Published:Updated:

`இந்திய உளவுத் துறையைக் குற்றம் சாட்டவில்லை!’ - இலங்கை அரசு விளக்கம்

`இந்திய உளவுத் துறையைக் குற்றம் சாட்டவில்லை!’ - இலங்கை அரசு விளக்கம்
`இந்திய உளவுத் துறையைக் குற்றம் சாட்டவில்லை!’ - இலங்கை அரசு விளக்கம்

'இந்திய உளவுத் துறை தன்னைக் கொல்ல முயல்வதாக, எந்தவொரு குற்றச்சாட்டையும் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்வைக்கவில்லை' என அந்நாட்டு அரசு விளக்கமளித்திருக்கிறது.

இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய உளவு அமைப்பான `ரா' (RAW) தன்னைக் கொல்ல சதித்திட்டம் தீட்டுகிறது என அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன பேசியதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும், இந்தத் தகவல் இந்தியப் பிரதமர் மோடிக்குத் தெரியாது எனவும், அவர் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த நிலையில், பிரதமர் மோடியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன பேசினார். அப்போது, அமைச்சரவைக் கூட்டத்தில் தான் பேசியதாக வெளியான தகவல்குறித்து அவர் விளக்கமளித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சிறிசேன, `இந்தியப் பிரதமர் மோடியை இன்று மாலை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். இலங்கையின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அவர் என்னிடம் உறுதியளித்தார்’ என்று கூறியிருக்கிறார்.

அதேபோல, 'அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திய உளவு அமைப்பு தன்னைக் கொல்ல முயல்வதாக எந்தவொரு கருத்தையும் சிறிசேன தெரிவிக்கவில்லை' என இலங்கை அதிபர் மாளிகை விளக்கமளித்திருக்கிறது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``இலங்கை அதிபரைப் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சதி முயற்சியில், இந்திய உளவுத் துறையின் எந்தவொரு ஈடுபாடு குறித்தும் ஜனாதிபதி கருத்துத் தெரிவிக்கவில்லை. 

அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியைப் படுகொலை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சதித் திட்டம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படவேண்டியதன் அவசியம்குறித்து ஜனாதிபதி, அந்தக் கூட்டத்தில் வலியுறுத்தினார். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல், இந்தியாவும் இலங்கையும் மிக நெருங்கிய நட்புறவையும் ஒத்துழைப்பையும் பேணிவருகின்றன. இந்தியத் தூதர், ஜனாதிபதியை இன்று காலை சந்தித்தபோது இதுகுறித்து அவரிடம் தெளிவுபடுத்தப்பட்டது.

இந்தச் சூழலில், இரு நாடுகளுக்கும் இடையே இருந்துவரும் நல்லுறவுகளுக்கும், இரு தலைவர்களுக்கும் இடையிலான சிறந்த தனிப்பட்ட தொடர்புகளுக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில், சில உள்நோக்கம் கொண்ட தரப்புகளால் இத்தகைய திரிபுபடுத்தப்பட்ட விஷயங்கள் பரப்பப்படுதல் மிகவும் கவலைக்குரியதாகும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.