Published:Updated:

''மோடி விசாவுக்காக அமெரிக்காவை நெருக்கினேன்!'' - சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வதி #VikatanExclusive

"'Third Eye' என்ற புத்தகத்தை எழுதி அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி (Washington DC) நகரத்தில் இந்திய வம்சாவளியினரின் உதவியுடன் வெளியிட்டேன். அமெரிக்க அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தினேன். இதனால் பணிந்த அமெரிக்க அரசு நரேந்திர மோடிக்கு விசா அளித்தது."

''மோடி விசாவுக்காக அமெரிக்காவை நெருக்கினேன்!'' - சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வதி #VikatanExclusive
''மோடி விசாவுக்காக அமெரிக்காவை நெருக்கினேன்!'' - சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வதி #VikatanExclusive

டிசம்பர் 7ஆம் தேதி தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆந்திராவின் காகிநாடாவில்  ஸ்ரீபீடத்தை நிறுவி ஆன்மிக பிரசாரம் செய்துவரும் சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வதி சுவாமிகள் விஜயதசமி திருநாளில் (19.10.2018 - வெள்ளி) பிஜேபியில் இணைந்து முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவார் என செய்திகள் உலா வருகின்றன. இந்த நிலையில் சுவாமிகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினோம்.

தெலுங்கானா மாநிலம் உருவாகி நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், மாநிலத்தின் ஒருங்கிணைந்த  முன்னேற்றத்திற்குப் பாடுபடுவதும், இந்துக்களின் உரிமையை நிலைநாட்டுவதும், தூய்மையான ஊழலற்ற அரசியலை முன்னிறுத்துவதும் தன் முக்கிய பணியாக இருக்கும் என்ற அறிமுகத்துடன் ஆரம்பித்தார். மலையாளம் கலந்த தமிழில் தெளிவாக பேசினார்.

"என் பெற்றோரின் பூர்விகம் கேரளா. கோயம்புத்தூரில் பள்ளியில் படித்தேன்.ஆந்திராவின் நெல்லூருக்கு குடிபெயர்ந்தது எங்கள் குடும்பம். அங்கு ஒரு ஹோட்டலை நடத்தினார் என் தந்தை. பத்தாம் வகுப்பு முடிக்காத நிலையில் வேத பாடசாலையில் சேர்ந்து முறைப்படி வேதங்களை பயின்றேன். ஆன்மிக தாகத்தின் காரணமாக, 16வது வயதில் ரிஷிகேஷ் சென்று, அங்கு சமஸ்க்ரித இலக்கணம் மற்றும் உபநிடதங்கள், பகவத் கீதை, பிரம்ம சூத்ரம், ஆதி சங்கரரின் உரை இவற்றில் தேர்ச்சி பெற்றேன்.

1990ஆம் ஆண்டு, தமிழகத்தைச் சேர்ந்த பூஜ்ய ஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் கோவை அருகிலுள்ள ஆனைக்கட்டி ஆசிரமத்தில் நீண்டகால வேதாந்த வகுப்பில் சேர்ந்து குருகுல முறைப்படி சாஸ்திரங்களை கற்றேன். 2000ஆவது ஆண்டு பூஜ்ய ஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களிடம் முறைப்படி சன்யாச தீட்சை பெற்றேன். சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வதி என்று எனக்குப் பெயர் சூட்டினார்.

சன்யாசத்திற்கு பின் ஆந்திராவில் பல இடங்களில் சமய பிரசாரங்களை செய்து வந்தேன். காகிநாடாவில் ஸ்ரீபீடத்தை நிறுவினேன். 2003ல் ராஜமுந்திரியில் கோதாவரி நதி புஷ்கரத்தை பல லட்சக்கணக்கான பக்தர்களுடன் நடத்தினேன். 2004ல் விஜயவாடாவில் கிருஷ்ணவேணி (கிருஷ்ணா நதி) புஷ்கரத்தைப் பல லட்சம் பக்தர்கள் புடைசூழ வெற்றிகரமாக நடத்தினேன். 2014ல் அப்போது குஜராத் மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு அமெரிக்க அரசு விசா அளிக்க மறுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் "Third Eye" என்ற புத்தகத்தை எழுதி அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி (Washington DC) நகரத்தில் இந்திய வம்சாவளியினரின் உதவியுடன் வெளியிட்டேன். அமெரிக்க அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தினேன். இதனால் பணிந்த அமெரிக்க அரசு நரேந்திர மோடிக்கு விசா அளித்தது.

2015ல் கோடி தீபோத்ஸவம் (ஒரு கோடி அகல் விளக்குகள்) நடத்தி விசேஷ வழிபாடு நடத்தினேன். இதனால் மக்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. மக்களின் உதவியுடன் ஊழலற்ற அரசை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலில் ஈடுபட முடிவெடுத்தேன். பிஜேபியின் பொது செயலர் ராம் மாதவ் மற்றும் தலைவர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினேன். தற்போது நவராத்திரி பூஜைகள் நடைபெறுகின்றன. அது முடிந்தபின் விஜயதசமி அன்று (19.10.2018) பிஜேபியில் முறைப்படி இணைவேன்.

துறவிகள் நேரடி அரசியலில் ஈடுபடக்கூடாது என இந்து தர்ம சாஸ்திரங்கள் கூறுவதாக உங்கள் குருநாதர் பூஜ்ய ஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களே பிரசாரம் செய்துள்ளார். உங்கள் செயல் சாஸ்திர விரோதமில்லையா?

"ராணுவ வீரர்கள் எல்லையைப் பாதுகாப்பதுபோல் துறவிகள் இந்திய கலாச்சாரத்தை காக்க வேண்டும். மதச்சார்பற்ற அரசினால் இந்த நாட்டிற்கு எந்த பயனும் இல்லை. ஒட்டு வேட்டையாடுவது மட்டும்தான் அவர்களின் குறிக்கோள். முதல்வர் சந்திரசேகர ராவை நேரில் சந்தித்து புதிதாக உருவான ஒரு மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டாம் என வேண்டுகோள் விடுத்தேன். இடஓதுக்கீடு வழங்கவில்லை என்றால் என் கட்சி தேர்தலில் வெற்றிபெற முடியாது எனக் கூறினார். மதச்சார்பற்ற அரசு என்பது என்னவென்று அப்போதுதான் புரிந்தது.

கடந்த ஜூலை 11ஆம் தேதி, தெலுங்கானா முதல்வரின் உத்தரவுப்படி என்னை வீட்டு சிறையில் அடைத்தது காவல்துறை. கதி மகேஷ் (Kathi Mahesh) என்ற தெலுங்கு நடிகர் இந்து கடவுளான ஸ்ரீராமரை தரக்குறைவாகப் பேசியதை கண்டித்து பேரணி நடத்த போலீஸின் முன் அனுமதி பெற்றேன். ஹைதராபாத்தில் தங்கி இருந்த என்னை நகரிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டது காவல் துறை. நான் மறுத்தேன். வலுக்கட்டாயமாக காகிநாடாவில் உள்ள ஸ்ரீபீடத்தில் என்னை வீட்டு சிறையில் வைத்தது முதல்வர் சந்திரசேகர ராவின் காவல்துறை. அதோடு ஆறு மாதங்கள் ஹைதராபாத் நகருக்குள் நுழையவும் தடை விதித்தது. நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, காவல் துறையின் உத்தரவிற்குத் தடை வாங்கி மூன்று தினத்திற்குள் ஹைதராபாத் நகரில் பிரவேசித்தேன். என் ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் என்னை வரவேற்றனர். அப்போதுதான் அரசியல் பலமின்றி இந்து தர்மத்தை நிலைநாட்ட முடியாது என்பதை உணர்ந்தேன். ஸ்ரீராமர் மற்றும் ஸ்ரீகிருஷ்ணர் இருவரும் அரசர்களாகவும் இருந்ததால்தான் இந்து தர்மத்தை கட்டி காத்தனர். எனவே அரசியல் பலம் மட்டுமே இப்போதைய தேவை என முடிவு செய்து அரசியலில் சேர பிஜேபியைத் தேர்ந்தெடுத்தேன்.

இந்திய நாட்டில் இந்துக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. அரசர்கள் துறவிகளின் ஆலோசனை பெற்று ஆட்சி நடத்தினர். இப்போது உத்தரப்பிரதேசத்தை தவிர எந்த மாநில அரசும் துறவிகளை ஆதரிப்பதில்லை. ஆலோசனை கேட்பதில்லை. மதிப்பதுமில்லை. வாழையடி வாழையென வந்த ஞான பரம்பரையை அழிக்கத் திட்டமிட்ட சதிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. துறவிகளைத் தனிமைப்படுத்தினால் இந்திய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் எளிதில் அழிக்க முடியும் என்பதே இதற்குக் காரணம். தர்மத்தை நிலைநாட்டத் துறவிகள் களம் இறங்கி பணிபுரிய வேண்டியது காலத்தின் கட்டாயம். சாம, பேத, தான, தண்டம் என அதே  சாஸ்திரம்தான் சொல்கிறது. வேறு வழியில்லை.

தென்னிந்தியாவிலும் அரசியல் மாற்றம் நிகழ வேண்டும். அரசியல் பலம் மற்றும் செல்வாக்கு இவற்றைவிடத் தர்மம் மிக முக்கியம். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மாலை நேர சமய வகுப்புகளை நடத்த என் குருநாதர் பூஜ்ய ஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி ஆணையிட்டார். இப்பொது முன்னூறுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்தச் சமய வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள எல்லா கிராமத்திலும் இந்தப் பணியை விஸ்தரிப்பதே என் லட்சியம். இதனால் இளைய தலைமுறையினரிடம் நம் கலாச்சாரத்தை போதித்து ஆன்மிக விழிப்புணர்ச்சி ஏற்படுத்த முடியும்."

முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப் படுவீர்கள் எனச் செய்தி உலவுகிறதே?

"கட்சி தலைமை என்ன கட்டளை இட்டாலும் அதைச் செய்வதே என் பணி. முதலமைச்சர் வேட்பாளர் என்றால் ஒரு தொகுதியில் மட்டும்தான் கவனம் செலுத்த முடியும். தெலுங்கானா முழுவதும் எனக்கு ஆதரவாளர்கள் இருப்பதால் மாநிலம் முழுவதும்  சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்ட தலைமை கட்டளை இடலாம்.

எந்தத் தொகுதி, என்ன பணி என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எந்தப் பணியையும் என்னால் திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு" என முடித்தார் சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வதி.

தெலுங்கானாவின் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது.