்  நடைபயணம் எப்படி இருந்தது?''

''மத்திய அரசின் சாதனைகளை தமிழக மக்களிடம் சொல்வதற்காகவே இந்தப் பயணம் நடத்தினோம். மாநிலத்தின் பொதுவான பிரச்னைகளை நேரில் கண்டோம். பெரிய நகரங்களில் அகல மான சாலைகளையும், பாலத்துக்கு மேல் பாலங்களாகவும் கட்டினால் போதுமா? நாங்கள் பார்த்த கிராமங்களில் அடிப்படை, சுகாதார வசதிகளே இல்லை. கழிப்பிட வசதி இல்லாமல் அவதிப்படுவதாக எல்லா இடங்களிலும் பெண்கள் புகார் கொடுத்தனர். குக்கிராமம் வரைக்கும் இலவச டி.வி. கொடுத்து இருக்கிறார்கள். இந்த அக்கறையை கல்வி வழங்குவதில் காட்டியிருக்கலாம்.

'108’ திட்டம் பற்றி மாநில அரசு சிறப்பாக விளம்பரம் செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மத்திய அரசு கொண்டுவந்த கட்டாயக் கல்வி சட்டம், தகவல் உரிமைச் சட்டம் போன்றவற்றுக்கு இப்படி முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதையெல்லாம் மக்களின் கவனத்துக்குக் கொண்டுசெல்லவே நடைபயணம் நடத்தினோம்.''

''காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று சொல்லிக்கொண்டே, எல்லா இடங்களிலும் ராகுல் காந்திக்கு மட்டும்தானே முக்கியத்துவம் தருகிறீர்கள்?''

''அப்படி இல்லை... மேலிடத்தின் அங்கீகாரம் பெற்ற எங்கள் கோஷமே, 'ராகுல் காந்தியின் வழி நடப்போம், காமராஜர் ஆட்சி அமைப்போம்’ என்பதுதான். 43 ஆண்டுகளாக இங்கு காங்கிரஸ் ஆட்சியில் அமராமல் இருப்பதற்குக் காரணம், ஒரு சில தலைவர்களைத் தவிர மற்றவர்கள், கிராமப்புறங்களில் கட்சியை வளர்க்காமல் விட்டதுதான். இதை மாற்றி, காமராஜரின் எண்ணப்படி கிராமப்புறங்களில் அடித்தட்டு மக்களிடமும் கட்சியைப் பலப்படுத்தும் பணியை ராகுல்ஜி மேற்கொண்டு இருக்கிறார். அதன் முதல் கட்டமே இந்த நடை பயணம். 'தமிழகத்தில் என்ன செய்ய வேண்டும்’ என அவர் நினைக்கிறாரோ... அதை எங்கள் மூலமாக அவர்தான் செயல்படுத்துகிறார்!''

''பிரணாப் முகர்ஜியே 'தி.மு.க-வுடன் கூட்டணி தொடரும்' எனச் சொல்லிவிட்டார். நீங்களோ சந்தேகக் குரலில், 'ஒருவேளை வரும் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி தொடர்ந்தால்...’ என்றெல்லாம் பேசி இருக்கிறீர்களே..?''

''கூட்டணியைக் குலைப்பது இளைஞர் காங்கிரஸ்தான் என்பது போல சிலர் பேசுகி றார்கள். கூட்டணி தர்மத்தைப் பேசுகிறவர்கள், எங்களின் நடைபயணத்தைத் தடுக்க டெல்லி வரை ஏன் போக வேண்டும்? தி.மு.க-வின் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களே இதில் ஈடுபட்டார்கள். சின்ன சேலத்தில் மேடை போட்டு எங்களைக் கூட்டம் நடத்தவிடாமல், தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினரே பகிரங்கமாகத் தடுத்தார். அதை மீறிக் கூட்டம் போட்டோம். இது ஓர் உதாரணம் மட்டும்தான்.

அவர்களும் சரியாக இருந்தால்தானே எங்களைப் பற்றிப் பேசுவது சரியாக இருக்கும்! எங்களைப் பொறுத்த வரையில், சோனியாஜியும், ராகுல்ஜியும் கை காட்டும் கட்சியுடன் சேர்ந்து, கூட்டணியின் வெற்றிக்காகப் பாடுபடுவோம். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பதவி விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீதான குற்றச்சாட்டு தவறு என நிரூபிக்கப்படும் வரை தி.மு.க-வில் இருந்து அவரை கலைஞர் நீக்கிவைக்க வேண்டும். வரும் தேர்தலிலும் இதே கூட்டணியுடன் மக்களை சந்திக்கும்போது... குற்றமற்றவர்கள் என நிரூபிக்கவும், தவறு செய்தவர்களுக்கு தண்டனை உண்டு என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்தவும், கூட்டணியின் வெற்றிக்கும் இதுபோன்ற நடவடிக்கை அடித்தளமாக அமையும். இதைத்தான் நான் மேடையில் சொன்னேன்...'' என்றவர், கொசுறாக இன்னொரு தகவலையும் சொன்னார்.

''எங்கள் பயணத்தில் அனைத்து இடங்களிலும், தமிழக ஆளும் கட்சியினர் மீதும் ஆட்சியின் குறைபாடுகளைச் சொன்ன பொதுமக்கள், ஆயிரக்கணக்கான புகார்களையும் தந்தார்கள். இவற்றை நாங்களும் விசாரித்து, புகைப்பட ஆதாரங்களுடன் தொகுத்து, புத்தகமாகத் தயாரித்து வருகிறோம். தலைவர் ராகுல் காந்தியின் ஒப்புதலுடன், இந்தப் புத்தகத்தை முதல்வர் கருணாநிதியிடம் நேரடியாகக் கொடுக்கப் போகிறோம். குறைகளைக் கொட்டப்போகிறோம், நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!'' என்று புன்னகைத்தார் மனுஷர்!

படங்கள்: எம்.உசேன்,  அ.ரஞ்சித்