அலசல்
Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

டி,ஜெய்சிங், கோயம்புத்தூர்.

இந்தியாவில் மோடியை எதிர்த்துத் தீவிரமாக அரசியல் செய்யும் நபராக யாரைக் குறிப்பிடலாம்?


! மம்தா பானர்ஜியைத்தான் சொல்லவேண்டும்! அகில இந்திய அளவில் மோடிக்கு எதிரான கூட்டணியை அமைக்க முயற்சி செய்து வருபவர் அவர்தான். இதற்காக தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, தேசியவாத காங்கிரஸ், தி.மு.க உள்பட பல கட்சிகளின் தலைவர்களை மம்தா சந்தித்துப் பேசினார். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டால் பி.ஜே.பி-யை எளிதில் வீழ்த்த முடியும் என்பது அவருடைய கணக்கு. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சோனியா- மம்தா சந்திப்பு நடந்துள்ளது. மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைப்பதும் அதன்பிறகு காங்கிரஸுடன் கைகோப்பதும் மம்தாவின் திட்டமாகத் தெரிகிறது. ‘முலாயம் சிங் யாதவ், நிதிஷ் குமார் போன்றோரைவிட மம்தாவே பிரதமர் ஆவதற்குத் தகுதி படைத்தவர்’ என அன்னா ஹசாரே சொன்னதும்கூட மம்தாவை உசுப்பேற்றியுள்ளது.

கழுகார் பதில்கள்!

க.சு.ஸ.மழாஹிரி, காயல்பட்டினம்.

டி.டி.வி.தினகரனின் தனிக்கொடி, தனிச்சின்னம், தனிப்பெயர் அ.தி.மு.க-வுக்குச் சாதகமா, பாதகமா?


தினகரனின் வளர்ச்சியை அ.தி.மு.க-வினர் தங்களுக்குச் சாதகமானதாகவே நினைக்கிறார்கள். இன்றைக்கு அந்தக் கட்சி ஆட்சியில் இருப்பதால் எடப்பாடியும் பன்னீரும் சுறுசுறுப்பாக உள்ளனர். ஆட்சி போய்விட்டால் காப்பாற்றுவதற்குத் தினகரன்தானே அவர்களுக்கு வேண்டும். அதனால், ஒருசில அமைச்சர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் தினகரனின் வளர்ச்சியைத் தூரத்திலிருந்து கவனிக்கிறார்கள். மகிழ்ச்சியடைகிறார்கள்.

பிப.ஸ்ரீதர்ஷினி, பாபநாசம்.

‘நாங்கள் பொங்கி எழுந்தால் தமிழகம் தாங்காது’ என்கிறாரே தமிழிசை சௌந்தர்ராஜன்?


கர்நாடகாவுக்குப்போய்ப் பொங்கினால், தமிழ்நாட்டுக்கு நன்மையாய் இருக்குமே!

பிரதிபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி செலுத்தவேண்டிய முதல் நபர் யார்?


சசிகலாதான். அந்த நன்றியுணர்வை நடராசன் இறப்புக்கு அஞ்சலி செலுத்துவதன் மூலமாகவாவது எடப்பாடி காட்டியிருக்க வேண்டும்.

கழுகார் பதில்கள்!

பொன்விழி, அன்னூர்.

இரட்டை இலைச் சின்னம் கிடைத்த பிறகும், உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஏன் பயப்படுகிறார்கள்?


இலைகள் இரண்டாகிவிடக் கூடாது அல்லவா? அதனால்தான்! ஆட்சியில் உட்கார்ந்திருக்கிறார் களே தவிர, அ.தி.மு.க என்கிற கட்சி இப்போது யாருடைய கன்ட்ரோலிலும் இல்லை என்பதை எடப்பாடியும் பன்னீரும் அறிவார்கள்.

அ.கண்ணதாசன், பெரமண்டூர்.

வங்கி மோசடிகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. இதுதான், ‘இந்தியா வல்லரசு’ என்ற கொள்கையின் முன்னேற்றமா?


கடந்த மூன்று ஆண்டுக் காலத்தில், 2.41 லட்சம் கோடி ரூபாயை வாராக்கடன் என்று ரத்து செய்துள்ளார்கள். இதுதான் மோசடிகளுக்கு முழுக்காரணம். சில ஆயிரங்கள் கடன் வாங்கிக் கட்ட முடியாத விவசாயியை ஜப்தி என்ற பெயரால் உயிரைப் பறித்துவருகிறார்கள். ஆனால், கோடிகளில் கடன் வாங்கிக் கட்ட முடியாதவர்களுக்குக் கடனை ரத்து செய்து உயிரூட்டுகிறார்கள். இதுதான் அவர்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் என்றால், முன்னேற்றம்தான்!

சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம்.

நாஞ்சில் சம்பத்தின் எதிர்காலம்?


 நா இருக்கும் வரை அவரது எதிர்காலத்துக்கு எந்தக் கவலையும் இல்லை. கட்சிக் கூட்டத்தில் ஏழு மணி நேரம் வரை பேசியிருக்கிறார். கோயில் விழாவில், ஏழு நாள்கள் சிலப்பதிகாரம் தொடர்ச் சொற்பொழிவு நிகழ்த்தியிருக்கிறார். இப்படியே வண்டி ஓடிவிடும்!

கழுகார் பதில்கள்!

ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி.

‘விவசாய குடும்பத்தைச் சேர்ந்த நான் படிப்படியாக உயர்ந்தேன்’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறாரே?


படிப்படியாக எப்படி உயர்ந்தார் என்பதைச் சசிகலாதான் சொல்ல வேண்டும். ஆனால், காவிரிப் பிரச்னையைக் கைகட்டி வேடிக்கை பார்க்கும் எடப்பாடி, தன்னை விவசாயி என்று சொல்லிக்கொள்வதே அவமானம்!

காயல் எம்.ஃபாரூக், திருச்சி.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியதாகப் பெருமைப்படும் ஆட்சியாளர்கள், தமிழகத்தின் இரண்டாவது தலைநகராகத் திருச்சியை ஆக்க வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் கனவை ஏன் இதுவரை நிறைவேற்ற வில்லை?

தமிழ்நாட்டின் தலைநகராக டெல்லியை மாற்றியவர்களிடம் இதை எதிர்பார்க்கலாமா?

கு.முருகானந்தம், பருத்திக்குடி.

 சமீபத்திய நிகழ்வுகளில் தங்களுக்குக் கண்ணீரை வரவழைத்த சம்பவம் எது?

 வாய் திறந்து பேச வழியற்ற காவிரி மண், வஞ்சிக்கப்படுவதுதான்!

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

எது கொடூர அரசியல்?


 காவிரி மேலாண்மை வாரியம் அமையுங்கள் என்று சொன்னால் ‘அமைப்போம்’ அல்லது ‘அமைக்க இயலாது’ என்று சொல்ல வேண்டும். மாறாக... ‘கடல்நீரைக் குடிநீர் ஆக்கிக்கொள்ளுங்கள்’, ‘நதிநீரை இணைத்துக்கொள்ளுங்கள்’, ‘மழைநீரைச் சேமியுங்கள்’ என அறிவுரைகள் சொல்லி, ‘நல்லவர்களாக வேஷம் போட்டுக்கொண்டு’ உதாசீனப்படுத்துவது தான் கொடூர அரசியல்.

காவிரியில் தமிழகத்துக்கு எவ்வளவு நீர் தர வேண்டும் என உச்ச நீதிமன்றம் சொன்னதோ, அதை ஒப்புக்கொண்டு விட்டது கர்நாடக அரசு. அந்த அளவு தண்ணீரைத் தருகிறார்களா என்பதைக் கண்காணிக்கும் காரியத்தைத்தான் மேலாண்மை வாரியம் செய்யப்போகிறது. போலீஸுக்குத் திருடன் பயப்படுவதைப் போல கர்நாடகா பயப்படுவதும் திருடனுக்குப் பயந்து போலீஸ் ஸ்டேஷன் அமைக்க மறுப்பதுபோல மத்திய அரசு நடந்து கொள்வதும்தான் கொடூர அரசியல்!

படங்கள்: ஆ.முத்துகுமார்,
ரா.ராம்குமார், தி.குமரகுருபரன்

கோபண்ணா, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்

கழுகார் பதில்கள்!

தமிழக அரசியலில் தேசியக் கட்சிகளின் பங்கு குறைந்துவருவதும், தமிழ்த் தேசிய அரசியல் மேலோங்கி வருவதும் தமிழகத்துக்குப் பயன் தருமா?

தமிழக அரசியலில், 1967 முதலே தேசியக் கட்சிகளின் பங்கு குறைந்துகொண்டுவந்து எறும்பு, கொசுவைவிடவும் சிறியதாகத் தேய்ந்துவிட்டது. மற்ற மாநிலங்களில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் சூழலாவது காங்கிரஸ் கட்சிக்கும் பி.ஜே.பி-க்கும் இருக்கிறது. ஆனால், இங்கே இரண்டு கட்சிகளுக்கும் அப்படிப்பட்ட ஒளிக்கீற்றுகூடத் தெரியவில்லை. திராவிடக் கட்சிகளின் நிழலில் பதுங்கியும் தோளில் ஏறியும் பயணம் செய்ததால் மட்டுமே இந்தச் சறுக்கல் என்று சொல்ல முடியாது. தமிழ்நாட்டின் தேவைகள் மற்றும் உரிமைகள், தமிழக மக்களின் எண்ணங்கள் மற்றும் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும்விதமாகத் தேசியக் கட்சிகள் இல்லாமல் போனதுதான் காரணம்.

ஒரு மாநிலம் தன் தேவைக்கான கோரிக்கையை வைத்தால், அதை மாநிலவாதமாகப் பார்ப்பதும், குறுகிய இனவெறியாக நோக்குவதும்தான் தேசியக் கட்சிகளின் சிந்தனையாக உள்ளது. கர்நாடகாவின் இன்றைய முதலமைச்சரின் பல்வேறு நடவடிக்கைகள் தேசியக் கட்சியான காங்கிரஸுக்கு முரணானவை. மகாராஷ்டிராவில் சிவசேனாவின் நடவடிக்கைகள் தேசியக் கட்சியான பி.ஜே.பி-யின் அகில இந்திய சிந்தனைக்கு முரணானவை. ஆனால், இவற்றை அகில இந்தியத் தலைமை கண்டுகொள்வதில்லை. மாநிலவாதமாகப் பார்ப்பதில்லை. இந்த முரண்பாடுதான் தமிழகத்தில் தேசியக் கட்சிகள் புறக்கணிக்கப்படக் காரணம்.

இந்த இடைவெளியை இட்டு நிரப்பக்கூடியதாகத் தமிழ்த் தேசிய அரசியல் அமைந்துள்ளது. இந்தத் தமிழ்த்தேசிய அரசியல் என்பது தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளைப் போராடிப் பெற்றுத்தருவதற்குத் தனது முழுபலத்தையும் காட்டும் வரை பலன் தரும். மாறாக மற்ற இனப்பிரிவு, மொழிப்பிரிவு மக்களைக் கொச்சைப்படுத்துவதாக அது சுருங்கினால், தமிழ்நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை; அந்தக் கட்சிகளுக்கும் எந்தப் பயனும் இல்லை

 கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 
757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற  இமெயிலுக்கும் அனுப்பலாம்!