Published:Updated:

`இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள்; 450 மில்லியன் டாலர் நிதி!’ -கோத்தபய சந்திப்பில் அறிவித்த மோடி

மூன்றுநாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே, இன்று பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

கோத்தபய - மோடி
கோத்தபய - மோடி

இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே, மூன்றுநாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் கோத்தபய ராஜபக்‌ஷேவுக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தும் பிரதமர் மோடியும் அவருக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர். தொடர்ந்து, குடியரசுத் தலைவரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார் கோத்தபய ராஜபக்‌ஷே.

கோத்தபய - மோடி
கோத்தபய - மோடி

இதையடுத்து, டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்குச் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த கோத்தபய, “ஒரு நாட்டின் அதிபராக என்மீது நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்தியா, இலங்கைக்கு இடையே வரலாற்றுரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் நீண்ட நாள் நட்பு உள்ளது.

நான் அதிபராக இருக்கும் காலகட்டத்தில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான உறவை மேம்படுத்த விரும்புகிறேன். பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பணிகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கோத்தபய ராஜபக்‌ஷே
கோத்தபய ராஜபக்‌ஷே

தொடர்ந்து, டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி மற்றும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே ஆகிய இருவரும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இவர்களின் சந்திப்பு, சுமார் 2 மணி நேரம் வரையில் நீடித்தது. அப்போது, இலங்கைக் குண்டு வெடிப்பு சம்பவம், இலங்கைத் தமிழர் பிரச்னை, மீனவர்கள் பிரச்னை, இருநாட்டு உறவு, பாதுகாப்பு போன்ற பல்வேறு விஷயங்களைக் குறித்து விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, இலங்கையின் வளர்ச்சிக்கு 450 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியளித்து உதவுவதாக, பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதில், இலங்கையின் பாதுகாப்புக்கு மட்டும் 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்பின்னர், மோடியும் கோத்தபயவும் இணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

கோத்தபய - மோடி
கோத்தபய - மோடி

அப்போது முதலில் பேசிய பிரதமர் மோடி, “ இலங்கையும் இந்தியாவும் ஒரு வலுவான பிணைப்பைப் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்தியாவுக்கு மிகவும் அருகில் உள்ள நாடு என்பதன் அடிப்படையில், இலங்கை உடனான எங்கள் உறவுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். ராணுவரீதியாக இலங்கையுடன் இணைந்து இந்தியா செயல்படும். இலங்கையில் நடக்கும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட, அந்நாட்டுக்கு 50 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக 400 மில்லியன் டாலர் வழங்கப்பட்டுள்ளது.

முன்பு மகிந்த ராஜபக்‌சேவின் வலது கை; இப்போது இலங்கை அதிபர் - யார் இந்த கோத்தபய ராஜபக்‌சே?

இந்தியாவின் வீட்டுத் திட்டத்தின்கீழ், இலங்கையில் ஏற்கெனவே 46,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அங்குள்ள தமிழ் மக்களுக்காக மேலும் 14,000 வீடுகள் கட்டித் தரப்பட உள்ளன. இலங்கை மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும். இரு நாடுகளுக்கும் இடையே கடல்வழி வணிகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை அரசு அந்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு சம உரிமை, நீதி வழங்கும் என நம்புகிறேன்” என்றார் பிரதமர் மோடி.

கோத்தபய - மோடி
கோத்தபய - மோடி

இதையடுத்து, இந்தியப் பிரதமர் மோடியை இலங்கைக்கு வருமாறு கோத்தபய அழைப்பு விடுத்தார். “ பிரதமர் மோடியுடனான சந்திப்பில் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக அதிகம் விவாதிக்கப்பட்டது. இந்தியாவுடனான இலங்கையின் நட்பை உயர்ந்த நிலைக்குக் கொண்டுசெல்ல முயற்சி செய்வேன். இலங்கை வசம் உள்ள இந்திய மீனவர்களின் அனைத்துப் படகுகளும் விடுவிக்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.