பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

தேசத்தாய்

தேசத்தாய்
பிரீமியம் ஸ்டோரி
News
தேசத்தாய்

எம்.ஆர்.ஷோபனா

ண்டதும் காதல் என்பது உண்மையில் இருக்கிறதா என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால், நான் முதன்முதலில் வின்னி நோம்ஸாமோவைப் (Winnie Nomzamo) பார்த்த நொடியில், அவர் என் மனைவியாக வேண்டும் என்று நினைத்தேன்” நெல்சன் மண்டேலா தன் புத்தகத்தில் வின்னி மண்டேலாவைப் பற்றி இப்படிக்  குறிப்பிட்டி ருக்கிறார். கடந்த ஏப்ரல் 2-ம் தேதி, 81-வது வயதில் மறைந்தார் வின்னி மண்டேலா.

சோவீடா நகரத்தின் ஒரு பேருந்து  நிறுத்ததில்தான், நெல்சன் மண்டேலா வின்னியை முதன்முறையாகப் பார்த்தார். அப்போது மண்டேலாவுக்குத் திருமணமாகி, மூன்று குழந்தைகள் இருந்தனர். மேலும், மண்டேலா வின்னியைவிட 18 வருடங்கள் மூத்தவர். ஆனால், வின்னியைப் பார்த்த சில காலங்களிலேயே, அவர் தன் முதல் மனைவி எல்வின் மெஸேவை விவாகரத்து செய்தார். 1958-ம் ஆண்டு, மண்டேலாவும் வின்னியும் மணம் முடித்தனர். இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். மண்டேலாவும் வின்னியும் கணவன்-மனைவியாக வாழ்ந்த  38 ஆண்டுகளில்,  27 ஆண்டுகள் நெல்சன் மண்டேலா சிறையில் கழித்தார். அவர் சிறையிலிருந்த காலம் முழுவதும், அவரின்  அரசியல் செயல்பா டுகளையும் கொள்கைகளையும்  உயிர்ப்புடன் வைத்திருந்ததில் வின்னிக்கு மிக முக்கியப் பங்குண்டு. 

நெல்சன் மண்டேலா சிறையிலிருந்த காலம், அவரைக் காண மிக மிக அரிதாகவே வின்னிக்கு அனுமதி கிடைக்கும். அதுவும் அவர்கள் இருவரும் சிறையில் சந்திக்கும்போது அதிகம் பேசிக்கொள்ள வாய்ப்புகிடைக்காதபடி, கண்ணாடித்திரை போடப்பட்டிருக்கும். 

தேசத்தாய்

கறுப்பின விடுதலைக்கு  ஆதரவாகச்  செயல்பட்ட காரணத்துக்காக, வின்னியையும் சிறையில் அடைத்தது அந்த நாட்டு அரசின் பாதுகாப்புப் படை. அவரைச்  சித்ரவதை செய்தது; வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டார். வசதிகள் ஏதுமற்ற, தனித்த இடமான பிராண்ட்ஃபோர்ட்டுக்கு விரட்டியடிக்கப் பட்டார். அங்கேயும், அவரது வீட்டில் இரண்டு முறை வெடிகுண்டுகள் வெடித்தன. ஆனால், கறுப்பின விடுதலைக்காக அவர் தொடர்ந்து போராடிக்கொண்டேதான் இருந்தார். தென்னாப்பிரிக்கா அவரை ‘மதர் ஆஃப் தி நேஷன்’ என்று அழைத்தது.

நெல்சன் மண்டேலா, 27 ஆண்டுகள் கழித்து, 1990-ம் ஆண்டு சிறையிலிருந்து வெளிவந்தபோது, தென்னாப்பிரிக்காவே கொண்டாடியது. அந்தத் தருணத்தில் இருவரும் சேர்ந்து அளித்த பேட்டி ஒன்றில், நெல்சன் மண்டேலா, “தனித்து இருந்த இத்தனை ஆண்டுகளில், என் மனைவி மீதான காதல் இன்னும் வலுவடைந்திருக்கிறது” என்று கூறினார். ஆனால் வின்னி மண்டேலா, “இனவெறிகொண்ட இந்த அரசாங்கத்தின் பிடியில், எங்களின் போராட்டம் சிக்கித்  தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், என் உணர்வுகள் ஒன்றும் அவ்வளவு முக்கியமானதல்ல. நான் முழுவதும் சந்தோஷமாக இருக்கிறேன் என்பதைப்போல் நடிக்க முடியாது” என்றார் அதிரடியாக. இருவருக்குமான திருமண வாழ்க்கை விரிசலடையத் தொடங்கியது இங்கேதான் என்று கூறப்படுகிறது.

1996-ல் இருவரும் பிரிந்தனர். ஆனாலும் தன் பெயருக்குப் பின்னால், மண்டேலா  என்ற பெயரையே பயன்படுத்தினார் வின்னி. 1980-களில், கறுப்பின விடுதலைக்காக வின்னி உருவாக்கிய ‘மண்டேலா யுனைட்டட் ஃபுட்பால் கிளப் (Mandela United Football Club)’ என்ற ஆயுதக்குழுவின் வங்கி நடவடிக்கைகள் குறித்தும் 2003-ம் ஆண்டு, வங்கிக் கடன் வாங்கி மோசடி செய்தார் என்ற வழக்கில் சிக்கிய சர்ச்சை குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன.

ஆனாலும் தென்னாப்பிரிக்கக் கறுப்பின மக்களின் விடுதலைப் போராட்டத்தில் வின்னியின் பங்களிப்பு மகத்தான ஒன்று.