அலசல்
Published:Updated:

அரசை எதிர்த்தால் அமைச்சர் அந்தஸ்து!

அரசை எதிர்த்தால் அமைச்சர் அந்தஸ்து!
பிரீமியம் ஸ்டோரி
News
அரசை எதிர்த்தால் அமைச்சர் அந்தஸ்து!

சாமியார்களை வளைத்த பி.ஜே.பி

ரசுக்கு எதிராகப் போராடி வந்த ஐந்து சாமியார்களுக்கு, அமைச்சர் அந்தஸ்து தந்து பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் மத்தியப் பிரதேச பி.ஜே.பி முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான்.

இந்தியாவின் ஐந்தாவது பெரிய நதி நர்மதை. மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களின் வழியே பாயும் இந்த நதி, தேசத்தின் மற்ற நதிகளைப் போலவே சுற்றுச்சூழல் மாசுபாடுகள், மணல் அள்ளுதல் போன்ற பிரச்னைகளைத் தொடர்ந்து சந்தித்துவந்தது. அவற்றைத் தடுக்கவும், நர்மதையைப் பாதுகாக்கவும் கடந்த ஆண்டு நதியின் கரையில் ஆறு கோடி மரக்கன்றுகளை நட முடிவு செய்தது மத்தியப் பிரதேச அரசு. அதை பிரமாண்ட விழாவாக நடத்தி கின்னஸ் சாதனைக்கும் விண்ணப் பித்தது. அதில் ஊழல் நடந்துள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்தது. நர்மதையில் நடக்கும் மணல் கொள்ளையைத் தடுக்கவும் கோரிக்கைகள் எழுந்தன. அதை மக்கள் மத்தியில் பிரசாரமாகவே செய்துவந்தனர் இரண்டு சாமியார்கள். இந்த ஆண்டு இறுதியில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு இந்தப் பிரசாரம் சிக்கலாக மாறவே, குற்றம் சாட்டிய  சாமியார்களுக்கு அரசாங்கத்திலேயே இடமளித்துள்ளார் முதல்வர் சவுகான்.

நர்மதை ஆற்றைப் பாதுகாப் பதற்காக ஒரு கமிட்டியை அமைத்து, அதில் ஐந்து சாமியார் களை நியமித்துள்ளது ம.பி அரசு. ‘கம்ப்யூட்டர் பாபா’ எனப்படும் நம்தியோதாஸ் தியாகி, நர்மதானந்த் மகராஜ், ஹரிஹரானந்த் மகராஜ், பய்யு மகராஜ், பண்டிட் யோகேந்திர மஹந்த் ஆகியோர்தாம் அவர்கள். இந்த ஐவருக்குமே அமைச்சர்களுக்கு இணையான அரசு அந்தஸ்தும் (Minister of State) வழங்கப்பட்டுள்ளது. இதில், ‘கம்ப்யூட்டர்’ பாபா மற்றும் யோகேந்திர மஹந்த் ஆகிய இருவரும்தாம் கடந்த சில மாதங்களாக அரசுக்கு எதிராகக் கடும் பிரசாரம் செய்துவந்தவர்கள். 

அரசை எதிர்த்தால் அமைச்சர் அந்தஸ்து!

இதைக் கடுமையாகக் கண்டித்துள்ளன எதிர்க்கட்சிகள். “இது வெறும் அரசியல் லாபத்துக்கான நடவடிக்கை. மத அரசியல். நர்மதையின் பாதுகாப்பை முற்றிலுமாகப் புறந்தள்ளியிருக்கிறார் சிவ்ராஜ்சிங் சவுகான்” என்கிறது காங்கிரஸ். “வரவிருக்கும் தேர்தலை மனதில் வைத்து சிவ்ராஜ்சிங் சவுகான் நடத்தும் அரசியல் விளையாட்டு இது. நர்மதை ஆற்றைப் பாதுகாக்க இந்த சாதுக்கள் என்ன செய்ய முடியும்?” எனக் கேள்வி எழுப்புகிறார், நர்மதை நதிக்காக நீண்டகாலமாகப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் சமூகச் செயற்பாட்டாளர் மேதா பட்கர்.

ஒருபக்கம் இப்படி விமர்சனங்கள் எழுந்தாலும், இன்னொருபுறம் வழக்கம்போல இதனை கூலாக டீல் செய்துகொண்டிருக்கிறது பி.ஜே.பி. “நாங்கள் ஒன்றும் திருடர்களுக்கோ, ஊழல்வாதிகளுக்கோ பதவிகளைத் தந்துவிடவில்லை. அவர்கள் அனைவரும் சாதுக்கள் மட்டுமல்லர்; பல்வேறு சமூக நலப்பணிகளிலும் தொடர்ந்து ஈடுபடுபவர்கள்” என இதற்கு நியாயம் கற்பித்திருக்கிறார் பி.ஜே.பி-யின் மத்திய அமைச்சர் உமா பாரதி. “சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் சமூகத்தின் வளர்ச்சியில் பங்குபெறவேண்டும் என நினைக்கி றோம். அதனால்தான், எல்லாப் பிரிவினரையும் ஒன்றிணைத்து வளர்ச்சியில் பங்கேற்கச் செய்கிறோம்” என்று பதில்சொல்லி நழுவியிருக்கிறார் ம.பி முதல்வர்  சவுகான்.

அமைச்சர் அந்தஸ்து பெற்ற இந்த ஐந்து சாமியார்களில் ‘கம்ப்யூட்டர் பாபா’தான் ஹைலைட் நாயகர். எப்போதும் லேப்டாப், வைஃபை, ஸ்மார்ட்போன் என கேட்ஜெட்டுகளுடன் வலம்வருவதால் ‘கம்ப்யூட்டர் பாபா’ ஆனார். இவரின் மூளை கணினியை விடவும் புத்திக்கூர்மை மிக்கது. இதை யார் சொன்னது? வேறு யார், அவரேதான். பி.ஜே.பி ஆதரவாளரான இவர், 2014-ல் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட சீட் கேட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம், “பி.ஜே.பி-யும், ஆர்.எஸ்.எஸ்-ஸும் சாதுக்களை வஞ்சிக்கிறது. இதைத்தவிர வேறு எதையும் செய்ததே இல்லை’’ என்பதுதான். ஆனால், அப்போது சீட் கிடைக்கவில்லை.

அரசை எதிர்த்தால் அமைச்சர் அந்தஸ்து!

நர்மதை நதியின் பாதுகாப்பை வலியுறுத்தியும், ம.பி அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தவும் ‘நர்மதை ஊழல் யாத்திரை’ என்ற 15 நாள் ஊர்வலத்தை அறிவித்திருந்தார் இவர். தற்போது அரசு பதவி கிடைத்ததும், சட்டென எல்லாவற்றையும் கைவிட்டுவிட்டார். புதிய பொறுப்புகள் குறித்து ஊடகங்கள் கேட்டதற்கு, “எங்களைப் போன்ற சாதுக்களுக்கு எவ்வித அங்கீகாரமும் தேவையில்லை. இருந்தாலும், ஒரு போர் வீரனுக்குப் போரில் சண்டையிட ஆயுதங்கள் வேண்டுமல்லவா? எங்களுக்கு அளித்திருக்கும் இந்தப் பொறுப்புகளை அப்படித்தான் பார்க்கிறோம்” எனத் திருவாய் மலர்ந்திருக்கிறார் கம்ப்யூட்டர் பாபா.

முதலில் மாடலாக இருந்து பின்னர் சாமியாராக மாறியவர் பய்யு மகராஜ். ஆன்மிக அரசியல்தான் இவர் வழி. முன்னாள் குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல், சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, பாடகி லதா மங்கேஷ்கர் என்று பல பிரபலங்களுக்கு இவர்தான் ஆன்மிக ஆலோசகர். 2011-ம் ஆண்டு லோக்பால் மசோதாவுக்காக அன்னா ஹசாரே போராடியபோது, அரசுக்கும் ஹசாரேவுக்கும் இடையே பாலமாக இருந்தவர். சமூக அக்கறையுள்ள ஓர் ஆன்மிகவாதி என்பதுதான் இவரைப் பற்றிய பொதுவான பிம்பம். ‘‘நான் மக்கள் சேவகன். ஒரு சேவகன் மந்திரியாக முடியாது. இந்த மானுட சமுதாயத்துக்கும், நம் நாட்டுக்கும் இப்போதும் நான் சேவகன் மட்டுமே” என்பதுதான் இவரின் தன்னடக்க தத்துவம்.

பண்டிட் யோகேந்திர மஹந்த், முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர். நர்மதை விவகாரத்தில் மத்தியப் பிரதேச அரசாங்கத்துக்கு எதிராகக் குரல் எழுப்பியவர். நர்மதை நதிப் பாதுகாப்புத் திட்டத்தில் ஊழல் நடந்ததாகக் கூறி 45 மாவட்டங்களில் ஊர்வலம் சென்றவர். கம்ப்யூட்டர் பாபாவுடன் இணைந்து 15 நாள் போராட்ட ஊர்வலத்தில் போவதாக அறிவித்திருந்தார். தற்போது, அரசாங்கப் பொறுப்புகள் கிடைத்ததும் அதைக் கைவிட்டுவிட்டார்.

அரசை எதிர்த்தால் அமைச்சர் அந்தஸ்து!

ஐந்து சாதுக்களில் இந்த மூவர்தான் முக்கியமானவர்கள். அனுமன் ஜெயந்தி, ராம நவமி போன்ற பண்டிகை நாள்களில் யாத்திரைகளை நடத்தும் ஆன்மிகவாதிதான் நான்காவது சாதுவான நர்மதானந்த் மகராஜ். இன்னொரு சாதுவான ஹரிஹரானந்த் மகராஜ், ‘மாமி தேவி நர்மதே சேவா யாத்திரை’ என்ற 144 நாள்கள் நடைபெற்ற ஊர்வலத்தில் முக்கியப் பங்கு வகித்தவர். 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி, கடந்த ஆண்டு மே மாதம் வரை இந்த யாத்திரை நடைபெற்றது. மக்களிடையே சுற்றுச்சூழல் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கம்.

சாமியார்களுக்கு அமைச்சர் அந்தஸ்து கொடுத்ததை பி.ஜே.பி சீனியர் தலைவர்களே கடுமையாக விமர்சிக்கிறார்கள். முன்னாள் முதல்வரான பாபுலால் கவுர், ‘‘அரசின் ஊழலை எதிர்ப்பவர்களுக்கெல்லாம் அமைச்சர் அந்தஸ்து கொடுத்தால், எத்தனை பேருக்குக் கொடுப்பீர்கள்? கம்ப்யூட்டர் பாபா எப்படியாவது ராஜ்ய சபா எம்.பி ஆகலாம் எனத் துடித்தார். இப்போது எந்தக் கட்சியிலும் சேராமல், தேர்தலிலும் போட்டியிடாமல் அமைச்சர் அந்தஸ்து பெற்றுவிட்டார். இது எட்டாவது அதிசயம்’’ என்கிறார்.

‘‘சாமியார்கள் மத்தியில் பிளவு ஏற்படுத்தும் முயற்சி இது. பி.ஜே.பி சாமியார்கள், பி.ஜே.பி-யை எதிர்க்கும் சாமியார்கள் என, சாமியார்கள் இனி இரண்டு அணிகளாகப் பிரிந்துவிடுவார்கள்’’ என்கிறார், பி.ஜே.பி-யைச் சேர்ந்த ராஜ்ய சபா எம்.பி ரகுநந்தன் சர்மா.

ஆன்மிகமும் அரசியலும் தள்ளி இருப்பதே நல்லதுபோல!

- ஞா.சுதாகர்