அலசல்
Published:Updated:

மக்களுக்கு உதவாத மருத்துவமனைச் சட்டம்

மக்களுக்கு உதவாத மருத்துவமனைச் சட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
மக்களுக்கு உதவாத மருத்துவமனைச் சட்டம்

கிளினிக்குகள் மூடப்படும்... கார்ப்பரேட்கள் கடை திறப்பார்கள்!

து நடந்தது 2016-ம் ஆண்டு. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ‘ஏ.ஆர்.ஹெச்.டி’ பியூட்டி பார்லரில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட சந்தோஷ்குமார் மரண மடைந்தார். இத்தனைக்கும் அவர் ஒரு மருத்துவ மாணவர். இந்தச் சம்பவம் பலரையும் திகைப்பில் ஆழ்த்தியது. சந்தோஷ்குமாரின் பெற்றோர் நியாயம்கேட்டு நீதிமன்றப் படியேறினர். சிகிச்சை அளிப்பதற்கு உரிய வசதிகளோ, மருத்துவர்களோ இல்லாமல் பல தனியார் மருத்துவமனைகள் செயல் படுகின்றன; பியூட்டி பார்லர்களே மருத்துவமனை களாகவும் செயல்படுகின்றன; அதுமட்டுமல்ல... மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் தமிழகத்தில் எந்தச் சட்டமும் இல்லை என்ற உண்மைகள் இது தொடர்பான விசாரணைக்குப்பின் வெளிச்சத்துக்கு வந்தன.

மக்களுக்கு உதவாத மருத்துவமனைச் சட்டம்

உடனே விழித்துக்கொண்ட தமிழக அரசின் சுகாதாரத்துறை, 19 ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டிருந்த ‘தனியார் சிகிச்சை மையங்கள் நிறுவன ஒழுங்குமுறைச் சட்டம்’, 2010-ல் மத்திய அரசு கொண்டுவந்த, ‘மருத்துவ நிறுவனங்கள் (பதிவு செய்தல் மற்றும் முறைப்படுத்தல்) சட்டம்’ ஆகியவற்றைத் தூசிதட்டி எடுத்தது. இரண்டையும் ஆராய்ந்து அறிக்கை தர, வல்லுநர் குழு ஒன்றும் அமைக்கப் பட்டது. அந்தக் குழுவின் அறிக்கைப்படி, ‘தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்தல்) திருத்தச் சட்டம்’ ஒன்றை வடிவமைத்தது தமிழக அரசு. மார்ச் 22-ம் தேதி இதைச் சட்டசபையில் நிறைவேற்றியும் விட்டார்கள். இப்போது, இது கவர்னரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. ஆனால், ‘‘சிறு சிறு கிளினிக்குகள் நடத்திச் சேவையாற்றும் மருத்துவர்களிடமிருந்து மருத்துவத் துறையைப் பறித்து மொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தருவதற்காக உருவாக்கப்பட்டதே இந்தச் சட்டத்திருத்தம்’’ என்கிறார் கள் மருத்துவச் செயற்பாட்டாளர் கள். 

‘‘மத்திய அரசு கொண்டுவந்த மருத்துவமனை முறைப்படுத்தல் சட்டத்தை சிக்கிம், இமாசலப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்கள் அப்படியே நடைமுறைக்குக் கொண்டுவந்தன. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்கள் தங்களுக்கு ஏற்றவாறு சில திருத்தங்களைச் செய்து நடைமுறைப்படுத்தின. ஆனால், தமிழ்நாட்டில் கார்ப்பரேட் மருத்துவமனைகளைப் பாதுகாத்து வளர்த்தெடுக்கவே இப்படி ஒரு  சட்டத்திருத்தத்தை அரசு கொண்டு வந்துள்ளது’’ என்று குற்றம்சாட்டு கிறார்கள் மக்கள் நலவாழ்வு மைய நிர்வாகிகள்.

மக்களுக்கு உதவாத மருத்துவமனைச் சட்டம்

‘‘காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல சுகாதாரத் திட்டங்களில் மற்ற மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் முன்னோடியாக இருந்தது நம் தமிழக அரசு. அப்படி யிருக்க, மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை நிறைவேற்றுவதில் ஏன் இவ்வளவு தாமதமானது என்பது தெரிய வில்லை. இவ்வளவு நாள்கள் காலம் தாழ்த்திவிட்டு, மக்களுக்கு எந்தவிதத்திலும் நன்மையளிக்காத இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளனர். கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு அரசு துணைபோகிறதோ என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தியிருக்கிறது.

நோயாளிகளுக்கான உரிமைகளையும் சிகிச்சைக்கான கட்டண விவரங்களையும் மக்கள் அறிந்துகொள்வதை உறுதிசெய்ய வேண்டும். அப்போதுதான் மக்களுக்குப் பயனளிக்கும் சட்டமாக இது மாறும். சிகிச்சைக்கான கட்டணத்தைத் தனியார் மருத்துவமனைகள் தாமாகவே இஷ்டத்துக்கு நிர்ணயித்துக் கொள் கின்றன. இந்தத் திருத்தப்பட்ட சட்டத்தில் சிகிச்சைக் கட்டணம் பற்றி எதுவும் குறிப்பிடப் படவில்லை. தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் நிர்ண யிக்கப்பட்டதுபோல, `இந்தச் சிகிச்சைக்கு இவ்வளவுதான் அதிகபட்சக் கட்டணம்’ என்று வரையறுக்க வேண்டும். மருத்துவ மனை அல்லது மருத்துவர்கள் மீது புகார் அளிக்க ஏதேனும் குறை தீர்க்கும் அமைப்பு ஏற்படுத்தப்படுமா என்பது குறித்தும் எந்தத் தகவலும் இல்லை. இந்தச் சட்டத்தில் உள்ள குறைகளை கவர்னரிடம் சுட்டிக்காட்டியிருக்கிறோம்’’ என்கிறார், மக்கள் நலவாழ்வு மையத்தின் மாநில ஒருங்கி ணைப்புக் குழு உறுப்பினரும் குழந்தைகள் நல மருத்துவருமான பா.சந்திரா.

மருத்துவச் செயற்பாட்டாளர் அமீர்கான், ‘‘பிற மாநிலங்களில் மருத்துவமனைகளை முறைப் படுத்தச் சட்டங்கள் கொண்டுவந்த போது, பல துறைகளைச் சேர்ந்தவர்கள் பரிந்துரைக் குழுவில் உறுப்பினர்களாக இருந்தார்கள்; இருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் மாநில, மாவட்ட அளவிலான பரிந்துரைக் குழுவில் அரசு நலவாழ்வுத்துறை உயர் அதிகாரிகளும் மருத்துவர்களும் மட்டுமே உறுப்பினர்களாக இருக்கிறார்கள். விதிமீறல் செய்யும் மருத்துவமனைகள்மீதோ, மருத்துவர்கள்மீதோ, அதே துறையில் இருப்பவர்கள் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்? `விதிமீறலுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்’ என்று கூறப்பட்டிருக்கிறது. கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் பல தனியார் மருத்துவமனைகளுக்கு இந்த அபராதம் ஒரு பொருட்டே இல்லை. எனவே, இந்த நடவடிக்கை, இன்னும் கடுமையாக இருக்க வேண்டும். இதுபோன்ற குறைகளை நிவர்த்தி செய்த பிறகே இந்தச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்’’ என்கிறார்.

சமூகச் சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், ‘`மருத்துவமனைகளை முறைப்படுத்தும் நடவடிக்கை வரவேற்கக் கூடியதுதான். மருத்துவமனைகளிலுள்ள வசதிகளை அதிகரிக்கச் சொல்கிறது இந்தச் சட்டம். இதனால், சேவையின் அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்க்கும் சிறிய அளவிலான மருத்துவமனைகளும் கிளினிக்குகளும் அதைத் தொடர முடியாமல் போகலாம். கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கே இது சாதகமாக அமையும்’’ என்கிறார்.

மக்களுக்கு உதவாத மருத்துவமனைச் சட்டம்

மருத்துவ நிறுவனங்கள் திருத்தச் சட்டம் குறித்து இந்திய மருத்துவ கவுன்சிலின் மூத்த நிர்வாகி டாக்டர் ரவிசங்கரிடம் பேசினோம். ‘‘இந்தச் சட்டம் குறித்து அரசு எங்களுடன் விவாதித்தது. நாங்களும் சில ஆலோசனைகளைத் தெரிவித்தோம். ‘பரிந்துரைக் குழுவில் எங்கள் கவுன்சிலைச் சேர்ந்த ஒருவர் பிரதிநிதியாகச் சேர்க்கப்பட வேண்டும்; புகார் பெறப்படும் மருத்துவமனைகள்மீது உடனடி நடவடிக்கை எடுக்கக் கூடாது. முதலில் விளக்கம் பெறப்பட வேண்டும், அதற்குப் பிறகுதான் அபராதம் விதிப்பது, பதிவை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்’ என்று கேட்டிருக்கிறோம். அதை நிறைவேற்றித் தருவார்கள் என்று நம்புகிறோம்’’ என்றார்.   

மருத்துவச் செயல்பாட்டாளர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேட்டபோது, ‘‘இந்தச் சட்டத்தின் மூலம், மருத்துவமனை பற்றிய விவரங்கள், மருத்துவமனையில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், அங்குள்ள வசதிகள் போன்ற விவரங்களைப் பெற்று ஒரு பதிவேட்டை உருவாக்க முடியும். மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களின் எண்ணிக்கை, பராமரிக்கப்படவேண்டிய குறைந்தபட்ச வசதிகள், சிகிச்சைத் தரம் போன்றவற்றை நிர்ணயிக்க முடியும். இதனால் பொதுமக்களுக்குத் தரமான சிகிச்சை வழங்கப் படுவதை உறுதிசெய்யலாம். குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்ப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. நோயாளிகளுக் கான அடிப்படை வசதிகள் சரியாக இருக்க வேண்டியதுதான் இப்போது முக்கியம்.

இந்தச் சட்டப்படி, தமிழ்நாட்டில் ஏற்கெனவே செயல்பட்டுவரும் மருத்துவ நிறுவனங்கள், அறிக்கை அனுப்பப்பட்ட நாளிலிருந்து ஒன்பது மாதங்களுக்குள்ளும் புதிதாகத் திறக்கப்படும் மருத்துவ நிறுவனங்கள், ஆறு மாத காலத்துக்குள்ளும் பதிவு செய்துகொள்ள விண்ணப்பிக்க வேண்டும். பதிவு செய்துள்ள மருத்துவமனைகளின் விவரங்கள், பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தமிழக அரசிதழில் வெளியிடப்படும்.

மக்களுக்கு உதவாத மருத்துவமனைச் சட்டம்

அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி, சித்த மருத்துவம், யுனானி ஆகிய மருத்துவப் பிரிவுகளில் சேவை செய்யும் மருத்துவ நிறுவனங்கள் இந்தச் சட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. எனவே, பதிவு செய்யப்படாத மருத்துவமனைகள் தொடர்ந்து செயல்பட முடியாத சூழ்நிலை ஏற்படும். போலி மருத்துவர்களைக் கண்டறியவும் மருத்துவமனைகளை முறைப்படுத்தவும் இது உதவும். மருத்துவ நிறுவனங்கள் இந்த விதிமுறைகளை மீறினால் விசாரணையும் ஆய்வும் மேற்கொள்ளப்படும்; தேவைப் பட்டால் தண்டனை வழங்கவும் முடியும். அபராதம் விதிக்க முடியும். விதிமீறல் தொடர்ந்தால், மருத்துவமனையின் பதிவு ரத்துசெய்யப்படும்’’ என்றார்.

மருத்துவமனைகளை முறைப்படுத்துவதும், வசதிகளை மேம்படுத்துவதும் அவசியம்தான். ஆனால், மருத்துவ சிகிச்சை எளியவர்களுக்கு எட்டாமல் போய்விடும் ஆபத்து ஒருபோதும் ஏற்படக் கூடாது.

- ஜி.லட்சுமணன்
படங்கள்: நரேஷ் குமார்.வெ